தமிழீழத்திற்காக முதன் முதலில் உயிரீகம் செய்த அப்துல் ரவூப்பின் தந்தை ஐயா அசன் முகமது அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி

ஈழ விடுதலைக்கென தமிழ்நாட்டில் தன்னுயிரை தற்கொடையாக தந்த தம்பி அப்துல் ரவூப்பின் தந்தையும் எனது தந்தையின் உயிர் நண்பருமான ஐயா சு. அசன் முகமது அவர்கள் காலமான செய்தியறிந்து மனம் உடைந்து சுக்குநூறாகிப் போனேன்.
காரணம் ஐயா அசன் அகமது அவர்கள் ஒரு போராளியை உருவாக்கிய மாபெரும் போராளி.
அரசின் ஊரக துறையில் வேலை பார்த்திருந்தாலும் மக்களுக்கான உரிமைப்போராட்டங்களில் எப்போதும் முன்னின்றவர்.
தமிழ்நாடும் தமிழீழமும் இரு கண்களென வாழ்ந்தவர் தன் கண்ணின் மணியாக பாவித்து வளர்த்த தனது அன்பு மகன் அப்துல் ரவூப்பை பறி கொடுத்த பின்பும் எண்ணற்ற பிள்ளைகளை தன் பிள்ளைகளாக நினைத்து அனைவருக்கும் உந்து சக்தியாக ஓடி ஓடி நின்று தனது இறுதி  மூச்சுள்ளவரை இன விடுதலைக்காக இயங்கியவர்.
நீட் எதிர்ப்பு போராளி குழுமூர் அனிதா இறந்தபோது அங்கு வைத்து நான் நடத்திய போராட்டத்திற்காக 18 நாட்கள் புழல் சிறையிலடைக்கப்பட்டு பின்பு பிணையில் அரியலூரில் 40 நாட்கள் தங்கி காலை மாலை என இரு நேரங்களும் கையெழுத்திடும் தண்டனை காலத்தில் இயற்கை ஆர்வலர் சகோதரர் இரமேஷ் கருப்பையா அவர்கள் ஏற்பாடு செய்திருந்த நம்மாழ்வார் விதைத் திருவிழாவில் ஐயா அசன் முகமது அவர்களை சந்தித்தபோது முகமலர்ச்சியோடு என் கைகளைப் பற்றிக்கொண்டு என் தந்தை அ.வடமலை அவர்களுடனான நெருங்கிய நட்பினையும் இருவரும் இணைந்து நடத்திய போராட்டங்களைப் பற்றியும் சிலாகித்து பேசியதோடு தண்டனை என்று சொல்லி உங்களைப் பற்றி அறியாமல் உங்களின் பூர்வீக மண்ணிற்கே அதிகாரவர்க்கம் உங்களை  அனுப்பி வைத்திருக்கிறதே இதுவும் நல்லதிற்குத்தான். நாற்பது நாட்களும் மக்களை படியுங்கள். இந்த அனுபவம் எதிர்கால போராட்டங்களுக்கும் இன விடியலுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என மனதார வாழ்த்தினார்.
ஒவ்வொரு போராட்டங்களின் போதும் எண்ணற்ற பொய் வழக்குகளை என் மீதும் என்னோடு போராடியவர்களின் மீதும் அரசு புணைய புணைய அதன் இறுதிக் கட்டமாகத்தான் தமிழினத்தின் மிக முக்கியமான ஆளுமைகள் ஒன்று கூடி வியூகம் அமைத்து வழி காட்ட தமிழ்ப் பேரரசு கட்சி உதயமானது.
தமிழ்ப் பேரரசு கட்சியின் கட்டமைப்பிற்காக ஒவ்வொரு மாவட்டமாக பயணம் சென்ற நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தின் சார்பில் அன்றைய மாவட்ட செயலாளரும் இன்றைய மாவட்ட தலைவருமான தம்பி அசோகன் அவர்களின் ஏற்பாட்டில் இளைஞர்களின் ஒன்று கூடல் நிகழ்வு  ஏற்பாடாகியிருந்தது.அந்த கூட்டத்தில் ஒருவராக ஐயா அசன் முகமது அவர்கள் கையில் ஊன்றுகோளோடு இளைஞர்களின் மத்தியில் அமர்ந்திருந்ததை கண்டபோது மனம் சொல்லமுடியாத அளவிற்கு மகிழ்ச்சியடைந்தது.
அன்றைய கலந்துரையாடலின் இறுதிப் பகுதியில் தமிழினத்தின் தொன்மங்களைப்  பற்றியும் இழந்த நம் உரிமைகளை மீட்பது பற்றியும் மெல்லிய குரலில் அதே நேரத்தில் மிகுந்த பற்றுறுதியோடு அவர் பேசியது மறக்க முடியாதது மட்டுமல்ல இனி அந்த குரலை கேட்கவே முடியாது என்பதை எண்ணும்போது மனம் மீண்டும் மீண்டும் உடைந்து துயரத்திலாழ்கிறது. எனது நண்பரின் மகன் நீங்கள் இந்த இனத்திற்காக எடுக்கும் எல்லா இலக்குகளிலும் வெல்ல வேண்டுமென அவரது கைகளால் எனது தலையினை  அன்பொழுக தடவி வாழ்த்தியதை என் வாழ்நாளுள்ளவரை மறக்க முடியாது.
போய் வாருங்கள் ஐயா. அன்புத் தம்பி அப்துல் ரவூப்பின் இலக்கையும் உங்களின் உன்னத எண்ணங்களையும் ஓர்நாள் உறுதியாக நாங்கள் நிறைவேற்றுவோம். அதுவே உங்கள் இருவருக்கும் நாங்கள் செய்கின்ற உண்மையான அஞ்சலியாக இருக்கும். நம்பிக்கையோடு போய் வாருங்கள்.

Recommended For You

About the Author: Editor Elukainews