முதலீட்டுக்குச் சாதகமான சூழலை உருவாக்கிக்கொடுக்கும் வகையில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளும் பட்சத்தில் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் தயாராக இருப்பதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
இந்நாட்டின் வங்கிக் கட்டமைப்பு சரிவடையும் என சில தரப்புக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாலும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் முன்னெடுத்துவரும் திட்டங்களுக்கு சர்வதேசத்தின் பாராட்டு கிடைத்துள்ளதெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
‘ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரே வழிக்கு’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (03) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த நாட்களில் தான் சீனாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது அந்நாட்டு நிதி அமைச்சர், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சீன எக்ஸிம் வங்கியின் தலைவர் ஆகியோருடன் கலந்துரையாடியிருந்தாகவும் அதன்போது அவர்கள் இலங்கையின் பொருளாதார நிலைத்தன்மைக்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு பாராட்டு தெரிவித்திருந்தனர் என்றும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
அதேபோல் சைனா ஹாபர் கோபரேஷன் நிறுவனத்தின் தலைவருடனான சந்திப்பின் போது கொழும்பு துறைமுக நகரத்தில் 1.2 டொலர் பில்லியன் முதலீடு செய்யவிருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், சீனாவின் சினோபெக் நிறுவனம் புதிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையமொன்றை ஆரம்பிக்கத் தயாராக உள்ளதெனவும் தெரிவித்தார்.
அதேபோல் இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு சாதகமான முறையில் முகம்கொடுத்து சுமூகமான நிலைமைகளை உருவாக்கிக்கொண்டுள்ளதெனவும், ஜூன் 20 ஆம் திகதி வெளியான சீன புளூம் பேர்க் பத்திரிகை செய்தி வெளியிட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
“கடந்த காலத்தில் இலங்கையில் பணவீக்கம் 80% ஆக காணப்பட்டது. நாடு என்ற வகையில் அது மிகவும் கடினமாக நிலைமையாகும். அந்த நேரத்தில் ரூபாவின் பெறுமதியும் பெருமளவில் வீழ்ச்சி கண்டது. 2 மில்லியனின் பெறுமதி 1.2 மில்லியனாக சரிவடைந்தது.
இவ்வருடத்தில் லெபனானின் பணவீக்கம் 485%. வெனிசுலாவின பணவீக்கம் 285%. ஆகவும் காணப்படுகின்றது. இலங்கையின் பணவீக்கம் 12% ஆக காணப்படுகின்றது. அடுத்த மாதமளவில் 7%-8% ஆக குறையும் என நம்புகிறோம். தவறான பொருளாதார முகாமைத்துவச் செயற்பாடுகளை தடுத்துள்ளோம். லெபனானில் இன்றும் மின் வெட்டு அமுல்படுத்தப்படுகிறது. இந்த நிலை இலங்கையில் இல்லை.
பாதாளத்தில் விழுவதற்கு தயார் நிலையிலிருந்த பொருளாதாரமே எமக்கு கிடைத்தது. அதனைத் தடுக்க முற்படாமல் இருப்பதே பெரும் பாதிப்பாகும். அதனைத் தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான செலவினங்களின் அடிப்படையில் கட்டணங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நெருக்கடி நிலையிலும் பணவீக்கத்தை அரசு வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளது. எம்மால் கடனை மீளச் செலுத்த முடியாது என்பதை சர்வதேச நாணய நிதியம் 2020 ஆம் ஆண்டிலேயே அறிவித்தது. தொடர்ச்சியாக அதனை அறிவித்தனர். 2021-04-17 வரை, 203 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் அரசாங்கத்திடம் அதற்கான இயலுமை இருக்கவில்லை.
அரசாங்கத்திடம் 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே இருந்தன. அதனாலேயே நாடு வங்குரோத்து நிலைமை அடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மொத்த தேசிய உற்பத்தியில் 128% சதவீத கடனை நாடு கொண்டுள்ளது. 2032ஆம் ஆண்டளவில் அதனை 95% ஆகக் குறைக்க வேண்டிய சவாலான நிலைமை காணப்படுகின்றது.
அரசாங்கத்தின் இலக்குகளை அடைய, கடனை குறைக்க வேண்டும். வருமானத்தில் இருந்து கடனை செலுத்தும் நிலைக்கு நாட்டின் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்ய வேண்டியது அவசியமாகும். அதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்களையும் மறுசீரமைக்க வேண்டும்.
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவற்றிலிருந்து பெற்ற கடன்களை மறுசீரமைக்க முடியாது. காரணம், மிகக் குறைந்த வட்டியில் நீண்ட கால அடிப்படையில் அவை பெறப்பட்டுள்ளன. அவர்களிடத்தில் பெறப்பட்ட கடன்களை எந்தவொரு தரப்பும் இதுவரையில் தள்ளுபடி செய்ததில்லை.
