நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின் சிறப்புரிமைகளை மீறியும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் உரிமைகளை மீறியும் பொலிசார் நடந்து கொண்டது கண்டனத்துக்குரியது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சி தலைவரான, நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில்,
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது சிவில் உடையில் நின்ற பொலிசார் தாக்குதல் நடத்தியதுடன், அநாகரிகமான வார்தைகளை பயன்படுத்தி திட்டியதுடன், துப்பாக்கியையும் நீட்டி மிரட்டல் விடுத்துள்ளனர்.
இலங்கை அரசியலமைப்பின் படி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குள்ள சிறப்புரிமைகளை மீறி,பொலிஸ் உத்தியோகத்தர்கள் செயற்பட்டுள்ளார்கள். இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் 70 வருடங்களுக்கு மேலாக நடத்தும் அரசியல் உரிமை போராட்டத்தின் நியாயத்தை மீளவும் ஒருமுறை உறுதி செய்துள்ளது இந்த சம்பவம்.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கே பாதுகாப்பற்ற சூழ்நிலையும், மறுவளமாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அரசியலமைப்பு வழங்கிய சிறப்புரிமைகளை மீறி சாதாரண பொலிஸ் உத்தியோகத்தர்களே கொலை மிரட்டல் விடுவதும், அவர்களை அதிகாரிகள் பாதுகாப்பதும் இலங்கைத்தீவின் இன ஒடுக்குமுறைக்கு மேலுமொரு தெளிவான சான்றாகும்.
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின் சிறப்புரிமைகளை மீறியும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் உரிமைகளை மீறியும் பொலிசார் நடந்து கொண்டது கண்டனத்துக்குரியது.
இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட பொலிசார் உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றுள்ளது.