அதிகளவில் இரத்தப்போக்கு காணப்பட்ட நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு நெஞ்சறை சத்திர சிகிச்சை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
3 மணித்தியாலங்களில் பொது சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் எம்.மதுரகீதன் தலைமையிலான வைத்திய நிபுணர்கள் குழு இணைந்து சத்திர சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 5 ஆம் திகதி இரவு மன்னார் பொது வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் குறித்த நபர் அனுமதிக்கப்பட்டார்.
இதனிடையே போதுமான சீடி ஸ்கான் மற்றும் நெஞ்சறை சத்திர சிகிச்சை நிபுணத்துவ வசதி என்பன மன்னார் வைத்தியசாலையில் இல்லாத காரணத்தினால் அந்த நோயாளியை யாழ்ப்பாணம் அனுப்புவதாக திர்மானிக்கப்பட்ட போதும் அவரை வெலிசறை நெஞ்சு வைத்தியசாலைக்கு அனுப்புமாறு யாழ்ப்பாண வைத்தியசாலையில் இருந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
இருப்பினும் சுமார் 3 லீற்றர் குருதி ஏற்கனவே இழக்கப்பட்டதால் நோயாளியை அங்கு கொண்டு செல்வதில் ஆபாயம் காணப்பட்டதால் அவருக்கு மன்னார் வைத்தியசாலையிலேயே சிகிச்சை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.