பாரிய புதைகுழிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் சார்பில் அறிக்கை வெளியானது…!

தென்னாபிரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான வேலைத்திட்டம் (International Truth and Justice Project – ITJP)யின் தலைமையில், இலங்கையில் ஐனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் (Journalist For Democracy in Sri Lanka – JDS), காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் (Families of the Disappeared – FOD) மற்றும் மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையம் (Centre For Human Rights and Development – CHRD) ஆகிய மனித உரிமைக்கள் அமைப்புகள் இணைந்து, இலங்கையில் மூடிமறைக்கப்படும் பாரிய மனித புதைகுழிகள் பற்றிய ஆய்வு அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டிருந்தனர். 

பாரிய புதைகுழிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிநிற்கும் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் சார்பில் இந்த அறிக்கை வெளியானது.தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவினர்கள், இந்த அறிக்கையின் பிரதிகளை இன்று பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் நேரில் சென்று கையளித்தனர்.

இந்த சந்திப்புக்களின் போது,  இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பாகவும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் பாரிய மனித புதைகுழிகள் தொடர்பான விடயங்களை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெளிவுபடுத்தினர்.

இந்த ஆய்வு அறிக்கையை பெற்றுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் புலம்பெயர் உறவினர்களின் வேதனைகளை அக்கறையுடன் கேட்டதுடன் மேலும் இவ்விடயம் தொடர்பாக தாங்கள் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதாகவும் உறுதியளித்தனர்.

இந்நிகழ்வில் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரித்தானியா வாழ் உறவினர்களின் சங்கத்தின் சார்பில் விஜய் விவேகானந்தன், டிலக்‌ஷன் மனோரஜன், லக்ஸ்மன் திருஞானசம்பந்தர், நிலக்ஜன் சிவலிங்கம், சாருப்பிரியன் ஸ்ரீஸ்கரன், புகழினியன் விக்ட்டர் விமலசிங்கம், மாதவ மேஜர் வேலுப்பிள்ளை, ரோய் ஜக்ஷன் யேசுதாசன், சுபதர்ஷா வரதராசா, சுபமகிஷா வரதராசா ரஞ்சனி பாலச்சந்திரன், செல்வகுமாரி லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உலகின் காணாமல் ஆக்கப்பட்டோரின் வழக்குகளை அதிகமாக கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருக்கும் சந்தர்ப்பத்தில் அது தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு இடமளிக்கப்படாது தடை செய்யப்படுகின்ற விடயமானது பாரிய மனித புதை குழியின் வெளிப்படை தன்மையை அவலங்களை முழுமையாக மறைக்கின்ற செயல்பாடாகவே பார்க்கப்படுகின்றது என இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews