தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அண்மையில் உள்ள காணியில் இருந்து அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடலாம் என மல்லாகம் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
குறித்த விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றையதினம் தையிட்டி விகாரைக்கு அண்மையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது இராணுவம் மற்றும் பொலிஸாரால் வீதிமறியல் போடப்பட்டது. ஆகையால் வெளியே உள்ளவர்கள் உள்ளே போகமுடியாத, உள்ளே உள்ளவர்கள் வெளியே வர முடியாத நிலை காணப்பட்டது.
அந்தவகையில் உணவுகளோ மருந்து பொருட்களோ உள்ளே உள்ளவர்களுக்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.
அதனையடுத்து இன்று காலை மருந்து பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை உள்ளே கொண்டு செல்ல முயற்சித்த ஐவரை பலாலி பொலிஸார் கைது செய்து மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தினர். இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களுக்காக சட்டத்தரணி சுகாஷ் நீதிமன்றத்தில் ஆஜரானார். இதன்போது அவர்கள் ஐவரையும் மல்லாகம் நீதிமன்றம் பிணையில் விடுவித்தது.
பின்னர் மல்லாகம் நீதிமன்ற நீதிவான் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலைமையை ஆராய்ந்தார். அதன்பின்னர் விகாரைக்கு முன்னால் உள்ள காணியில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடலாம், வெசாக் தினத்துக்கு வழிபாடு செய்வதற்கு வருபவர்களுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது என்று கூறினார்.
அதன்பின்னர் வீதி மறியலுக்கு வெளியே இருந்து போராடியவர்கள் வீதி மறியலுக்கு உள்ளே சென்று அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.