வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டால், ‘இன்னும் பல புதைகுழிகள் வெளிப்படும்’

வடமாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களை அகற்றினால் மேலும் பல புதைகுழிகளை கண்டுபிடிக்க முடியும் என காணாமல் போன தனது மகனைத் தேடி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மன்னாரில் உள்ள தமிழ் தாய் ஒருவர் தெரிவித்துள்ளார்.

“இப்பொழுது ஒவ்வொரு புதைகுழிகளாக கிளம்பிக் கொண்டிருக்கின்றன. அதுபோல் முல்லைத்தீவில் ஒரு புதைகுழி கிளம்பியுள்ளது. இராணுவ முகாம்களை அகற்றினால் இன்னும் பல புதைகுழிகள் வெளிவரும். ஏனென்றால் இராணுவ முகாம்களில் இருக்கின்ற இடங்களில் புதைகுழிகள் இருக்கும்.  பிடித்துக்கொண்டுபோன பிள்ளைகளை அவர்களே அடித்துக் கொண்டிருப்பார்கள். அந்தந்த இடத்தில் புதைக்கப்பட்டுள்ளமையால், இராணுவ முகாம்களை அகற்றாமைக்கு காரணம் என்னவென்றால் தம்முடைய சிங்கள மக்களை கொண்டு வந்து குடியேற்றுவதற்கும், பௌத்த விகாரைகளை அங்கு அமைப்பதற்கு காரணம் புதைகுழிகளை மூடி மறைத்து தங்களது மக்களை கொண்டு வந்து பாதுகாப்பதற்காகவே.”  2008ஆம் ஆண்டு பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட தனது 24 வயது மகனைக் கண்டுபிடிக்கக் கோரி போராடி வரும் மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் தலைவர் மனுவெல் உதயச்சந்திர, ஜூலை 7ஆம் திகதி மன்னார் பசார் பகுதியில் நடைபெற்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு  நீதி கோரும் போராட்டத்தில் கலந்துகொண்டார்.

போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க தமிழர் பகுதிகளில் இருந்து இராணுவத்தை மீளப்பெற வேண்டுமென போராட்டத்தின் போது  மனுவேல் உதயசந்திராவ வலியுறுத்தியுள்ளார்.

“எங்களுடைய தமிழ் பிரதேசத்தில் பௌத்த விகாரைகள் ஒன்றும் அவசியமில்லை. அவர்கள் யாரும் இங்கு இல்லை. தமிழ் பிரதேசத்தில் அவர்களை ஏன் கொண்டுவந்து வைக்க வேண்டும். சிங்கள இராணுவத்தை வெளியில் எடுங்கள் என்றுதான் நாம் கோருகின்றோம். எடுத்தால்தானே எங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.”

ஜனாதிபதி ஊடக மத்திய நிலையம் கடந்த ஜூலை 6ஆம் திகதி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், “அரசாங்கம் யாரையும் மகிழ்விப்பதற்காக இராணுவத் தளங்களை ஒருபோதும் அகற்றாது. ஆனால் உரிய விசாரணைக்கு பின்னர் இறுதி தீர்மானம் மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ” எனக் குறிப்பிட்டார்.

“வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும், வெள்ளை வேனில் கொண்டு சென்ற பிள்ளைகள் எங்கே?, OMP’யும் வேண்டாம் 2 இலட்சமும் வேண்டாம், சரணடைந்த உறவுகள் எங்கே? போன்ற கோசங்களை எழுப்பியவாறு, மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பங்கள் இணைந்து மன்னார் பசார் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியதோடு, ஐக்கிய நாடுகள் சபை தமது பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வை வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர்.

“எங்களுக்கு தீர்வு ஒன்று கிடைக்கும் வரை போராடிக்கொண்டிருப்போம். இறுதியாக ஒன்றை கூறுகின்றோம் ஐக்கிய நாடுகள் சபையாவது எமக்கு ஒரு நல்லத் தீர்வை பெற்றுத்தர வேண்டும்.” என மனுவல் உதயச்சந்திர குறிப்பிட்டார்.

அரச படையினரால் காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு நீதி வழங்கத் தவறியதோடு நட்டஈடு பற்றி மாத்திரம் பேசும் காணாமல் போனோர் அலுவலகத்தை (OMP) அகற்றுமாறும் போராட்டத்தில் ஈடுபட்ட மன்னார் தமிழ்த் தாய்மார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews