17 பல்லாயிரம் ஆண்டு வரலாற்றைக் கொண்ட முல்லைத்தீவு ஆதிசிவன் ஆலயத்தில் சைவமக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் வழிபாட்டுக்கு தடையேற்படுத்தும் வகையில் கற்பூரத் தீபம் சப்பாத்துக்களால் நசுக்கப்பட்டு, அநாகரிகமான முறையில் பிக்குகள் நடந்துகொண்டமை சைவமக்கள் மீதான அராஜக வெளிப்பாடே இது நாட்டின் நீதிமன்றக் கட்டமைப்பை சீர்குலைக்கும், அவமதிக்கும் செயற்பாடாகும் என இலங்கை இந்து சமயத் தொண்டர் சபை கண்டனம் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் உள்ளதாவது,
முல்லைத்தீவு மாவட்ட குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தின் சைவ மக்கள் வழிபாடு செய் வதற்கு முல்லைத்தீவு நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமையவே சைவ மக்களால் பொங்கல் உற்சவம் ஏற்பாடு செய்யப்பட்டது.
நீதிமன்றக் கட்டளையையும் மதிக்காது சைவ மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் உற்சவத்தை குழப்பி பிக்குகள் தலைமையிலான சிங்களக் காடையர்கள் அராஜகம் புரிந்துள்ளனர்.
சமாதானம் மத நல்லிணக்கம் என்று பேச்சளவில் கூறிக்கொண்டு இவ்வாறான அட்டூழியம் புரிவது ஏற்புடையதல்ல, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. சிவன் சொத்து குலநாசம் என்பதுபோல சிவ பக்தர்களைத் துன்புறுத்தினால் அவர்களின் குலமே நாசமாகும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
சைவ மக்களின் வழிபாட்டு உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் – என்றுள்ளது.