ரணிலின் பல்குழல்பீரங்கித்தாக்குதல் – அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்

கடந்த 8 ம் திகதி வியாழக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் தொல்லியல் திணைக்களப்பணிப்பாளர் பேராசிரியர் அனுரமனதுங்கவிற்கும் இடையே ஏற்பட்ட விவாதம் பணிப்பாளரின் இராஜினாமாவில் முடிந்துள்ளது. கடந்த 12 ம்  திகதி திங்கட்கிழமை சம்பந்தப்பட்ட விவாதம் காணொளி மூலம் ஊடகங்களில் வெளிவந்ததைத் தொடர்ந்தே பேராசிரியர் அனுரமனதுங்க இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை அவர் தனது திணைக்களத்திற்கு பொறுப்பான புத்தசாசன சமய, மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் செயலாளரிடம் கையளித்திருக்கின்றார்.

8 ம் திகதி ஜனாதிபதிக்கும் தமிழரசுக்கட்சிகளின் பிரதிநிதிகளுக்குமிடையே  இடம் பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விவாதம் இடம் பெற்றுள்ளது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொல்பொருட் திணைக்களத்தினால் சுவீகரிக்கப்பட்ட 229 ஏக்கர் காணியை விடுவிப்பதற்காக ஜனாதிபதி உத்தரவாதம் தந்தும் விடுவிக்கப்படவில்லை எனக் கூறிய போது இந்த விவாதம் ஆரம்பமானது.

சாள்ஸ் நிர்மலநாதனின் கேள்விக்கு பணிப்பாளர் “எனக்கு அந்தக்காணியை விடுவிப்பதில் சிக்கல் காணப்படுகின்றது” என்று கூறிய போது அதனை மறுத்துரைத்த ஜனாதிபதி இக்காணியை விடுவிப்பது அமைச்சரவையின் கொள்கை அதனை நிறைவேற்ற வேண்டியது திணைக்களத்தின் கடமை ஆகும். அமைச்சரவை தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு காரணங்களை கூறிக்கொண்டிருக்கக் கூடாது  என கடும் தொனியில் குறிப்பிட்டதுமல்லாமல் விகாரை ஒன்றை அமைப்பதற்கு 275 ஏக்கர் எடுத்தால் அது மகா விகாரையை விட பெரிதாகி விடும். மகாவிகாரை, தியவதனராமய, அயயகிரி விகாரை, ஆகியவற்றை இணைத்தால் 100 ஏக்கரே காணப்படும் இவற்றை விட பாரிய விகாரையை அமைப்பதற்காகவா நடவடிக்கை எடுத்துள்ளீர்? நீங்கள் எனக்கு வரலாறு கற்பிக்க முயற்சிக்கிறீர்களா? அல்லது நான் உங்களுக்கு வரலாற்றை கற்பிக்க வேண்டும் என விரும்புகின்றீர்களா? என்றெல்லாம் கேள்விகளை எழுப்பினார்.

கிழக்கு மாகாண தொல்லியல் ஆக்கரமிப்புக்கள் பற்றி மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் 3000 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட்டுள்ளதாக கூறிய போது திரியாயவிற்கு 3000 ஏக்கர் காணி ஏன் தேவைப்படுகிறது திரியாய என்பது விகாரை அல்ல முன்னய காலங்களில் அது துறைமுக மையமாகும் வரலாற்று சிறப்பு மிக்க இந்துக் கோவில் இங்கு இருந்தது. தமிழ் பௌத்தர்கள் அங்கு வாழ்ந்திருக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார். தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்பது இங்கு முக்கியமாக உள்ளது. தமிழ் பௌத்தர்கள் சிங்கள பௌத்தர்கள் பின்பற்றிய தேரவாத பௌத்தத்தை பின்பற்றவில்லை மாறாக மகாஜன பௌத்தத்தையே பின்பற்றினர் என வரலாற்று நூல்கள் கூறுகின்றன. பேராசிரியர் சுனில் ஆரியரத்ன இது தொடர்பாக “தமிழ்பௌத்தய” என்ற நூலையே எழுதியிருந்தார். மனோகணேசன் அரச கரும மொழிகள் அமூலாக்கல் அமைச்சராக இருந்தபோது அமைச்சின் சார்பில் அதனை மறுபிரசுரம் செய்து சிங்கள பாடசாலைகளுக்கும்  விகாரைகளுக்கும் இலவசமாக அனுப்பி வைத்தார்.
பணிப்பாளரின் இராஜினமாவிற்கான எதிர்வினை சிங்களப்பிரதேசத்தில் இன்னமும் பெரிதாக எழுச்சியடையவில்லை.  பௌத்த பிக்குகள் மட்டும் எதிக்குரலை எழுப்பியுள்ளனர். மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தொல்பொருள் முக்கியத்துவம் பற்றி கருத்துக்களை தெரிவிப்பதற்கு ஜனாதிபதிக்கு அருகதையில்லை எனக்கூறியதோடு அஸ்கீரிய மல்வத்த பீடங்களின் மகாநாயக்கர்களைச் சந்தித்து கலந்தாலோசனையும் நடாத்தியுள்ளார்.

சிங்கள அரசியற்கட்சிகளில் பிரதான கட்சிகள் எதுவும் அபிப்பிராயங்களைத் தெரிவிக்கவில்லை. விமல்வீரவன்சவின் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பலவும் மட்டுமே கருத்துக்களைக் கூறியுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தி , மொட்டுக்கட்சி , ஜே.வி.பி.என்பன இன்னமும் வாயைத்திறக்கவில்லை. ரணிலின் இரண்டு கக்திகள் மொட்டுக்கட்சி; மீது தொங்கிக்கொண்டிருப்பதனால் இப்போதைக்கு வாயைத் திறக்கமாட்டார்கள் என எதிர்பார்க்கலாம். போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச அழுத்தமும், பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்து விடுவார் என்ற அச்சமுமே அவ் இரண்டு கக்திகள் பிக்குமார்களின் எதிர்ப்பு அதிகமாக இருந்தால் ஒரு சடங்கிற்கு சிறியளவிற்கு வாயைத்திறக்கலாம். ஐக்கிய மக்கள் சக்தி தமிழ் ஆதரவையும் வேண்டி இருப்பதால் அடக்கி வாசிக்கவே முற்படும்;. ஜே.வி.பி. மதவிவகாரங்களில் சற்று ஒதுங்கி நிற்கவே பார்க்கும் எனவே பாரிய எதிர்;ப்புக்கள் வரும் என்று எதிர்பார்க்க முடியாது. மறுபக்கத்தில் தீவிர தேசியவாதிகளான தமிழ்த்தேசிய மக்களின் முன்னணியினர் மீது தொடர் நடவடிக்கைகளை படையினர் எடுத்து வருவதால் அதுவும் எதிர்ப்புக்களை மழுங்கச் செய்யும்.
ஜனாதிபதி ரணிலைப் பொறுத்தவரை இந்த விவாதத்தில் ஒரு கல்லில் பல மாங்காய்களை விழுத்தியுள்ளார் என்றே கூறலாம். ஒரு வகையில் பல்குழல்பீரங்கித்தாக்குதல் எனலாம். அவர் உரையாடல் காணொளியினை கசிய விட்டதும் ஒரு வித தாக்குதல் நோக்கத்தில் தான்.

அவருடைய முதலாவது வெற்றி தமிழ்த்தேசிய மக்கள் முண்ணணி மீது நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டே பணிப்பாளர் மீது கடும் தொனியில் குற்றச்சாட்டுக்களை வீசியமையாகும். இதன் மூலம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியையும் அடக்கி பெருந்தேசியவாதிகளையும் அடக்கியுள்ளார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு அதன் எல்லையும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைவர்களைக் கைது செய்வதற்கும் தயங்காது என்பது சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

