இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகளை அரசியல் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட தரப்புகளிடம் எடுத்துக் கூறி எந்தவொரு பயனும் கிட்டாத நிலையில், பாதிக்கப்பட்ட மீனவர்கள் தாங்களே களத்தில் இறங்கியுள்ளனர்.
அந்தவகையில் மீனவர்களிடம் உண்டியல் மூலம் பணம் சேகரித்து, இந்தியாவிற்கு சென்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தரப்புகள் மற்றும் அங்குள்ள மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு யாழ்ப்பாண மாவட்ட மீனவ அமைப்புக்கள் திட்டமிட்டுள்ளன.
அந்தவகையில் இந்த உண்டியல் குலுக்கும் வேலைத்திட்டமானது நேற்று முன் தினம் வடமராட்சி பகுதியில் ஆரம்பமானது. இரண்டாவது நாளான நேற்றையதினம் மாதகல் பகுதியில் உள்ள மீனவர்களிடமும் மக்களிடமும் உண்டியல் மூலம் பணம் சேகரிக்கப்பட்டது.
இதில் யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசங்களின் உப தலைவர் அந்தோனிப்பிள்ளை பிரான்ஸிஸ் ரட்ணகுமார், மாரீசன்கூடல் குசுமாந்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம், வலி. தென்மேற்கு கடற்றொழில் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதாஸ், மாதகல் மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.