இந்திய இழுவை படகுகளின் வருகையும், அவர்களது அடாவடித்தனங்களும், அத்துமீறல்களும் எங்களை பாரிய இன்னல்களுக்குள் தள்ளி இருக்கின்றன. இது சம்பந்தமாக பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகள், கலந்துரையாடல்கள், சந்திப்புகள் நடத்தியும் எங்களுக்கு ஒரு தீர்க்கமான முடிவு எட்ட முடியாத சூழலிலே, அரசாங்கமும் அரச அதிபரும் இதற்கு பெரிதாக செவி சாய்க்காத நிலை உள்ளது என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் எம்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்திலுள்ள கடற்றொழில் அமைப்புக்கள் கூட்டாக நேற்று யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் சந்திப்பினை நடாத்தியிருந்தன. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இந்தியா செல்வதற்கு இருக்கின்றார். இந்தியா செல்லவிருக்கின்ற ஜனாதிபதியிடம் நாங்கள் சில வேண்டுகோள்களை முன் வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
இந்திய மீனவர்களுடைய பேச்சுவார்த்தை என்பது, 2016 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் ஐந்தாம் திகதி அமைச்சு மட்ட பேச்சு வார்த்தையாக டில்லியில் நடைபெற்றது. அதில் சில இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன. அந்த இணக்கப்பாட்டின் முக்கிய அம்சமாக நிலுவை படகுகளை முற்று முழுதாக ஒழிக்க வேண்டுமென இந்தியா முதன்முதலாக அறிக்கையிட்டு கையொப்பமிடப்பட்டது. அத்துடன் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வருவது என்பது கண்காணிக்கப்பட வேண்டும் என்ற இரண்டு முக்கிய கோரிக்கைகளை இதிலே சொல்ல வேண்டி இருக்கிறது. இதற்கு தலைவர் தாங்கியவர் அன்று இருந்த வெளிவிவகார அமைச்சர் அவர்கள்.
இரண்டு பக்க அமைச்சர்களும், அதாவது ராதாகிருஷ்ணன் மற்றும் மீன்பிடி அமைச்சர் ஜெயக்குமார் அவர்களும், நமது தரப்பிலே அமைச்சர் மங்கள சமரவீர, மீன்பிடி அமைச்சர் மஹிந்த அமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். எமக்கு இது ஒரு திருப்தியையும் ஆறுதலையும் தரக்கூடிய பேச்சு வார்த்தையாக இருந்தது. ஆனால் அது தொடராமல் அதுவும் ஒரு அறிக்கை வடிவிலேயே உள்ளது.
அன்று இங்கே பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தற்போது ஜனாதிபதியாக இந்தியா செல்ல உள்ளார். பாரதப் பிரதமர் சந்திக்க செல்ல இருக்கின்றார். அங்கே அவர் பலதரப்பட்ட விடயங்களை கலந்துரையாட உள்ளார். அந்தச் சந்தர்ப்பத்திலேயே மீனவர்களுடைய பிரச்சினை முக்கிய பிரச்சினையாக எடுத்து, அவர்களுடன் ஆக்கபூர்வமாக பேசி ஒரு நிரந்தர தீர்வை எட்ட வேண்டும்.
அதற்கு அடிப்படையாக 2014 ஆம் ஆண்டு பேசப்பட்ட அந்த இணக்கப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு பேசுவதே நன்மையை அளிக்கும். அவர்களாலும் அமைச்சு மட்டத்திலும் ஏற்றுக்கொண்டப்பட்ட விடயத்தில் இருந்து ஆரம்பித்து, அந்த விடயத்தை பேசி எங்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்றை எட்டித்தர வேண்டும் என்ற வேண்டுகோளை அன்பாக ஜனாதிபதியிடம் முன்வைக்கின்றோம் – என்றார்.