ஒருங்கிணைவு அரசியலுக்கு வழிவகுத்த திலீபன் – சி.அ.யோதிலிங்கம்

திலீபன் நினைவேந்தல் எதிர்பார்த்ததை விட தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் சிறப்பாக நடந்து முடிந்திருக்கின்றது. நல்லூரில் நடந்த பிரதான நிகழ்வில் சென்ற வருடம் போல குழப்பங்கள் எதுவும் இடம் பெறவில்லை. நிகழ்வு ஏற்பாட்டில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஆதிக்கம் நிலவியிருந்தாலும் கட்சி அரசியலுக்கு இடம் கொடாது நெகிழ்ச்சியாக முன்னணியினர் நடந்து கொண்டனர்.

முன்னணியின் தலைவர்கள் இருவரும் நிகழ்வுக்கு வரவில்லை. இருவரும் ஜெனிவா பயணமாகியிருந்தனர். இரண்டாம் மட்டத்தலைவர்களில் சட்டத்தரணி காண்டீபன் மட்டும் வந்திருந்தார். கீழ் மட்ட உறுப்பினர்களே நிகழ்வை நடாத்தினர். ஒழுங்கமைப்பு குறிப்பிடத்தக்கவளவு நேர்த்தியாக இருந்தது.

மணிவண்ணன் குழு கடந்த சில நாட்களாகவே நினைவுத்தூபி அருகில் திலீபனின் வரலாறு தொடர்பான கண்காட்சியை நடாத்தியிருந்தது. திலீபனின் பிறப்பு தொடக்கம் இறப்பு வரை வரலாறு புகைப்படங்கள் மூலமாகவும் எழுத்து வடிவத்திலும் காட்சிப்படுத்தப்பட்டன. குறிப்பாக திலீபன் உண்ணாவிரதமிருந்த 12 நாள் நிகழ்வுகளும் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருந்தன. மழை கொட்டிக் கொண்டிருந்த போதும் நிகழ்வுகள் சிறப்பாக இடம் பெற்றன.

நினைவு ஊர்திப் பவனிகள் பல்வேறு இடங்களிலிருந்து வந்தன. இருவர் தூக்குக் காவடியும் எடுத்திருந்தனர். பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரையும் நிகழ்வில் காணவில்லை. முன்னணி ஒழுங்கு செய்த நிகழ்வாகையால் அவர்கள் வருவதை தவிர்த்திருக்கலாம். பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கிளிநொச்சியில் நடந்த நினைவேந்தலில் அஞ்சலி செலுத்தியிருந்தார்.
நினைவேந்தலின் இன்னோர் சிறப்பம்சம் தாயகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டமையாகும். வடக்கில் நீதிமன்றங்கள் தடைவிதிக்க மறுத்ததால் படையினரின் கெடுபிடிகள் பெரிதாக இருக்கவில்லை. நல்லூரில் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் பருத்தித்துறை வீதியில் வீதித்தடைகளை ஏற்படுத்தியிருந்தனர். பொலீசார் அதனை அகற்றி வாகனங்களை செல்ல விட்டனர். எனினும் வாகனங்கள் தாங்களாகவே மாற்று வழிகளில் பயணத்தை மேற்கொண்டன.

கொழும்பில் இருந்து வந்த பொலீஸ் உயரதிகாரிகளும் சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்தவர்களும் உலர்ங்கு வானூர்தியில் பயணம் செய்து தடைக் கட்டளைக்கு முயன்ற போதும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அதற்கு இடம் கொடுக்கவில்லை. அமைதியான முறையில் இடம் பெறும் நிகழ்வுகளுக்கு பாதுகாப்பு கொடுப்பது பொலீசாரின் கடமை என்றே நீதிமன்றம் கூறியது.

கிழக்கில் மட்டக்களப்பில் திலீபனின் உருவப்படத்தை வைத்து நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றது. ஆனால் திருகோணமலையில் நிகழ்வுக்கு நீதிமன்றம் தடைவிதித்திருந்தது. எனினும் நிழல்படம் இல்லாமல் கதிரையை மட்டும் வைத்து நினைவேந்தலை மக்கள் மேற்கொண்டனர்.
இந்தத் தடவை நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னரை விட எழுச்சியாக இடம் பெற்றன. இதற்கு பல காரணங்கள் இருந்தன. அதில் முதலாவது திருகோணமலையில் திலீபனின் ஊர்தி தாக்கப்பட்டதால் மக்களுக்கு ஏற்பட்ட தார்மீகக் கோபமாகும். மக்கள் இத்தாக்குதலை தமது கூட்டிருப்புக்கும் , கூட்டுரிமைக்கும் , கூட்டடையாளத்திற்கு விழுந்த அடியாகவே பார்த்தனர். அதுவும் பூர்வீகம் அல்லாத சிங்கள குடியேற்றவாசிகள் தாக்குதலை மேற்கொண்டமை கோபத்தை இரட்டிப்பாக்கியது. எதிர்காலத்தில் நாவற்குழி வீதியில் செல்ல முடியாத நிலையையும் ஏற்படுத்துமா? என்ற அச்சத்தையும் உருவாக்கியது. மக்கள் எழுச்சிக்கு பிரதான காரணம் இதுதான்.

இரண்டாவது வடக்கில் நீதிமன்றங்கள் நினைவேந்தலுக்கு தடை விதிக்க மறுத்தமையாகும். இது ஒரு துணிவை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது. படையினர் பற்றிய பயம் வடக்கில் பொதுவாகக் குறைவு. சிங்கள மக்கள் வடக்கிற்கு வந்து தாக்கக்கூடிய நிலை இல்லை.
மூன்றாவது திலீபனின் ஊர்தி தாக்குதல் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செல்வாக்கை திடீரென பல படிகள் உயர்த்தியிருந்தன. ஏற்கனவே முன்னேறிய பிரிவினர் மத்தியில் “முன்னணியினர் மட்டுமே போராடுகின்றனர்” என்ற கருத்து உள்ளது. அந்தக்கருத்தினை இத்தாக்குதல் வலுப்படுத்தியிருந்தது. வடக்கில் ஊர்தி வரும் போது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட ஊர்தியும் தனியாக தாக்குதல் அடையாளங்களோடு கொண்டுவரப்பட்டமை மக்களின் உணர்வுகளைத் தூண்டியது. முன்னணிக்கு கிடைத்த இச் செல்வாக்கு தமது வாக்கு வங்கியை சரித்துவிடும் என ஏனைய தமிழ்த்தேசிய கட்சிகள் நினைத்தன. குறிப்பாக தமிழரசுக்கட்சியிடம் இந்த அச்சம் பெரிதாக வளர்ந்தது. வழமையாக நினைவேந்தல் நிகழ்வில் ஒதுங்கி நிற்கும் தமிழரசுக்ட்சி இந்தத் தடவை வலுவான அக்கறையைக் காட்டியது. ஊரெழுவிலிருந்தும், கொடிகாமத்திலிருந்தும் தமிழரசுக்கட்சி இளைஞர் அணியின் ஊர்திப்பவனிகள் நல்லூருக்கு வந்தன.

அண்மைக்காலமாக அமைதியாக இருந்த மணிவண்ணன் குழுவும் செயற்பாட்டு நினைவேந்தலோடு அரங்கிற்கு வந்துள்ளது. முழுமூச்சுடன் அவர்கள் செயற்படத் தொடங்கியுள்ளனர். இந்த விடயத்தில் ஊர்தியைத் தாக்கிய சிங்களத்தரப்புக்குத்தான் தமிழ் மக்கள் நன்றி கூற வேண்டும். தாக்குதல்காறர்கள் தமிழத்தரப்பை விவகாரம் நோக்கிய ஒருங்கிணைவு அரசியலுக்கு கொண்டு வந்து விட்டுள்ளனர்.

தனித்தனியாக பிரிந்த நிற்கும் தரப்புகள் உடனடியாக ஐக்கிய முன்னணிக்கு வருவார்கள் என எதிர்பார்க்க முடியாது. கட்சி அரசியலும் , குழுவாத அரசியலும் அதற்கு சாத்தியங்களைக் கொடுக்காது. தமிழ் அரசியல் தளத்தை பொறுத்தவரை தாயகத்தில் கட்சி அரசியலும் புலம்பெயர் நாடுகளில் குழுவாத அரசியலும் மேலாதிக்கம் செலுத்துகின்றது.
ஐக்கியத்தின் முதலாவது கட்டம் விவகாரங்களை நோக்கி ஒருங்கிணைவு தான். அதற்கான நிர்ப்பந்தத்தையும் அழுத்தத்தையும் மக்கள் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு கொடுக்க வேண்டும். தமது கட்சிக்கு வாக்குச்சரிவு ஏற்படும் எனக் கருதினால் கட்சி ஒருங்கிணைவுக்கு வரும். தமிழ்த்தேசிய அழுத்தம் அதிகமாக இருந்தால் குழுவாத அரசியல் ஒருங்கிணைப்பு அரசியலுக்கு வரும்.
தாயகத்தில் செயற்படும் அரசியல் கட்சிகள் மே 18 நிகழ்விலும் , குருந்தூர் மலை விவகாரத்திலும் ஒருங்கிணைவு அரசியலுக்கு வந்துள்ளன. தற்போது திலீபன் நினைவேந்தலுக்கு ஒருங்கிணைவு விருப்பத்தைக் காட்டியுள்ளன. எதிர்காலத்தில் இதனை வளர்த்தெடுத்தால் அரசியல் இலக்கு நோக்கிய ஒருங்கிணைவுக்கு கட்சிகளைக் கொண்டு வரலாம். இதற்கு தொடர்ச்சியான அழுத்தங்கள் தேவை. கட்சி அரசியலுக்கு அப்பாலான தமிழத்தேசிய சிவில் தளம் வளர்ச்சியடைந்தால் இப்பணிகள் கடினமாக இருக்கப் போவதில்லை.
புலம் பெயர் நாடுகளில் குழுவாத அரசியலைக் கடந்து ஐக்கியத்தை நோக்கி செல்வது பற்றிய உரையாடல் ஆரம்பமாகிவிட்டது. அமெரிக்காவிலுள்ள தமிழ் அமைப்புக்கள் ஒருங்கிணைவு அரசியலுக்கு வந்துள்ளன. இனிவரும் காலங்களில் ஏனைய நாட்டு தமிழ் அமைப்புகளும் ஒருங்கிணைவு அரசியலுக்கு வரலாம்.
ஒருங்கிணைவு விவகாரத்தில் கோட்பாட்டுத்தெளிவு மிக அவசியம். தேசிய இன ஒடுக்கு முறைக்கு எதிரான அரசியலை தேசமாக அணி திரண்டு மேற்கொள்ள வேண்டும். ஒருங்கிணைவு அரசியல் இல்லாமல் அதனை ஒரு போதும் சாத்தியமாக்க முடியாது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி நூறு வீதம் தேசியப்பற்றுள்ள கட்சியாக இருக்கலாம். ஆனால் தனித்து அதனால் போராட்டத்தை முன் கொண்டு செல்ல முடியாது. அவர்களால் அடையாளப் போராட்டங்களை நடாத்த முடியுமே தவிர பேரெழுச்சிகளை உருவாக்க முடியாது.

சீனாவில் சியாங்கை சேக்கின் “கொமிந்தாங்;” கட்சிக்கும் மாசேதுக்கின் கம்யூனிஸ்ட்கட்சி;க்குமிடையே வலுவான கொள்கை முரண்பாடுகள் இருந்தன. எனினும் யப்பான் ஆக்கிரமிப்பின் போது மாசேதுங்; சியாங்கைசேக்குடன் ஐக்கிய முன்னணிக்குச் சென்றார். இந்த ஐக்கிய முன்னணி இல்லாமல் யப்பான் ஆக்கிரமிப்பை ஒரு போதும் தடுத்து நிறுத்தியிருக்க முடியாது.

ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் அரசியல் களம் இரண்டாவது கட்டத்திற்கு வந்துள்ளது. முதற்கட்டத்தில் தனித்தனியாக செயற்பட்ட தமிழ்த்தரப்புகள் இரண்டாம் கட்டத்தில் விவகாரம் நோக்கிய ஒருங்கிணைவு அரசியலுக்கு வந்தள்ளன. மூன்றாம் கட்டத்தில் அவை இலக்கு நோக்கிய ஒருங்கிணைவு அரசியலுக்கு வரும்.

திலீபன் நினைவேந்தல் விவகாரத்தில் கடும் விவாதத்திற்குள்ளான இன்னோர் விடயம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் அறிக்கையாகும். சிங்களப் பிரதேசத்தினூடாக ஊர்திப்பவனி வந்தது தவறு என்றும் பொலீசார் இதனை அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். அவர் ஆளுநர் பதவியில் இருந்து கொண்டு அவ்வாறு கூறியதை சகித்துக் கொள்ளலாம். ஆனால் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்னும் பழம் பெரும் அரசியல் இயக்கத்தின் தலைவராக இருந்து கொண்டு அவ்வாறு கூற முடியாது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்சின் சிற்பி தொண்டமான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முப்பெரும் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். வரலாறு முழுவதும் தமிழ் மக்களின் போராட்டத்தை ஆதரித்தவர். மலையக மக்களின் நலன் கருதி தனித்துவமான அரசியலை முன்னெடுத்தாலும் தமிழ் மக்களின் போராட்டத்தை ஆதரிக்கத் தயங்காதவர். பிரபாகரனை இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் சுபாஸ் சந்திரபோசுடன் ஒப்பிட்டு பேசியவர்.

வடக்கு – கிழக்கு தொடர்பாக எமது அரசியல் நிலைப்பாடு வேறுபட்டது. அங்கு நிலவும் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பதே! எமது நிலைப்பாடு . என ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த போதும் ஜே.ஆருக்கு முகத்திலடித்தால் போல் கூறியவர். இவ்வாறான ஒரு கட்சியின் தலைவர் வழிவந்தவர் தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு எதிராக அறிக்கை விடுகின்றார் என்றால் அது பூட்டன் தொண்டமானின் அரசியல் கொள்கைகளுக்கு துரோகம் செய்ததாகவே அமையும்.

தாக்குதல் நடைபெற்ற “சர்தாபுர” “சாரதாபுரம்” என்ற தமிழ்ப் பெயர் கொண்ட கிராமம். குடியேற்றம் என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்பட்ட கிராமம். இதனை சிங்களப் பிரதேசம் என எவ்வாறு கூற முடியும். இந்த வீதியால் தமிழ் மக்களின் அபிலாசைகளை கொண்டு செல்ல முடியாது என்றால் நாளை நாவற்குழி வீதியாலும் ஊர்தி செல்ல முடியாது என செந்தில் தொண்டமான் சொல்லக் கூடும். இது விடயத்தில் செந்தில் தொண்டமானின் கருத்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் உத்தியோக பூர்வ நிலைப்பாடா? என்பதை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வெளிப்படுத்த வேண்டும்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரபாகணேசனும் ஊர்திப் பவனியைக் கண்டித்து அறிக்கை விட்டிருக்கின்றார். அவர் பிரபலமற்ற அரசியல்வாதி என்பதால் தமிழ் மக்கள் அதனைக் கணக்கெடுக்கவில்லை.

இராஜதந்திரத்தில் கோட்;டை விடும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஊர்திப்பவனியை முஸ்லீம்களுடன் இணைத்தமை தொடர்பாக கவனமாக அறிக்கை விட்டுள்ளது. கஜேந்திரன் முஸ்லீம் மக்கள் ஊர்திப் பவனியை எதிர்க்கவில்லை. புலனாய்வு படையினர் முயற்சி செய்தும் முஸ்லீம் மக்கள் அதற்கு இடம் கொடுக்கவில்லை எனக் கூறியிருக்கின்றார்.

உண்மையும் அது தான். ஊர்தியை தொடர்ந்து வந்த புலனாய்வாளர்கள் முஸ்லீம் பிரதேசத்தில் வைத்தே தாக்குதலை நடாத்த எண்ணியிருந்தனர். முஸ்லீம் மக்கள் அதற்கு சிறிய சந்தர்ப்பத்தைக் கூட கொடுக்க முன் வரவில்லை. அக்கரைப்பற்று, காத்தான்குடி, நாவலடி போன்ற இடங்களில் அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. அது தோல்வியில் முடிந்த போதே சிங்களப்பிரதேசத்தில் வைத்து தாக்குதலை நடாத்தியுள்ளனர்.

முஸ்லீம் அரசியல் வாதிகளில் அதாவுல்லா மட்டுமே ஊர்திப்பவனிக்கு எதிராக கருத்துக்களை கூறியிருக்கிறார். ரிசாத் பதியுதீன் , கிண்ணியா நகரசபைத் தலைவர் போன்றோர் தாக்குதலைக் கண்டித்துள்ளனர்.

இந்தக்கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் போது முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா தனது பதவியை இராஜினமாச் செய்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். தனது தீர்ப்புக்கட்டளைகளை மாற்றும்படி தனக்கு பல்வேறு அழுத்தங்கள் அரச மட்டத்தில் இருந்து வந்ததினாலேயே இராஜினமா செய்ததாக கூறியுள்ளார்.

இன அழிப்பு இலங்கை அரசின் தீர்மானம் எந்த அரசாங்கம் பதவிக்கு வந்தாலும் செய்து கொண்டேயிருக்கும். அளவில் மட்டும் வேறுபாடுகள் இருக்கலாம். முதன் முதலாக அரச நீதித்துறையின் ஒரு பகுதி அரசின் திர்மானத்தை நிறைவேற்ற மறுத்துள்ளது. மக்களுக்குத்தான் நீதிபதி அரசுக்கல்ல என்ற செய்தியை அது சொல்லியிருக்கின்றது.
இது பற்றியும் தமிழ்த்தரப்பை தூக்கத்திலிருந்து தட்டி எழுப்புவது பற்றியும் அடுத்த வாரம் பார்ப்போம்.

Recommended For You

About the Author: Editor Elukainews