மனிதாபிமானமற்ற செயலுக்கு அங்கஜன் எம்.பி கண்டனம்!

குழந்தையின் உடலத்தோடு நெடுந்தீவிலிருந்து யாழ்ப்பாணம் வரை பயணித்த அந்த தாய் பட்ட வேதனையை என்னால் உணரமுடிகிறது.
இந்த அலைச்சல்களுக்கு காரணமானவர்களை வன்மையாக கண்டிக்கின்றேன் என யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த குழந்தையின் சடலத்தையும், தாயையும் நோயாளர் காவு வண்டியில் காக்க வைத்தமைக்கு கண்டனம் வெளியிட்டு அவரது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் உள்ளதாவது,
நோயாளர் காவு வண்டிகளுக்கான (அம்புலன்ஸ்) நடைமுறைகளை இத்தனை இறுக்கமாக கடைப்பிடிப்பது சரியா தவறா என்பதை தாண்டி அந்த நடைமுறைகளை கடந்து மனிதாபிமானத்தோடு செயற்பட்ட வேலணை வைத்தியசாலையினர் பாராட்டுக்குரியவர்கள்.
இத்தகைய சந்தர்ப்பங்கள் தீவகத்துக்கான தேவைகள் தீரவில்லை என்பதை உரத்துச் சொல்கின்றன.
இறந்தவரது சடலத்தை ஏற்றுவதற்கு வாகனகாரர்கள் அதிகளவு பணம் கோருவார்கள். அமரர் ஊர்தி சேவைகள் செய்பவர்கள் மற்றைய வாகனங்களை விட ஒப்பிட்டு ரீதியில் குறைவாக பணம் அறவிட்டாலும், அவர்களின் தொகையும் விளிம்புநிலை மக்களுக்கு அதிகமே.
எனவே இலவச அமரர் ஊர்தி சேவை ஒன்று இயங்குமாயின், அதன் ஊடாக பலர் பயன்பெறுவார்கள்.
அத்தோடு தீவுகளுக்கிடையிலான மருத்துவ சேவையை வினைத்திறனாக வழங்கும் வகையில் வைத்தியசாலை வளங்கள், ஆளணிகள், படகுசேவைகள் உள்ளிட்டவையும் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளன.
அரச இயந்திரத்தை தாண்டி தன்னார்வ அறக்கட்டளைகள் , நன்கொடையாளர்கள் இணைந்து இவ்விடயத்தில் செயலாற்ற வேண்டுமென எதிர்பார்க்கிறேன் – என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews