ரயில்வே திணைக்களத்தினை அதிகாரசபையாக மறுசீரமைக்க திட்டம்; அரசாங்கத்திடம் யோசனை

ரயில்வே திணைக்களத்தினை அதிகாரசபையாக மறுசீரமைப்பதில், இந்திய இரயில்வே துறைக்கு இணையாக அதனை நடைமுறைப்படுத்துவதில் போக்குவரத்து அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

இதன்படி, இரயில்வே திணைக்களம் வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கு இரயில் சேவையினை மறுசீரமைப்பதே தீர்வாகுமெனவும், அதனை அதிகாரசபையாக பேணுவது அவசியம் எனவும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சரவை பத்திரம் மூலம் அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளார்.

இரயில்வே திணைக்களத்தினை அதிகாரசபையாக மாற்றுவது மற்றும் மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக பல்வேறு இரயில் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதுடன், பெரும்பான்மையான தொழிற்சங்கங்கள் அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இரயில் சேவையை மறுசீரமைப்பதன் மூலம் ஊழியர்களின் சேவை பாதுகாப்பு மற்றும் அவர்களது ஓய்வூதியம் பாதிக்கப்படாது எனவும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

புகையிரத அதிகார சபையொன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் புகையிரத தொழிற்சங்கங்களுடனான கலந்துரையாடலின் போது, ​​உத்தேச அதிகார சபையின் பணிப்பாளர் சபைக்கு, முன்னாள் இரயில்வே அதிகாரி எவரையும் நியமிக்க வேண்டாம் என தொழிற்சங்கங்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

மேலும், இரயில் பயணிகள் மற்றும் சேவையின் பாதுகாப்பை ஒழுங்குபடுத்துவதற்காக மற்றொரு அமைப்பை நிறுவுவதற்கும் தொழிற்சங்கங்கள் முன்மொழிந்துள்ளன.

அத்துடன், நியமிக்கப்படும் இரயில்வே அதிகாரி, துறைமுக அதிகாரிக்கு இணையாக இருக்க வேண்டும் எனவும் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

இந்த நிலையில், இரயில் சேவை மறுசீரமைப்பு மற்றும் அவற்றை மாற்றுவது தொடர்பாக நிதி அமைச்சின் கீழ் உள்ள பொது மற்றும் தனியார் கூட்டுக்கான தேசிய அமைப்பின் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews