போராடியதால் தோட்டத்தில் இருந்து வெளியேற்றப்படுவதை எதிர்த்து ரம்பொடையில் ஆர்ப்பாட்டம்!

பல வருடங்களாக நாட்டிற்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் தோட்டத் தொழிலாளர்கள் குழுவொன்று தாம் வாழும் தோட்ட வீடுகளை விட்டு வெளியேறுமாறு நிர்வாகத்தின் அழுத்தத்திற்கு எதிராக மலையகத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கண்டி – நுவரெலியா பிரதான வீதியின் ரம்பொடையில் பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் பலரின் பங்கேற்புடன் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

2007ஆம் ஆண்டு முதல் ரம்பொடை, ஆர்.பி பிரிவு தோட்டத் தொழிலாளர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியை வழங்கக்  கோரி போராட்டத்தை முன்னெடுத்த தம்மை, தாம் வசிக்கும் லயன் வீடுகளை விட்டு வெளியேறுமாறு தோட்ட நிர்வாகம் வலியுறுத்துவதாக ரம்பொடை தோட்டம், ஆர்.பி பிரிவு தோட்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.


மலையகத்தில் பரம்பரையாக அரசியலில் ஈடுபட்டுள்ள மற்றும் பெருந்தோட்ட சமூகத்தை வழிநடத்தும் அமைச்சர் ஒருவரின் நெருங்கிய உறவினருக்கு சொந்தமானது எனத் தெரிவிக்கப்படும் ரம்பொட, ஆர்.பி.பிரிவு தோட்டத்தில், ஏழு லயன் வீடுகளில் வசிக்கும் 150 தோட்டத் தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த 48 பேர் கூலித் தொழிலாளிகளாக பணியாற்றி வருகின்றனர்.

2023 மே 16 ஆம் திகதி முதல் குறித்த 48 தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்கடுத்தும் 39 குடும்பங்கள் முன்னறிவிப்பின்றி வேலைக்குச் செல்லாமையால், தோட்ட நிர்வாகத்தால் வீடுகளை ஒப்படைக்குமாறு குறித்த குடும்பங்களுக்கு கூறப்பட்டுள்ளது.

2007ஆம் ஆண்டு முதல் ரம்பொடை, ஆர்.பி பிரிவு தோட்டத் தொழிலாளர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியை வழங்கக்  கோரி பலத்தடவைகள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

அவ்வாறான ஒரு போராட்ட வடிவமாகவே, மே 16ஆம் திகதி முதல் தோட்ட மக்கள் பணிக்குச் செல்லாமல் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மே 16 முதல் பணிக்கு சமூகமளிக்காத தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஜூலை 5ஆம் திகதி தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகம் கடிதம் மூலம் விடுத்த அறிவிப்பில், 7 நாட்களுக்குள் பணிக்கு சமூகமளிக்காவிட்டால் அவர்கள் சேவையை விட்டு வெளியேறியதாகக் கருதப்படுவார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிதாக பணியில் சேரும் தொழிலாளர்களுக்கு தங்குமிடம் வழங்க வேண்டியது அவசியம் என்பதால், பணியில் இருந்து வெளியேறிய தொழிலாளர்கள் பயன்படுத்திய லயன் அறையை 15 நாட்களுக்குள் மீள ஒப்படைக்க வேண்டும் எனவும், இல்லை என்றால் சட்ட நடவடிக்கை  நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் மாவட்ட தொழில் அலுவலகத்தின், உதவி தொழில் ஆணையாளர் ஆகியோருக்கும் தோட்ட நிர்வாகம் குறித்த கடிதத்தின் பிரதிகளை அனுப்பி வைத்துள்ளது.

அந்த லயன் அறைகளிலேயே தாங்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருவதாக தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

1971 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க தோட்ட வீடுகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்திற்கு அமைய, தோட்ட நிர்வாகமானது, நீதிமன்றத்தின் அனுமதியின்றி தோட்டத் தொழிலாளி ஒருவரை தோட்ட வீட்டில் இருந்து வெளியேற்ற முடியாது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews