மலையகம் 200” என்ன செய்ய வேண்டும்? அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்

“மலையகம் 200” நிகழ்வுகள் பல இடங்களில் நடாத்தப்படுகின்றன. மலையகம், கொழும்பு, யாழ்ப்பாணம் என்பவற்றிற்கு அப்பால் புலம்பெயர் நாடுகளிலும் இந்தியாவிலும் கலந்துரையாடல்கள் இடம் பெற்றுள்ளன. கொழும்பு தமிழ்ச்சங்கம் சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக புலமைசார்நிலையில் பத்து நிகழ்வுகளை நடாத்தியுள்ளது. மலையகத்தின் அரசியல், பொருளாதார , சமூக கலாச்சார இலக்கிய விவகாரங்கள் அங்கு மீள்வாசிப்பு செய்யப்பட்டுள்ளன. நண்பர் மதுசூதனன் இதனை வெற்றிகரமாக ஒழுங்குபடுத்தி இருந்தார். மலையகப் புலமையாளர்களும், வடக்கு கிழக்கு புலமையாளர்களும் , வளவாளர்களாக பங்குபற்றியிருந்தனர். ஆரோக்கியமான விவாதங்கள் இடம் பெற்றன . மலையக சமூகத்தவர்கள் இந்நிகழ்வுகளில் அதிகமாகப்பங்குபற்றியிருந்தனர். எனக் கூற முடியாது. வடக்கு – கிழக்கைச் சேர்ந்தவர்களே அதிகளவில் பங்குபற்றியிருந்தனர். அந்த நிகழ்வுகளை ஆவணப்படுத்தாதது   பெருங்குறைபாடே! கொழும்பு தமிழ் சங்கம் எதிர்காலத்தில் ஆவணப்படுத்தலிலும் கவனம் செலுத்த வேண்டும். கொழும்பில் பெருவாரியாக மலையக சமூகத்தவர்கள் வசிக்கின்ற போதும் இவற்றில் பங்குபற்றாமை கவலைக்குரியதே!
இந்தத் தடவை “மலையகம் 200” நிகழ்வில் முக்கிய விடயம் யாழ்ப்பாண சமூகத்தலைவர்கள் இதில் அக்கறை செலுத்தியமை தான். இது வரை நான்கு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. சிறகுகள் அமைப்பு யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மலையக மாணவர் ஒன்றியத்துடன் சேர்ந்து நல்லூர் பிரதேச சபை மண்டபத்தில் ஒரு நிகழ்வை நடாத்தியிருந்தது. கிராமிய உழைப்பாளர் சங்கம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் கலைப்பண்பாட்டு நிகழ்வுகளுடன் இணைந்து ஒரு நிகழ்வை நடாத்தியிருந்தது. மலையகத்திலிருந்து தொழிலாளர்களும் அதில் பங்கேற்றிருந்தனர். நூல் வெளியீட்டுடன் ஒரு நிகழ்வு தந்தை செல்வா அரங்கத்தில் நடந்திருக்கின்றது. இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம் இம் மாதம் 23, 24, 25 ம் திகதிகளில் கண்காட்சியுடன் கூடிய நிகழ்வை  நடாத்தியுள்ளது. 23, 24, 25 ம் திகதிகளில் யாழ்ப்பாணம் றிம்மர் மண்டபத்தில் “புறக்கணிக்கப்பட்ட மலைகள”; , “தேயிலை சாயம்” என்கின்ற தலைப்புக்களில் புகைப்படக் கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. “புறக்கணிக்கப்பட்ட மலைகள்” என்ற தலைப்பில் கிசோகுமார் புகைப்படக்கண்காட்சியை ஒழுங்கு செய்திருந்தார். “தேயிலை சாயம்” என்ற தலைப்பில்   மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் புகைப்படக்கண்காட்சியை ஒழுங்கு செய்திருந்தது. காலை 9.00 மணியிலிருந்து இரவு 7 மணிவரை பார்வையிட வசதிகள் செய்யப்பட்டன.
25 ம் திகதி ஞாயிறு மாலை கருத்தரங்கும் டிக்கோயா நுண்கலைக்கல்லூரியின் கலை நிகழ்வுகளும் நடைபெற இருக்கின்றன. கருத்தரங்குகளில் அருட்பணி சுஜிதர் சிவநாயகம் , சி.அ.யோதிலிங்கம், நிலாந்தன் ஆகியோர் உரையாற்றவுள்ளனர். இவற்றிற்கு புறம்பாக கிராமிய உழைப்பாளர் சங்கம் உழைக்கும் மக்கள் வாழ்கின்ற கிராமங்களில் “மலையகம் 200” நிகழ்வை கலை, பண்பாட்டு நிகழ்ச்சிகளுடன் நடாத்த இருக்கின்றது. கலாநிதி சிதம்பரநாதன் தனது பண்பாட்டு மறுமலர்ச்சிக் கூடத்தில் அதன் கலைஞர்களுடனும், யாழ்பல்கலைக்கழக மாணவர்களுடனும், யாழ்சிவில் அமைப்புக்களுடனும் இணைந்து யூலை 15 ம் திகதி “மலையகம் 200” நிகழ்வை நடாத்த இருக்கின்றார்.
யாழ்ப்பாணப்பல்கலைக்கழக அரசறிவியல்துறை, அரசறிவியல்துறை பழைய மாணவர் சங்கத்துடன் இணைந்து தொடர்ச்சியாக மலையகத்தின் சமூக பொருளாதார , அரசியல் விடயங்களை உள்ளடக்கிய கருத்தரங்குகளை ஆவணி முதல் வாரத்திலிருந்து நடாத்த இருக்கின்றது.
யாழ்ப்பாணத்தில் இடம் பெறுகின்ற இந்த நிகழ்வுகள் மலையகம் பற்றிய மீள் வாசிப்பை புலமை நிலையில் நின்று பார்ப்பதற்கு உதவுகின்ற அதே வேளை மலையகத்திற்கும் வடக்கு –கிழக்கிற்கும் இடையே ஒரு வலுவான பாலத்தைக் கட்டுவதற்கும் உதவியாக இருக்கும் என நம்பலாம்.
“மலையகம் 200” நிகழ்வை நடாத்துவது என்பது மலையகத்தின் கடந்தகால வளர்ச்சியை மறுபரிசீலனை செய்வதுடன் எதிர்கால வளர்ச்சிக்கு திட்டமிடுவதாகவும் இருக்க வேண்டும். மலையக மக்களின் மேல்நிலையாக்கத்தை மலையக மக்களினால் மட்டும் மேற்கொள்ள முடியாது. வெளித்தரப்புக்களின் ஒத்துழைப்பும் , ஆதரவும் ஒரு குறிப்பிட்டகாலத்திற்கு தேவை. எண்ணிக்கையில் குறைந்த, பொருளாதார ரீதியாக பலவீன நிலையில் உள்ள , தொடர்ச்சியாக ஒடுக்கு முறைகளைச் சந்திக்கின்ற மக்கள் வெளித்தரப்பின் ஒத்துழைப்பு இல்லாமல் முன்னேறுவது கடினம். குறைந்தது ஐந்து வருடங்களுக்காவது இந்த ஒத்துழைப்பு தேவை. அதன் பின்னர் மலையக மக்களே தமது சொந்தக்காலில் தாங்களாகவே நிற்கத் தொடங்குவர்.
200 வருடங்கள் மிக நீண்டவை தான். 1823 இலிருந்து 2023 வரை இது வளர்ந்திருக்கின்றது. இந்த நீண்ட காலத்தில் பாரிய மாற்றங்கள் நடந்திருக்க வேண்டும். ஆனால் மலையகத்தைப் பொறுத்தவரை சொற்ப மாற்றங்களே இடம் பெற்றுள்ளன. கற்றோர் சமூகம் ஒன்று அங்கு எழுச்சியடைந்திருக்கின்றது. குறிப்பாக ஆசிரிய சமூகம் ஒரு சமூக சக்தியாக எழுச்சியடைந்திருக்கின்றது இது முக்கிய மாற்றம் தான். இது கீழ்மட்டநடுத்தரவர்க்கம் ஒன்று உருவாகுவதை சாத்தியப்படுத்தியுள்ளது.
தொழிற்சங்க அரசியலோடு கட்டுப்பட்டிருந்த மலையக அரசியல் அதிலிருந்து விடுபட்டு தேசிய இன அரசியல் என்ற ஒரு களத்திற்கு வந்திருக்கின்றது. மலையக மக்களின் அடையாளம் எது? மலையக மக்கள் சிறுபான்மை இனமா? தேசிய இனமா? மலையகப் பிரச்சினை அடையாளப்பிரச்சினையா? இறைமைப்பிரச்சினையா மலையகத்திற்கான தீர்வு சமூக ரீதியான அதிகாரப் பகிர்வா? நில ரீதியான அதிகாரப்பகிர்வா? போன்ற விவாதங்கள் இடம் பெறத் தொடங்கியுள்ளன இளைஞர்கள் மத்தியில் “மலையகம் எமது தாயகம்” “நாம் ஒரு தேசியம்” என்ற கோசங்கள் வலுப்பெறத் தொடங்கியுள்ளன.
இம்மாற்றங்கள் அரசியல் சமூகம் ஒன்று எழுச்சியடைந்து வருவதை வெளிக்காட்டியுள்ளது. அதே வேளை கட்சி அரசியலில் இரு கட்சி முறைக்கும் வழிகளைத் திறந்து விட்டிருக்கின்றது. மலையக அரசியலை சர்வதேச மட்டத்தில் பேசு பொருளாக்குவதற்கு இரு கட்சி முறை அதிகம் உதவக்கூடியதாக இருக்கும். மலையகத்தை உலகத்திற்கும் , உலகத்தை மலையகத்திற்கும் கொண்டு வராமல் மலையகத்தில் முன்னேற்றங்களைக் காண முடியாது.
யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் மட்டும் 400 க்கு மேற்பட்ட மலையக மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். ஏனைய பல்கலைக்கழகங்களையும் இணைக்கின்ற போது இத்தொகை இரட்டிப்பாகலாம். இதை விட கல்விக்கல்லூரிகள் , ஆசிரியர் கலாசாலைகள் என்பவற்றில் கற்கின்ற மாணவர்களையும் இணைத்துப் பார்த்தால் வளர்ச்சி அதிகமானதாக இருக்கும். ஆனாலும் மலையக மக்களின் தொகையோடு ஒப்பிடுகின்ற போது இது போதுமானது எனக் கூற முடியாது. கணித விஞ்ஞானக்கல்வி மலையகத்தில் ஒரு சில இடங்களைத்தவிர ஏனைய இடங்களில் பலவீனமானதாக உள்ளது. ஏனைய இனங்களுக்கென பல்கலைக்கழககங்கள் உள்ளன. மலையக மக்களுக்கு இன்னமும் கிடைக்கவில்லை.
கொழும்பு கம்பஹா மாவட்டத்தின் வத்தளை ,மாபொல, உணுப்பிட்டி பிரதேசங்கள் மலையகத்தின் டயஸ்போறாவாக மாறியுள்ளன. இது மலையகத்திற்கு வெளியே மலையகப்பிரச்சினைகளை பேசுபொருளாக்குவதற்கு உதவியுள்ளது.
மறுபக்கத்தில் மலையகம் இன்னமும் அரச நிர்வாகத்தின் கீழ் முழுமையாகக் கொண்டு வரப்படவில்லை. மலையகக் கல்வி முழுமையாக அரச நிர்வாகத்தின் கீழ் வந்தாலும் ஏனைய நிர்வாகப் பிரிவுகள் வந்து விட்டது எனக் கூற முடியாது. தற்போதும் முகவரியில்லாத மக்களாகவே மலையக மக்கள் இருக்கின்றனர். உள்;ராட்சி நிர்வாகம் பெருந்தோட்டங்களிலும் செயற்படலாம் எனத்தீர்மானிக்கப்பட்ட போதும் பெருந்தோட்டங்களில் வீதிகளை அமைப்பதற்கே தோட்ட கம்பனிகள் தடையாக உள்ளன. சுகாதாரத் துறையும் முழுமையாக கொண்டுவரப்படவில்லை . அரை அடிமை முறை கொண்ட பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழேயே மலையக மக்கள் வாழ விடப்பட்டுள்ளனர்.
மலையக மக்கள் இலங்கைத்தீவில் வசிக்கத் தொடங்கி 200 வருடங்களாகியும் காணியற்ற , வீடற்ற சமூகமாகவுள்ளது. மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்த அதே காலப்பகுதியில் தமிழ் நாட்டிலிருந்து ஆயிரக்கணக்காணவர்கள் மலேசியா, சிங்கப்பூர் தென்னாபிரிக்கா, மொரீசியஸ், பிஜித்தீவுகள் என்பவற்றிற்கும் இடம் பெயர்ந்திருந்தனர். அவர்கள் அந்நாட்டுப்பிரஜைகளாக உள்வாங்கப்பட்டு உரிமைகளைப் பெற்று வளர்ச்சியடைந்த நிலையில் உள்ளனர். அந்நாடுகளில் அவர்களைக் குடியேற்றிய பிரித்தானிய அரசும் அவர்கள் உரிமைகளைப் பெறுவதற்கு அழுத்தங்களைக் கொடுத்திருந்தது. இலங்கையில் மட்டும் இந்நிலைமை தலைகீழாக உள்ளது. பிரித்தானியா மலையக மக்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. மலையக மக்கள் விவகாரத்தில் அது தனது பொறுப்பற்றதனத்தை வெளிக்காட்டியுள்ளது.
மலையக மக்களின் 200 வருட வாழ்வை நினைவு கூரும் போது இந்தப் போதாமைகளை நீக்குவது நோக்கி கவனங்களைக் குவிக்க வேண்டும். இலங்கைப் பிரஜை என்ற அந்தஸ்தை பெறுவதற்கே 40 வருடங்களுக்கு மேல் அவர்கள் போராட வேண்டியிருந்தது. எனவே விழிப்பு நிலை மிகவும் முக்கியம.; பரந்துபட்ட ஒத்துழைப்பு அவர்களுக்கு தேவை.
எண்ணிக்கையில் குறைந்த ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் தங்களது அக ஆற்றலை மட்டும் வைத்துக் கொண்டு முன்னேற முடியாது. புற ஆற்றலையும் வளர்க்க வேண்டும் முன்னரே கூறியது போல புற ஒத்துழைப்புக்கள் இல்லாமல் புற ஆற்றலை வளர்க்க முடியாது.
மலையக மக்களைப் பொறுத்தவரை மலையகத்திலும், மலையகத்திற்கு வெளியேயும் புலம்பெயர் நாடுகளிலும் வாழும் மலையக வம்சாவளியினர் அடிப்படைச்சக்திகள். இந்த அடிப்படைச்சக்திகளை ஒரு தேசிய இனமாகத்திரட்ட வேண்டும். வடகிழக்குத்தமிழர்கள் , தமிழ்நாட்டுத்தமிழர்கள் உட்பட்ட உலகத்தமிழர்கள் நல்ல துணைச்சக்திகள். இவற்றை ஒருங்கிணைக்க வேண்டும். சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகள் உட்பட உலக முற்போக்கு ஜனநாயக சக்திகள் நல்ல நட்புச்சக்திகள். இவர்களையும் மலையக மக்களுடன் ஒருங்கிணைக்க வேண்டும். மலையகம் ஒரு சுற்றிவளைக்கப்பட்ட பிரதேசமாக இருப்பதனால் சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகளின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். துரதிஸ்டவசமாக சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகள் பெருந்தேசியவாத கருத்து நிலை இறுக்கத்திற்குள் இருந்து விடுபட முடியாமல் தவிப்பது மலையக மக்களின் வளர்ச்சியிலும் தடங்கல்களை ஏற்படுத்தியிருக்கின்றது. இடது சாரி இயக்கங்கள் பெருந்தேசியவாதத்திற்கு பலியானமை மலைய மக்களின் நிலையையும் வெகுவாகப் பலவீனப்படுத்தியுள்ளது
இவ்வாறு நோக்கும் போது தான் மலையகம் – வடக்கு கிழக்கு உறவு முக்கியமாகின்றது. ஒரே நாட்டிற்குள் வாழும் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் என்ற வகையிலும் , புற ஒத்துழைப்புக்களை வேண்டி நிற்கின்றவர்கள் என்ற வகையிலும், இனம், மொழி என்கின்ற தொப்புள் கொடி உறவினால் பிணைக்கப்பட்டவர்கள் என்ற வகையிலும் , வடக்கு கிழக்கில் மலையக மக்களும், மலையகத்தில் வடக்கு  கிழக்கு மக்களும் வாழ்கின்றனர் என்ற வகையிலும் இந்த உறவு முக்கியமானது. ஒரு தரப்புக்கு மற்றைய தரப்பு துணையாக இருக்க வேண்டியது அவசியமாகின்றது.
மலையகம் – வடக்கு கிழக்கு உறவு வரலாற்று ரீதியாக எவ்வாறு இருந்தது என்பதை அடுத்த வாரத்தில் பார்ப்போம்.

Recommended For You

About the Author: Editor Elukainews