கொக்குத்தொடுவாய் புதைகுழியில் மேலும் சில மனித எச்சங்கள் வெளிப்பட்டன

முல்லைத்தீவு மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அண்மைய வெகுஜன புதைகுழிகளின் அகழ்வுப் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பின்னர், குறைந்தது மேலும் இரண்டு உடல்களின் உறுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

செப்டெம்பர் 7ஆம் திகதி அகழ்வுப் பணிகள் நிறைவடைந்த நிலையில் சடலங்களை தோண்டி எடுப்பதற்கு பொறுப்பான முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ பிரதேச ஊடகவியலாளர்களிடம் தெரிவிக்கையில், உடல் உறுப்புகளுக்கு மேலதிகமாக துப்பாக்கிச் சன்னங்களின் பகுதிகள் என சந்தேகிக்கப்படும் சில உலோக பாகங்களும்  கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கின்றார். 

“ஒரு சில வேறு தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக துப்பாக்கிச் சன்னங்கள் என சந்தேகிக்கப்படும் உலோகத்துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுத் தொடர்பிலான அகழ்வுத் தொடரும். கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்களில் துப்பாக்கிச் சூட்டு அடையாங்கள் இருக்கின்றதா என்பது தொடர்பில் ஆராய வேண்டும். இப்போது எதுவும் குறிப்பிட முடியாது. ஒன்று அல்லது இரண்டு சடலங்கள் எனக் கூறலாம். சரியாக எண்ணிக்கையை கூற முடியாது. உடைகளிலும் துப்பாக்கித் துளைத்தது போன்ற அடையாளங்கள் காணப்படுகின்றன. எனினும் இதுத் தொடர்பிலான விரிவான பகுப்பாய்வு அவசியம்.”

போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குத்தொடுவாய் பகுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் வெளிப்பட்ட பாரிய புதைகுழியை தோண்டும் பணி நீதிமன்ற உத்தரவின் பேரில் செப்டெம்பர் 6ஆம் திகதி காலை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

செப்டெம்பர் 7ஆம் திகதி இரண்டாவது நாளாக இடம்பெற்ற அகழ்வாராய்ச்சிப் பணிகளை சட்டத்தரணிகளுடன் அவதானிப்பதற்காக தொல்பொருள் ஆய்வாளர், பேராசிரியர் ராஜ் சோமதேவா, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் டி.பிரதீபன் மற்றும் யாழ். வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரும் கலந்துகொண்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உத்தியோகபூர்வமாக அகழ்வில் ஈடுபட்டவர்களைத் தவிர வேறு எவரும் புதைகுழிக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் செப்டம்பர் 5 ஆம் திகதி நீதிபதிக்கு அறிவித்திருந்த போதிலும், அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட 6ஆம் திகதி மாலை,  பொலிஸ் பாதுகாப்பு இருந்த வேளையில், சிவில் உடையில், ஆய்வுப் பகுதிக்குள் நுழைந்து சிலர் புகைப்படம் எடுத்த சந்தர்ப்பத்தில் பொலிஸாரும் இராணுவத்தினரும் நடந்துகொண்ட விதம் உள்ளூர் ஊடகவியலாளர்களால் பதிவு செய்யப்பட்டது.

கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தில் இருந்து கொக்கிளாய் நோக்கி 200 மீற்றர் தொலைவில் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊழியர்கள் நீர் குழாய் பதிக்க நிலத்தை தோண்டிக் கொண்டிருந்த வேளையில் தற்செயலாக மனித உடல் பாகங்களும் ஆடைகளின் பாகங்களும் ஜூன் 29 ஆம் திகதி மாலை கண்டெடுக்கப்பட்டன.

ஜூன் 30ஆம் திகதி நீதவான் டி. சரவணராஜா வழங்கிய உத்தரவிற்கு அமைய, கடந்த ஜூலை மாதம் 6ஆம் திகதி அகழ்வு பணி ஆரம்பிக்கப்பட்டது.

அன்று குறைந்தது பத்து மனித உடல்களின் எலும்புகள் கிடைத்ததாக அகழ்வினை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்திருந்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews