மலையகம் – வடக்கு கிழக்கு உறவிற்கு நீண்ட வரலாறு இருக்கிறது. தமிழ் அரசியலில் தமிழரசுக்கட்சியின் தோற்றத்திற்கு பின்னர் இந்த உற்வு ஒரு கொள்கைக்கு பின் பலத்தோடு வளர்ந்தது எனலாம். 1949 ம் ஆண்டு தமிழரசுக்கட்சியின் தோற்றத்துடன் தமிழ் அரசியலில் பல மாற்றங்கள் இடம் பெறத் தொடங்கின அதில் நான்கு மாற்றங்கள் முக்கியமானவை. தமிழ் இன அரசியல் தமிழ்த்தேசிய அரசியலாக மாற்றப்பட்டமை, சமஸ்டிக்கோரிக்கை முன்வைக்கப்பட்டமை, தமிழ்பேசும் மக்கள் என்ற அகன்ற கொள்கை நிலைப்பாடு உருவாகியமை மக்களை இயைத்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை என்பவையே அம் மாற்றங்கள் ஆகும். தமிழ் பேசும் மக்கள் என்ற அகன்ற கொள்கை நிலைப்பாட்டிற்குள்ளேயே மலையக மக்களும் இணைக்கப்பட்டனர். இந்த கொள்கை நிலைப்பாடு சேர்.பொன்.அருணாசலம் முன்வைத்த தமிழ் அகம் என்ற கொள்கை நிலைப்பாட்டின் நீட்சி எனலாம். இந்த கொள்கை நிலைப்பாடு பின்னர் தோல்வியில் முடிந்தது என்பது வேறு கதை.
முஸ்லீம்கள் தனியான இனமாகக் கருதியமையினாலும், எதிர்ப்பு அரசியலை தொடர்ந்து நடாத்திக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களுடன் நெருக்கமாக இருப்பது தென்னிலங்கையில் வாழும் முஸ்லீம்களை பாதிக்கும் என்பதாலும், வர்த்தக நலன்கள் பாதிக்கப்படும் என்பதாலும், வடக்கு கிழக்கில் தமது வீதாசாரம் குறைந்து வரும் என்பதனாலும் தமிழ்பேசும் மக்கள் என்ற கொள்கை நிலைப்பாட்டிற்குள் வரவில்லை. மலையக மக்கள் ஈழத்தமிழர்களின் சமஷ்டி அலகிற்குள் மலையகம் வர முடியாது என்பதனாலும், சுற்றிவளைக்கப்பட்ட பிரதேசத்தினுள் வாழ்வதனாலும் தமிழ் பேசும் மக்கள் என்ற அடையாளத்திற்குள் வரவில்லை ஆனாலும் முஸ்லீம்களைப் போல தூரவிலகிச் செல்லவில்லை. வேறு அடையாள அரசியலை மேற்கொண்டாலும் வடக்கு – கிழக்கு அரசியலோடு வலுவான உறவினை பேணினார்கள். ஒரு தரப்பிற்கு இன்னோர் தரப்பு உதவியாக நின்றார்கள்.
தமிழரசுக்கட்சி வரலாறு முழுவதும் மலையகம் பற்றிய கொள்கை நிலைப்பாட்டை பேணுவதில் உறுதியாக இருந்தது. 1949 ம் ஆண்டு தமிழரசுக்கட்சி உருவாக்கப்பட்டது. அதனை உருவாக்கும் போதே பிரஜாவுரிமை விடயம் தொடர்பாக “இன்று மலையக மக்களுக்கு நடப்பது நாளை மொழிப்பிரச்சினை மேலெழும் போது ஈழத்தமிழர்களுக்கும் வரும்” என்று தந்தை செல்வா கூறினார். இதை எதிர்த்த போராட வேண்டும் என்றார்.
தமிழரசுக்கட்சியின் தோற்றத்திற்கு பிரஜாவுரிமை பிரச்சினை தான் காரணம் என்ற வாதம் முன்வைக்கப்படுகின்றது. அது முழுமையாக சரியானது என்றும் கூற முடியாது. இந்திய – பாகிஸ்தானிய பிரஜாவுரிமை சட்டம் (1949) வரும் போதே காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு வந்து விட்டது. தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஜீ.ஜீ.பொன்னம்பலம் கைத்தொழில் மீன்பிடி அமைச்சராக பதவியேற்றவுடனேயே பிளவு வந்து விட்டது. இதற்குள் ஒள்றையாட்சியா? சமஸ்டியாட்சியா? என்ற கொள்கை நிலைப்பாடும் பேசு பொருளாக இருந்தது. ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஒற்றையாட்சியில் உறுதியாக இருந்தார். சோல்பரி யாப்பின் மூலம் முழுமையான பொறுப்பாட்சி பெரும்பான்மைச் சமூகத்திடம் வழங்கப்பட்டதனால் ஒரு சாரார் சமஸ்டி ஆட்சி தான் தீர்வு என்பதில் உறுதியாக நின்றனர். நல்லூர்த் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த நாகநாதனும் அவரது குழுவினரும் ஜீ.ஜீ.பொன்னம்பலம் அமைச்சரானதைத் தொடர்ந்து அதனை பகிரங்கமாக எதிர்த்ததுமல்லாமல் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழுவிலிருந்தும் வெளியேறினர். செல்வநாயகம் பகிரங்கமாக எதிர்க்கவில்லை. பிரஜாவுரிமை சட்டம் அவர் வெளியேறுவதற்கான சூழலையும் தமிழரசுக்கட்சி தோற்றம் பெறுவதற்கான சூழலையும் உருவாக்கி கொடுத்தது.
தமிழரசுக்கட்சியின் அங்குரார்ப்பண கூட்டத்தில் தன்னை தந்தை செல்வா தலைமையுரை ஆற்றினார் அதில் மலையக மக்கள் பற்றிக் கூறும் போது “மலைநாட்டில் வாழும் தமிழ்த் தொழிலாளர்களது நிலைமையானது இங்கு கூறிய தாழ்த்தப்பட்டோருடைய நிலையிலும் பார்க்க கேவலமானதாய் உள்ளது. அவர்கள் அரசியலில் தீண்டத்தகாதவர்களாகி விட்டார்கள். அவர்களுக்கு பிரஜாவுரிமை இல்லாமல் இருப்பது மாத்திரமன்றி தமக்கென ஒரு நாடுமற்ற அகதிகளாகவும் இருக்கின்றார்கள். ஏனைய தமிழ் பேசும் மக்கள் இவர்களுக்கு வந்திருக்கும் இன்னலைத் தங்களுக்கு வந்ததாகவே கருதுதல் வேண்டும். அவர்கள் உதவிக்கு எதிர்பார்ப்பது இந்தியாவை அல்ல. சுதந்திரம் விரும்பும் இலங்கைவாழ் மக்களிடமிருந்தே அவ் உதவி வருதல் வேண்டும். இவ்விரண்டு விடயங்களும் நீங்கள் ஆரம்பிக்க வந்திருக்கும் இக்கட்சியின் அடிப்படைக் கொள்கைளில் இடம் பெறுதல் வேண்டும் தமிழரசுக்கட்சியின் முதலாவது தேசிய மாநாடு 1951 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 , 14 ம், 15 ம் திகதிகளில் திருகோணமலையில் இடம்பெற்றது. மாநாட்டின் முடிவில் மாநாட்டுத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் மூன்றாவது தீர்மானம் மலையக மக்களைப்பற்றி குறிப்பதாக இருந்தது. “மலைநாட்டில் நிரந்தரமாக வாழ்கின்ற ஏறக்குறைய 800,000 தமிழ்த் தொழிலாளர்கள் (அவர்களில் பெரும்பான்மையானோர் இலங்கையில் பிறந்தவர்களும் இலங்கையை தவிர வேறு தாயகமறறவர்களுமாவர்) அவர்கள் இருபதாண்டுகளாக அனுபவித்த அடிப்படை உரிமைகளான வாக்குரிமை பறிக்கப்பட்டிருக்கின்றது என்பதுடன் மேலும் அவர்கள் கொடூரமான முறையில் நாடற்றவர்கள் என்ற நிர்க்கதியான நிலைக்கு நிரந்தரமாக ஒதுக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இலங்கையின் சுதந்திரம் கொண்ட இழிவான அர்த்தத்த்pனால் அவர்கள் மீது அடிமைத்தனையிலிருந்து இலங்கையில் பிறந்தவர்களான இவர்களின் சந்ததியினராவது விடுபடுவார்கள் என்ற நம்பிக்கையும் இவர்களுக்கு இல்லை எனவே இவ் முதலாவது தேசிய மாநாடு இலங்கை சமஸ்டியமைக்குள் சுயாதீனமான மொழிவாரியான ஒரு தமிழ் அரசை காலதாமதமின்றி நிறுவுவதற்கு இடையறாது உழைப்பதன் மூலம் இலங்கையில் உள்ள அனைத்து தமிழ் பேசும் இனத்தின் மீதும் சுமத்தப்பட்டுள்ள இந்த அவமானத்தையும் அவமதிப்பையும் அகற்றுவதற்கு அது எடுத்துள்ள உறுதியான அசைக்க முடியாத தீர்மானத்தை பிகடனப்படுத்துகின்றது.
1956 ம் அண்டு ஆவணி மாதம் 19 ம் திகதி திருகோணமலையில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் நாலாவது மாநில மாநாட்டில் மூன்றாவது தீர்மானம் மலையக மக்கள் பற்றியதாக இருந்தது அத்தீர்மானம் இவ்வாறு கூறியிருந்தது. “இன்றைய குடியுரிமைச்சட்டங்களுக்கு பதிலாக இந்நாட்டை தாயகமாகக் கொண்டு இங்கு நிலையாக வாழ்ந்து வரும் மக்கள் அனைவரையும் இந்நாட்டின் பூரண குடிமக்களாக ஏற்றுக்கொள்ளும் சட்டங்களை உருவாக்க வேண்டும்”
1957 ம்ஆண்டு ஆடி மாதம் 28 ம் திகதி மட்டக்களப்பு நகர மண்டபத்தில் இடம் பெற்ற தமிழரசுக்கட்சியின் சிறப்பு மாநாடு இடம் பெற்றது. திருமலை யாத்திரை இடம் பெற்று ஒரு வருட காலத்தின் பின்னரே இம்மாநாடு கூட்டப்பட்டது. திருமலை யாத்திரையைத் தொடர்ந்து இடம்பெற்ற மாநாட்டில் அரசிற்கு ஒரு வருடகால அவகாசம் கொடுக்கப்பட்டது. அந்த ஒரு வருடகால அவகாசம் முடிவடைந்து போராட்டத்திற்கு தயாராகும் போது பிரதமர் பண்டாரநாயக்கா “பண்டா – செல்வா” ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கு முன்வந்தார். இதனால் போராட்டத்தை பிரகடனப்படுத்தவென கூட இருந்த மாநாடு பண்டா –செல்வா ஒப்பந்தத்தை ஆராயும் மாநாடாக மாறியது. இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முதலாவது தீர்மானம் மலையக மக்களின் பிரஜாவுரிமை பற்றியதாகும். அத்தீர்மானம் பின்வருமாறு கூறியது “இலங்கையைத்தனது தாயகமாகக் கொண்ட ஒவ்வொரு தமிழ் பேசும் மகனுக்கும் குடியுரிமை வழங்குவதோடு தற்போது நடைமுறையிலுள்ள இயற்கைக்கே மாறானதும் சனநாயக கோட்பாடுகளுக்கு முரணானதுமான குடியுரிமைச்சட்டங்களை திருத்தியமைக்கப்பட வேண்டும்.
1958 ம் ஆண்டு மே மாதம் 25 ம் திகதி வவுனியாவில் கூட்டப்பட்ட தமிழரசுக்கட்சியின் 6 வது தேசிய மாநாடு தீர்மானங்களிலும்3 வது தீர்மானம் பிரஜாவுரிமைச்சட்டம் பற்றிக் கூறியது. மலையகத் தமிழர் இழந்த குடியுரிமை, வாக்குரிமைகளை மீண்டும் பெறும் வகையில் இன்று நடைமுறையிலுள்ள குடியுரிமைச்சட்டங்கள் நீக்கப்படல் வேண்டும்” மலையக மக்களின் பிரதான பிரச்சினையாக அன்றைய காலகட்டத்தில் பிரஜாவுரிமை பிரச்சினையே இருந்ததினால் அதனைப்பற்றியே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1962 ம் ஆண்டு புரட்டாதி மாதம் 01 ம் திகதி மன்னாரில் இடம்பெற்ற கட்சியின் 8 வது மாநாட்டில் தோட்டங்களில் வெளியாரை வேலைக்கு அமர்த்தும் செயற்பாடு முதலாவது தீர்மானமாக சுட்டிக்காட்டப்பட்டது.
இம்மாநாட்டிலேயே தமிழரசுக்கட்சி மலையகத்தில் தொழிற்சங்கம் அமைக்கும் தீர்மானத்தை எடுத்தது. மலையக தமிழர்களையும் வடக்கு தமிழர்களையும் நிறுவன ரீதியாக ஒன்றிணைப்பதற்காகவே தொழிற்சங்கம் உருவாக்கப்போவதாக கூறியிருந்தது. இதன் படி 1962 ம் ஆண்டு மார்கழி மாதம் 22 ம் திகதி ஹட்டனில் கட்சியின் தொழிற்சங்கமான “இலங்கை தொழிலாளர் சங்கம்” உருவாக்கப்பட்டது. தலவாக்கலை போன்ற நகரங்களில் தொழிற்சங்க கிளைகளும் அமைக்கப்பட்டன. இத்தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சி புத்திபூர்வமானது எனக்கூற முடியாது. வடக்கு – கிழக்கை மையமாகக் கொண்ட அமைப்பு ஒன்று மலையகத்தில் தொழிற்சங்கத்தை உருவாக்குவது பொருத்தமானதாக இருக்கவில்லை. அத்தொழிற்சங்கம் தோல்வியைத்தழுவியிருந்தது.
1956 ம் ஆண்டு யூலை மாதம் 26 ம் திகதி பண்டா செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது பண்டா செல்வா ஒப்பந்தத்தில் பகுதி “அ” வில் இடைக்கால ஒழுங்கு பகுதியில் 4வது பந்தி பின்வருமாறு கூறியது “இந்திய வம்சாவழியினருக்கு இலங்;கைக் குடியுரிமை வழங்குவது பற்றியும் குடியுரிமைச்சட்டம் பற்றியும் தமது கருத்துக்களை இலங்கை தமிழரசுக்கட்சிப்பிரதிநிதிகள் பிரதமருக்கு எடுத்து விளக்கி விரைவில் இப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினர். இப்பிரச்சினை விரைவில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என பிரதமர் அறிவித்தார்”
1960 ம் ஆண்டு மார்ச் தேர்தலின் பின்னர் அரசாங்கத்தை அமைப்பதற்கு எந்தக்கட்சியும் பெரும்பான்மை பலத்தை பெறவில்லை. தமிழரசுக்கட்சி தீர்மானிக்கும் சக்தியாக இருந்தது. கட்சி இரண்டு சிங்கள பிரதான கட்சிகளிடத்தும் நான்கு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்தது. அதில் 3வது, 4வது கோரிக்கைகள் மலையக மக்கள் பற்றியதாக இருந்தன
3வது கோரிக்கை
“இலங்கை பிரஜாவுரிமைச்சட்டத்தில் குறிப்பிட்ட திகதி என்பது நீக்கப்பட்டு இரண்டு தலைமுறைக்கு இந்நாட்டில் பிறந்தோர் எவருக்கும் குடியுரிமை வழங்குவதன் மூலம் “நாடற்ற தமிழர்” என்ற நிலை நாளடைவில் மாற வேண்டும்”
4வது கோரிக்கை
குடியுரிமை பிரச்சினை தீரும் வரை 6 நியமனப்பிரதிநிதிகளில் 4 பேர் மலைநாட்டு தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் வாய்ந்த ஸ்தாபனமான “இலங்கை ஜனநாயக காங்கிரஸ’” இனால் நியமிக்கப்பட்டவர்காளக இருக்க வேண்டும்.
1964ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட சிறீமா – சாஸ்திரி ஒப்பந்தத்தினை; தமிழரசுக்கட்சியும் ஏற்கவில்லை எனினும் 1967 ம்ஆண்டு சிறீமா சாஸ்திரியின் ஒப்பந்த அமுலாக்கச்சட்டம் கொண்டுவரப்பட்ட போது அது குறிப்பட்ட தொகையினருக்கு பிரஜாவுரிமையை உறுதிப்படுத்தியமையினால் தொண்டமான ஆதரித்தார். தமிழரசுக்கட்சியும் ஆதரித்தது. இரு தரப்பும் அன்று ஆட்சியின் பங்காளிகளாக இருந்தன. இதுவும் ஆதரித்தமைக்கு ஒரு காரணம் எனலாம். இதில் மலையக மக்களை பதிவுப்பிரஜை என்ற பெயரில் வேறு இடாப்பில் பதிவதை தமிழரசுக்கட்சியின் ஊர்காவற்றுறை பாராளுமன்ற உறுப்பினர் வி.நவரத்தினம் எதிர்த்து கட்சியிலிருந்து விலகி தமிழர் சுயாட்சி;க்ட்சிக்கழகத்தை உருவாக்கினார் என்பதும் வரலாறு ஆகும்.
தமிழரசியலில் ஏற்பட்ட முதல் இரண்டு பிளவுகஎளும் மலையக மக்களின் விவகாரத்தை ஒட்டியே ஏற்பட்டது என்பதும் இங்கு குறித்துக்கொள்ளப்பட வேண்டியதாகும்.
அடுத்த வாரம் விடுதலை இயக்கங்கள் மத்தியில் மலையக மக்கள் பற்றிய அக்கறை எப்படியிருந்தது எனப்பார்ப்போம்.