தமிழரசுக்கட்சியைப் பொறுத்தவரை  பல வெற்றிகள் ரணிலுக்கு கிடைத்துள்ளது எனலாம். அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்ததன் மூலம் கஜேந்திரகுமார் கைதினால் ஏற்பட்ட அரசியல் எழுச்சியில் பங்குபற்றுவதில் இருந்து தமிழரசுக்கட்சியைத் தடுத்திருக்கின்றார். அதே வேளை தனித்தனியாகக் கையாண்டு கூட்டமைப்பின் பிளவுகளையும் அகலமாக்கியுள்ளார்;. மறுபக்கத்தில் ஒருங்கிணைந்த அழுத்தத்தையும் இல்லாமல் செய்திருக்கின்றார். தானே கடும் தொனியில் பணிப்பாளரை கண்டித்ததன் மூலம் கூட்டமைப்பினர் அதிகம் பேசுவதையும் நிறுத்தியிருக்கின்றார்.

ஜனாதிபதிக்குக் கிடைத்த மூன்றாவது வெற்றி தனது நிகழ்ச்சி நிரலுக்குள் வராத தனது கட்டளைகளுக்கு மதிப்பு கொடுக்காத பணிப்பாளரை பதவியிலிருந்து அகற்றியமையாகும். ரணிலும் பெருந்தேசியவாதி தான் அவர் பெருந்தேசிய வாதத்தின் லிபரல் முகத்தைக் கொண்டவர். ஒரு வகையில் வடிகட்டிய பெருந்தேசியவாதி எனலாம். லிபரல் முகமுடையோர் எப்போதும் லிபரல் முகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே செயற்பாடுகளை முன்னெடுப்பர். தவிர ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளையும் அவர் எதிர்பார்க்கின்றார். இதனால் சிறிய சிறிய விவகாரங்களை அவர்கள் கணக்கெடுப்பதில்லை. நினைவு கூரல் பௌத்த மதத்தை ஆக்கிரமிப்புக்கருவியாக பயன்படுத்துதல்; போன்றவற்றை லிபரல் முகமுடையோர் பெரிய விவகாரங்களாக பார்க்க மாட்டார்கள். ஆனால் அதிகாரப்பகிர்வு என வருகின்ற போது அவர்களின் கோர முகம் வெளியே தெரியும். சந்திரிக்காவின் தீர்வுப் பொதி விவகாரத்தில் ரணிலின் கோர முகம் அப்பட்டமாக வெளியில் தெரிந்தது. ஆக்கிரமிப்புக்கருவியாக முதலில் சிங்களக்குடியேற்றங்களைப் பயன்படுத்தியவர்கள் இவர்களின் மூதாதையர்கள் தான்.

தொல்லியல் திணைக்கள பணிப்பாளரின் பச்சை இனவாத நடவடிக்கைகள் ரணிலின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிரானதோடு அவருக்கு பின்னால் நின்று அவரை வழிநடாத்துகின்ற இந்தோ-பசுபிக் மூலோபாயக்காரர்களின் நிகழ்ச்சி நிரலுக்குக்கும் எதிரானது. தவிர பெருந்தேசியவாதம் மேற்குலக எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு , தமிழின எதிர்ப்பு என்கின்ற மூன்று தூண்களிலேயே கட்டியெழுப்பப்பட்டுள்ளது. எனவே பெருந்தேசியவாதத்தின் இனவாத முகத்தை சற்றுக்கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க வேண்டிய தேவை ரணிலுக்கும் உண்டு. இந்தோ – பசுபிக் மூலோபாயக்காரர்களுக்கும் உண்டு இந்த விவகாரத்தில் ரணிலின் வெற்றி மகிந்தர் அணி விகாரைகளில்; தஞ்சம் அடைவதை தடுத்தமை தான். மகிந்தர் ஏதாவது இசகுபிசகு பண்ணினால் ரணில் மகிந்தருடன் மோத மாட்டார். ஏனெனில் ரணிலுக்கு அந்தப்பாரத்தைக் கொடுக்காமல் அமெரிக்கா தானே அதனைக் கையில் எடுத்துக் கொள்ளும்.

ரணிலின் நான்காவது வெற்றி பணிப்பாளரின் பதவி விலகலினால் ஏற்பட்ட எதிர்வினையைப் பிக்குமார்களுடன் மட்டும் மட்டுப்படுத்தியமை ஆகும். அரசியல் கட்சிகள் இல்லாமல் பிக்குமார்களினால்; அடையாளப் போராட்டங்கள் நடாத்தலாமே தவிர பேரெழுச்சிகளை மேற்கொள்ள முடியாது. வடக்கு கிழக்கில் பணியாற்றும் பிக்குமார் தமது விகாரைக்கு எதிர்ப்பு வரும் என்பதற்காக தென்னிலங்கை பிக்குமார் நடாத்தும் போராட்டங்களில் பங்குபற்றுவார்கள் என எதிர்பார்க்க முடியாது. விகாரைகள் கட்டுவதற்கு பிக்குமார்களுக்கும் , தொல்லியல் திணைக்களத்திற்கும் வெளித்தரப்பு பணம் வழங்குகின்றது. அந்த வெளித்தரப்பு பற்றிய அச்சமும் ரணிலுக்கு உண்டு. அந்த வெளித்தரப்பு சீனாவாக இருக்கலாம் என சந்தேகமும் சிலருக்கு உண்டு.

இது விடயத்தில் பிக்குமார் கடும் எதிர்ப்பைக் காட்டினாலும் ரணிலுக்கு வெற்றிதான். எவற்றையும் காட்டாமல் விட்டாலும் வெற்றி தான். எதிர்ப்பு பெரிதாகவரின் அதனைக்காட்டியே சர்வதேச அழுத்தங்களிலிருந்தும் தமிழ்த்தரப்பின் அழுத்தங்களிலிருந்தும் அவர் நழுவி விடுவார். “எதிர்ப்பு கடினமாக உள்ளது என்னால் எதுவும் செய்ய முடியாது” என கையை விரித்து விடுவார். எதிர்ப்புக்கள் எதுவும் வராது விடின் தமிழ் மக்கள் மத்தியில் அவர்; ஹீரோவாகி விடுவார். இது தேர்தலில் வலுவான அறுவடையை அவருக்கு வழங்கும்.

இப்போ எழும் கேள்வி பௌத்த ஆக்கிரமிப்புக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கும்? என்பதே! எதுவும் பெரிதாக நடப்பதற்கு வாய்ப்புக்கள் இல்லை. வடக்கு கிழக்கில் பௌத்த ஆக்கிரமிப்பு சற்று குறையலாம். சர்வதேச நாணய நிதியம் இராணுவத்தின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என நிர்ப்பந்தித்து வருவதால் பௌத்த ஆக்கிரமிப்பை குறைக்ககூடும் எனினும் ஆக்கிரமிப்புக்கள் வேறு வகைகளில் தொடரலாம்.

கட்டமைப்புசார் இன அழிப்பு என்பது ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்களின் கொள்கை அல்ல. அது இலங்கை அரசின் கொள்கை. தமிழ் மக்கள் ஒரு தேசமாக இருப்பதை தவிர்ப்பதே அதன் இலக்கு. எனவே ஆக்கிரமிப்புக்கள் வேறு வகைகளில் தொடர்வதற்கே வாய்ப்புக்கள் உண்டு. இதனை முகம் கொள்வதற்கு தமிழ்த்தரப்பிடம் பரந்த வேலைத்திட்டம் இருக்க வேண்டும்.

ரணில் இந்த விவகாரத்தின் மூலம் தமிழ்த்தரப்பிற்கும் பெரிய செய்தியை சொல்லியிருக்கின்றார். ஒருங்கிணைந்த அணுகு முறை இல்லாவிட்டால் நீங்கள் அனைவரும் அழிக்கப்படுவீர்கள் என்பதே இந்தச் செய்தியாகும்.
இந்தச் செய்தியை உரிய வகைகளில் தமிழ்த்தரப்பு புரிந்து கொள்ளாவிட்hல் தமிழ் மக்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது.

Recommended For You

About the Author: Editor Elukainews