முழங்காவில் செல்வ யோக சித்திவிநாயகர் ஆலயத்திற்கு பின்பாக உள்ள காணியில் அமைக்கப்படவிருந்த மதுபான விற்பனை நிலையத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முழங்காவில் பகுதியில் உள்ள செல்வ யோக சித்திவிநாயகர் ஆலயத்திற்கு பின்பகுதியிலு்ம, விளையாட்டு மைதானத்திற்கு எதிராகவும் குறித்த மதுபான விற்பனை நிலையம் அமைக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
குறித்த இடம் பொருத்தமற்றது எனவும், அப்பகுதியில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பொது மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் பல்வேறு போராட்டங்களையும், எதிர்ப்புக்களையும் முன்னெடுத்து வந்தனர்.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் முழங்காவில் பொலிசார் கிளிநொச்சி நீதிமன்றில் வழக்கு ஒன்றினை பதிவு செய்திருந்தனர். பொதுமக்கள் சார்பில் ஆயரான சட்டத்தரணி எம் ஏ சுமந்திரன், அப்பகுதி பொருத்தமற்றது எனவும், குறித்த பகுதியில் வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்ய வேண்டும் எனவும் மன்றில் வாதத்தினை முன்வைத்துள்ளார்.
இந்த நிலையில், குறித்த மதுபான விற்பனை நிலையத்தை திறப்பதற்கு மன்று 14 நாட்களிற்கு இடைக்கால தடையை பிறப்பித்துள்ளதாகவும் ஊடகங்களிற்கு சுமந்திரன் தெரிவித்தார்.
குறித்த வழங்கு எதிர்வரும் 20ம் திகதி மீண்டும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை, ஊழியர் சேமலாப நிதி தொடர்பிலும் அவர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தார்.