அவர்கள் கடன் தர மறுக்கும் பட்சத்தில், உலகில் வேறு எந்த தரப்பிடத்திலும் கடன் பெற முடியாது. மேலும், இந்தியா, ஜப்பான், சீனா மற்றும் பாரிஸ் சமவாயத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகள் எமக்கு கடன் வழங்கியுள்ளன. தற்போது, கடன் மறுசீரமைப்பு தொடர்பாக அவர்களுடன் வெற்றிகரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
மேலும், அதிக வட்டி விகிதத்தில் வணிகக் கடன்களை வழங்கிய தரப்புக்களும் உள்ளனர். 1997 இல் குறைந்த வருமானம் பெறும் நாடாகவிருந்த நாம் மத்திய வருமானம் பெறும் நாடாக உயர்வதற்கே வணிகக் கடன்களை பெற்றுக்கொண்டோம். அதன் பின்னர் குறைந்த வட்டியில் எமக்கு கடன் பெற்றுத்தருவதை நிறுத்திவிட்டனர். அதனாலேயே அதிக வட்டிக்கு கடன் பெற வேண்டிய நிலைமை உருவானது.
எவ்வாறாயினும், எமக்கு கடன் வழங்கிய தரப்பினர் கடன் மறுசீரமைப்புக்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். அந்த நிவாரணத்தைப் பெற்றுக் கொண்டு படுகடனை மீளச் செலுத்தும் நாடாக இலங்கை தனது பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதனைச் செய்யத் தவறினால் நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்குச் செல்லும்.
மீண்டும் வங்குரோத்து நிலையை அடைந்துவிடாமல் உள்நாட்டு கடன்களையும் மறுசீரமைக்க வேண்டியது அவசியமாகும். இதற்கு, வங்கிகள், ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி உள்ளிட்டவைகளின் பங்களிப்பை பெற வேண்டும். அத்தோடு 57 பில்லியன் வங்கி கணக்கு வைப்பாளர்களையும் நாம் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.
இது கடன் மறுசீரமைப்பு முறையாகும். இதற்குள் அரசியல் செயற்பாடுகள் இல்லை. திறைசேரி, மத்திய வங்கி மற்றும் சர்வதேச நிதி ஆலோசகர்களின் பங்களிப்புடனேயே இதற்குரிய யோசனைகள் தயாரிக்கப்படுகின்றன. அது குறித்து பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் உண்மைக்கு புறம்பான பிரசாரங்களை முன்வைப்பது நல்லதல்ல.
கடந்த வருடம் வரலாற்றில் அதிக வங்கி வட்டி விகிதம் பதிவான வருடமாக காணப்பட்டது. 30%-36% ஆக வட்டி விகிதம் உயர்வடைந்திருந்தது. ஆனால் தற்போது திறைசேரி பத்திரங்களுக்கான வட்டி விகிதம் 16% ஆக காணப்படுகின்றது.
வங்கி வட்டி 29% முதல் 16%-17% வரை குறைவடைந்து வருகின்றது. இவ்வருட இறுதிக்குள் 11%-12% ஆக குறையலாம். இது குறித்து பல தரப்புக்களும் தவறான பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர். தொடர்ச்சியாக மறுசீரமைப்புச் செயற்பாடுகளை செய்யாமல் இருக்கும் பட்சத்தில் பணவீக்கம் அதிகரிக்கும். முதலீட்டாளர்களும் நாட்டிற்கு வரத் தயங்குவர்.
நாட்டின் வங்கி கட்டமைப்பு முழுமையாக சரிவடையும் என பலரும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டுள்ளனர். நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் சர்வதேச ரீதியில் பாராட்டைப் பெற்றுள்ளது. தேவையான சீர்திருத்தங்களைச் செய்வதற்கும் முதலீட்டாளர்களுக்குச் சாதகமான சூழலுக்கான வாய்ப்புகளை உருவாக்கும் பட்சத்தில் உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்யத் தயாராக உள்ளனர்.
அண்மையில் நான் மேற்கொண்ட சீன விஜயத்தின் போது, அந்நாட்டின் நிதி அமைச்சர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் சீன எக்ஸிம் வங்கியின் தலைவர் ஆகியோருடன் கலந்துரையாடினேன். இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் முன்னேற்றத்திற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு அவர்கள் பாராட்டு தெரிவித்தனர். அத்துடன், சைனா ஹார்பர் பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலைவருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், கொழும்பு துறைமுக நகரத்தில் 1.2 பில்லியன் டொலர்களை முதலீடு செய்யத் தயாராக இருப்பதாகவும் , சீனாவின் சினோபெக் நிறுவனம், எரிபொருள் சுத்திகரிப்பு நிலையமொன்றை இலங்கையில் ஆரம்பிக்க உள்ளதெனவும் தெரிவித்தார்.
அது மட்டுமன்றி கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருந்த இலங்கை அந்த சவால்களுக்கு வெற்றிகரமாக முகம்கொடுத்து, சுமூகமான நிலைமைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது என ஜூன் 20 ஆம் திகதி வெளியான புளூம் பேர்ட் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.” எனவும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.