வரலாற்று சின்னங்களுக்கு உருவங்கள் மாற்றப்படுகின்றன – யாழ். அரசாங்க அதிபர் கவலை

இன்றுள்ள சூழலில் வரலாற்று சின்னங்களுக்கு உருவங்கள் மாற்றப்படுகின்றன என யாழ். மாவட்ட அரச அதிபர் சிவபாலசுந்தரன்  தெரிவித்துள்ளார்.
நேற்று (16)  நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயில் திறப்பு விழாவில்  உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மரபுரிமைகளைப் பாதுகாப்பது என்பது முக்கியமான அவசியமான பணியாகவுள்ளது. சமகால வரலாற்று நிகழ்வுகளை அது நிகழ்ந்த நாட்டிலே பேணிக்கொள்ள முடியாத நிலையில்  அயல் நாட்டிலும் வெளிநாட்டிலும்  நினைவகங்களை அமைத்துக்கொண்டிருக்கின்றாம்.
இன்றுள்ள சூழலில் வரலாற்று சின்னங்களுக்கு உருவங்கள் மாற்றப்படுகின்றன. அவற்றை பாதுகாக்க பகீரதப் பிரயத்தனம் மேற்கொள்ளப்படுகிறது. எனவே எமது சின்னங்களை பாதுகாத்தால் தான்  எதிர்காலச் சந்ததிகளுக்கு கடத்த முடியும்.
அண்மையில் காலிக் கோட்டையில் இருக்கும் அடையாளச் சின்னங்களை பார்வையிட்டேன் அங்கு  நயினாதீவிலிருந்து கொண்டு செல்லப்பட்ட   கல்வெட்டொன்று காணப்பட்டது.  அப்போது நான் நாம் அதை  பாதுகாக்க தவறி விட்டோம் என எண்ணினேன்.
வீதியோரங்களில்  காணப்படும்  கட்டடங்கள், சுமைதாங்கிகள் , ஆவுரஞ்சிக்கற்கள் போன்றன  அபிவிருத்திகளின் போது அகற்றப்பட்டுவிட்டன. பல அகற்றப்படத்  தயாராகவுள்ளன.
வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் எமது வரலாறு எமது சந்ததிக்கு எந்தளவு பொறிக்கப்படுகின்றது என்பதும்  தெரிவிக்கப்படடுள்ளது என்பதும் கவலையான விடயம்.  கல்விப் புலம் சார்ந்தவர்கள் எமது சந்ததிக்கு  இதை அறிய உத்தியோகபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
எந்தக் காரியங்களை செய்தாலும் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதை கடந்த ஆறு மாத  காலத்தில் அறிந்து கொண்டேன்.  எது எவ்வாறாயினும்  இவ்வாறான மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாப்பதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews