சம்பந்தன் – சுமந்திரன் பனிப்போர் பலத்த வாதப்பிரதிவாதங்களை தமிழ்ச்சூழலில் உருவாக்கியுள்ளது. சம்பந்தனுக்கு முதுமை நிலை ஏற்பட்டுள்ளமையால் செயற்பாட்டு அரசியலில் பங்களிப்புச்செய்ய முடியாதவராக இருக்கின்றார். இது வரை இடம் பெற்ற 288 பாராளுமன்ற நாட்களில் வெறுமனே 39 நாட்கள் தான் பாராளுமன்றத்திற்கு சம்பந்தன் சமூகமளித்திருக்கின்றார். திருகோணமலை மக்களை பிரதிநிதித்துவம் செய்து செயற்படுத்த வேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன. எனவே சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து இன்னோர் பிரதிநிதிக்கு வழிவிட வேண்டும் என்பதே சுமந்திரன் வெளியிட்ட கருத்தாகும்.
இவ்வாறான கருத்தை சுமந்திரனிடம் இருந்து எவரும் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் சுமந்திரனும் சம்பந்தனும் ஒருவருக்கொருவர் பக்கபலமாக தமிழ் அரசியலில் இருந்திருக்கின்றனர். முன்னர் ஒரு தடவை சுமந்திரனுக்கும் , தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாருக்குமிடையில் நல்லூரில் பகிரங்க விவாதம் இடம் பெற்றது. அப்போது ஒரு இளம் சிரேஸ்ட சட்டத்தரணி சம்பந்தனை கருத்தில் கொண்டு முதியவர்களை ஏன் அரசியல் தலைமையில் வைத்திருக்கின்றீர்கள் என சுமந்திரனைக் கேட்டிருந்தார். சுமந்திரன் அக்கேள்வி கேட்டவரையே காரசாரமாக சாடி கண்டித்திருந்தார். 2009 க்கு பின்னர் சம்பந்தனும், சுமந்திரனும் நகர்த்துகின்ற அரசியலே தமிழ் அரசியல் என்ற தோற்றம் உருவாகியிருந்தது. ஏனையவர்களை புறக்கணித்து விட்டு தனித்த ஓட்டத்தையே இருவரும் மேற்கொண்டிருந்தனர்.
தற்போதைய பனிப்போரில் சுமந்திரனின் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல கருத்துக்கள் வெளிவரத்தொடங்கியுள்ளன. தமிழரசுக்கட்சிக்குள்ளே இடம்பெறும் கோஷ்டிப்பூசல்களும் அரங்கிற்கு வந்துள்ளன. தமிழரசுக்கட்சிக்குள் சுமந்திரன் ஆதரவுக்குழு சுமந்திரன் எதிர்ப்புக்குழு என இரு குழுக்கள் இருக்கின்றமை பரம ரகசியமல்ல.
தற்போது சுமந்திரனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தவர் வடமாகாண சபையின் முன்னாள் சபாநாயகர் சி.வி.கே.சிவஞ்ஞானம். அவர் கட்சிக்குள் தலைமை மாற்றம் வேண்டும் எனக் கூறியிருக்கின்றார். புதிய தலைமுறையிடம் தலைமையை ஒப்படைக்க வேண்டும் எனக்கூறியிருக்கின்றார். தலைவர் மட்டுமல்ல தலைவர், செயலாளர், பொருளாளர் என முழுமையாக தலைமை மாற்றம் வேண்டும் என்பது அவரது கருத்தாகும். இங்கு சம்பந்தன் மட்டுமல்ல மாவையும் அவரது இலக்காக உள்ளது கட்சியை புதிய தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறுவதன் மூலம் தன்னையும் அவர் வெளியே வைத்திருக்கின்றாரா? என கேள்வியும் எழுகின்றது.
எதிரணியில் சட்டத்தரணி தவராசா கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றார். ஏற்கனவே அவருக்கும் சுமந்திரனுக்குமிடையில் பலத்த விவாதப்பிரதிவாதங்களும் கட்சியின் செயல்பாடு தொடர்பாக இடம்பெற்றிருக்கின்றது. தவராசா சம்பந்தனை பதவி விலகும்படி கேட்பதற்கு சுமந்திரன் யார் என கேட்டிருக்கின்றார்.
தமிழரசுக்கட்சிக்கு வெளியே நீதியரசர் விக்னேஸ்வரனின் கருத்து முக்கியமானதாக இருந்தது. அதில் சில நியாயப்பாடுகளும் உள்ளன. சம்பந்தன் வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் ஒரு பொது அடையாளம். அதனை அகற்றினால் அதனை நிரப்புவதற்கு எவரும் இல்லை. சர்வதேச இராஜதந்திரங்கள் மட்டத்தில் ஏற்புடமை உடையவர் சம்பந்தன் தான் எனவே அவர் பதவி விலகக் கூடாது எனக் கூறியிருக்கின்றார்.
உண்மையில் இங்கு இரண்டு விடயங்கள் முக்கியமானவை ஒன்று திருகோணமலை மாவட்டத்தின் நிலைமை. இரண்டாவது தலைமையில் இருப்பவர் கட்டாயம் பாராளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டுமா? என்கின்ற விடயம். திருகோணமலை மாவட்டம் தமிழ்ப் பிரதேசத்தின் ஏனைய மாவட்டங்களைப் போன்றதல்ல. நாள்தோறும் நெருக்கடிகளைச் சந்திக்கின்ற மாவட்டம். ஆக்கரமிப்புக்கள் நாள்தோறும் நடைபெறுகின்ற பிரதேசம். அவை தொடர்பாக குறைந்த மட்டத்திலாவது முகம் கொடுப்பதற்கு அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி ஒருவர் தேவை. பிரச்சினைகள் இடம் பெறுகின்ற போது களத்திற்கு உடனடியாகச் செல்ல வேண்டும். அரசியல் அரங்குகளில் அதனை உடனடியாக பேசு பொருளாக்க வேண்டும். மக்கள் பிரதிநிதி இல்லாமல் இவற்றை மேற்கொள்ள முடியாது. ஏற்கனவே சம்பந்தன் இவற்றை செய்தாரா? என்பது வேறு கதை .
இந்த நெருக்கடி திருகோணமலை மாவட்டத்திற்கும் உண்டு. அப்பாறை மாவட்டத்திற்கும் உண்டு. இரண்டு மாவட்டங்களுக்கும் ஒவ்வொரு பிரதிநிதிகள் மட்டும் தான் இருக்கின்றனர். கல்முனையைச் சேர்ந்த நண்பர் ஒருவர் கையெழுத்து வாங்குவதற்காகவாவது எங்களுக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் வேண்டும் என கூறியிருந்தார். அப்பாறை மாவட்டத்தில் கலையரசன் தன்னால் முடிந்தவரை மாவட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகளை பொது அரங்கிற்கு கொண்டு வந்திருக்கின்றார். சம்பந்தன் அவ்வாறு கொண்டு வந்தார் எனக் கூற முடியாது. நாள்தோறும் திருகோணமலை மாவட்டத்தில் இடம் பெறுகின்ற சிங்கள ஆக்கிரமிப்புக்களை அவர் மௌனமாக பார்த்துக் கொண்டிருக்கும் நிலையே உள்ளது. பாராளுமன்றத்திலும் அதனை அவர் பெரியளவிற்கு பேசுபொருளாக்குவதில்லை.
கனவான் அரசியல் திருக்கோணமலை மாவட்டத்திற்கு ஒரு போதும் உதவப்போவதில்லை. அங்கு தமிழ் மக்களின் அடையாளமாக இருப்பது திருகோணமலை நகரம் தான். உடலில்; புற்றுநோய் கொஞ்சம் கொஞ்சமாக அரிப்பது போல திருகோணமலை நகரத்தில் சிங்கள ஆக்கிரமிப்பு இடம் பெறுகின்றது. உலகில் இடம் பெறுகின்ற அனைத்து குடியேற்ற முறை திருகோணமலை மாவட்டத்தில் பரீட்சித்து பார்க்கப்படுகின்றன. திட்டமிட்ட விவசாயக் குடியேற்றம், சட்டவிரோத விவசாய குடியேற்றம், வியாபாரக் குடியேற்றம், மீனவர் குடியேற்றம், கைத்தொழில் குடியேற்றம், புனித பிரதேச குடியேற்றம் முப்படை பண்ணைகளுக்கான குடியேற்றம் என்பன இவற்றுள் அடங்கும். அல்லைத்திட்டம், கந்தளாய் திட்டம், மொறவேவாத்திட்டம்;, மகாதிவுல்வெவத்திட்;டம், பதவியாத்திட்டம் என்கின்ற திட்டமிட்ட விவசாயக் குடியேற்றங்கள் தமிழ் மக்கள் ஏற்கனவே அறிந்தவையே! எனவே தமிழ்த்தரப்பு எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டிய மாவட்டம். அவ்வாறு விழிப்புடன் இருந்தால் தான் திருகோணமலை மாவட்டத்தில் எஞ்சியிருக்கின்ற தமிழ் பிரதேசங்களையாவது பாதுகாக்க முடியும்.
எனவே சம்பந்தன் முதுமை காரணமாக இயலாத நிலையில் இருக்கும் போது மாற்று பிரதிநிதி தேவை என்பது நியாயமானதே!
இரண்டாவது தலைவராக இருப்பவர் கட்டாயம் பாராளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தமிழ் நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் இராமதாஸ் பாராளுமன்றத்திலோ சட்டமன்றத்திலோ உறுப்பினராக இல்லை. ஆனால் கட்சியின் தீர்மானங்கள் தொடர்பாக இறுதி முடிவை அவரே எடுக்கின்றார். இந்திய மத்திய அரசும் , தமிழ் நாடு மாநில அரசும் அவருக்குரிய மதிப்பைக் கொடுத்து அவருடன் உரையாடி வருகின்றது. முதுமை நிலையில் இருப்பவர்கள் செயற்பாட்டுத் தலைமை என்ற நிலையில் இருக்காமல் கௌரவ தலைமை என்ற நிலையில் இருக்கலாம். தந்தை செல்வா இறுதிக்காலத்தில் தந்தை என்ற நிலையில் இருந்தாரே தவிர செயற்பாட்டுத் தலைவராக இருக்கவில்லை. உண்மையில் செயற்பாட்டுத் தலைவராக இருந்தவர் அமிர்தலிங்கம் தான்.
இரண்டாவது தலைவராக இருப்பவர் கட்டாயம் பாராளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தமிழ் நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் இராமதாஸ் பாராளுமன்றத்திலோ சட்டமன்றத்திலோ உறுப்பினராக இல்லை. ஆனால் கட்சியின் தீர்மானங்கள் தொடர்பாக இறுதி முடிவை அவரே எடுக்கின்றார். இந்திய மத்திய அரசும் , தமிழ் நாடு மாநில அரசும் அவருக்குரிய மதிப்பைக் கொடுத்து அவருடன் உரையாடி வருகின்றது. முதுமை நிலையில் இருப்பவர்கள் செயற்பாட்டுத் தலைமை என்ற நிலையில் இருக்காமல் கௌரவ தலைமை என்ற நிலையில் இருக்கலாம். தந்தை செல்வா இறுதிக்காலத்தில் தந்தை என்ற நிலையில் இருந்தாரே தவிர செயற்பாட்டுத் தலைவராக இருக்கவில்லை. உண்மையில் செயற்பாட்டுத் தலைவராக இருந்தவர் அமிர்தலிங்கம் தான்.
நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்க விடுதலை போராட்டத்தை தலைமையேற்று நடாத்தியவர். 27 வருடங்கள் சிறையில் இருந்தவர். ஒரு தடவை மட்டுமே ஜனாதிபதியாக இருந்தார். பின்னர் அடுத்த தலைமுறையிடம் பதவிகளை ஒப்படைத்து ஆலோசனையாளராகவே பணியாற்றினார். எனவே சம்பந்தன் கௌரவத் தலைவராக இருப்பதை எவரும் ஆட்சேபிக்கப்போவதில்லை.
இந்த விவகாரத்தில் சுமந்திரனின் வியூகம் வேறானது. தமிழரசுக்கட்சியின் தலைமைப் பொறுப்பைக் கைப்பற்றுவதே அவரது வியூகம். அதற்கு இடைஞ்சலாக இருப்பவர் இருவர் தான். ஒன்று சம்பந்தன். மற்றையவர் மாவை தேனாதிராஜா இருவரையும் களத்தில் இருந்து அகற்ற சுமந்திரன் விரும்புகின்றார். கட்சியின் மாநாட்டை கூட்டும் படியும் அவர் வற்புறுத்துகின்றார். அதனை நோக்கியே காய் நகர்த்துவதற்காகவும் செய்திகள் வருகின்றன.
இந்த விடயத்தில் சுமந்திரனின் நகர்வு கிழக்கிலிருந்த வடக்கு நோக்கிச் செல்வதாகவே உள்ளது. வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிச் செல்வதற்கு அவரால் முடியாது. அதனால் கிழக்கிலிருந்து வடக்கை நோக்கிச் செல்கின்றார். கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டம் அவரது செல்வாக்கில் உள்ளது. சாணக்கியன் ஒரு வகையில் சுமந்திரனின் சீடப்பிள்ளையே! மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக்;கட்சியின் பாரம்பரிய உறுப்பினர்கள் பலவீனமாகவே உள்னர். அம்பாறை மாவட்டத்தில் கலையரசன் சுமந்திரனின் வியூகத்தினால் பதவிக்கு வந்தவர். எனவே சுமந்திரனுக்கு எதிராக அவரால் செயற்பட முடியாது. வடக்கில் மன்னார் கிளிநொச்சி மாவட்டங்கள் சுமந்திரனின் செல்வாக்கின் கீழ் இல்லை. மன்னாரில் கத்தோலிக்க மத பீடத்திற்கும் சுமந்திரனுக்குமிடையே நல்ல உறவுகள் இருக்கின்றன எனக் கூற முடியாது. கிளிநொச்சி மாவட்டத்தில் குறுநில மன்னராக சிறீதரன் இருக்கின்றார். அவர் கட்சியில் உள்ள வேறு எவரையும் கிளிநொச்சிக்குள் அனுமதிப்பதில்லை.
உள்ராட்சி சபை தேர்தலுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்த போது சுமந்திரன் சிபார்சு செய்தவர்களை சிறீதரன் பட்டியலில் சேர்க்கவில்லை. சுமந்திரன் தனியாக சுயேட்சைப்பட்டியலில் வேட்பாளர்களை இறக்கியதும் நடந்திருக்கின்றது. முல்லைத்தீவு மாவட்டத்திலும் பெரிய செல்வாக்கு சுமந்திரனுக்கு இருக்கின்றது எனக் கூற முடியாது. வவுனியா, யாழ்ப்பாணம் மாவட்டங்களில் கணிசமான செல்வாக்கு சுமந்திரனுக்கு உள்ளது என்பது உண்மை தான். குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் மத்தியதரவர்க்கத்தினரில் பலர் சுமந்திரனின் ஆதரவாளர்களாக உள்ளனர். முன்னாள் உள்;ராட்சி சபை உறுப்பினர்களில் கணிசமானோர் சுமந்திரனுக்கு ஆதரவாக உள்ளனர். அவற்றை வைத்துக் கொண்டு தமிழரசுக்கட்சியின் பொதுக்குழுவில் தனக்கு பெரும்பான்மை ஆதரவு இருக்கும் என சுமந்திரன் கருதுகின்றார்.
இந்த வியூகத்தின் அடிப்படையில் அம்பாறை , மட்டக்களப்புக்கு அடுத்தபடியாக திருகோணமலையை கைப்பற்ற சுமந்திரன் முயற்சிக்கின்றார். அங்கு இரண்டாவது நிலையில் உள்ள குகதாசன் சுமந்திரனின் ஆதரவாளராக மாறியிருக்கின்றார். இதனை சுமந்திரன் – குகதாசன் கூட்டு வியூகம் எனவும் கூறலாம்.
பிரக்ஞை பூர்வ தமிழ்த்தேசிய சக்திகள் சுமந்திரனையும், சம்பந்தனையும் ஒருங்குசேர நிராகரிக்கின்றனர். தமிழ் மக்களின் அரசியலை அவர்கள் நகர்த்துவதில்லை. தற்போதைய தேக்க நிலைக்கு அவர்கள் தான் காரணம் என்பது அவர்களது அசைக்க முடியாத கருத்தாகும். கோட்பாட்டு ரீதியாகவும் தமிழ் மக்களின் அரசியலை அவர்கள் முன் கொண்டு செல்லவில்லை என இத்தேசியவாதிகள் கூறுகின்றனர்.
தமிழ் மக்களின் அரசியலை அடையாள அரசியலாக்கவே சம்பந்தனும் சுமந்திரனும் பார்க்கின்றனர். தமிழ் மக்களின் அரசியல் அடையாள அரசியல் அல்ல. இறைமை அரசியல் என்பதே இவர்களின் வாதம். கூட்டுப்பொறுப்பில்லாமல் தமிழர் விவகாரங்களில் சுமந்திரன் தனித்து ஓடுவதையும் அவர்கள் நிராகரிக்கின்றனர்.
மொத்தத்தில் இவ் விவகாரம் வெறுமனவே பாராளுமன்ற உறுப்பினர் பிரச்சினையல்ல. இதற்குள் தலைமைப்பிரச்சினையும் இருக்கின்றது. தமிழ் அரசியல் எவ்வாறு செல்ல வேண்டும் என்ற கோட்பாட்டு பிரச்சினையும் உள்ளது.
மொத்தத்தில் இவ் விவகாரம் வெறுமனவே பாராளுமன்ற உறுப்பினர் பிரச்சினையல்ல. இதற்குள் தலைமைப்பிரச்சினையும் இருக்கின்றது. தமிழ் அரசியல் எவ்வாறு செல்ல வேண்டும் என்ற கோட்பாட்டு பிரச்சினையும் உள்ளது.
சுமந்திரன் மீண்டும் தமிழ்ச்சூழலில் ஒரு உரையாடலுக்கு களம் அமைத்து கொடுத்திருக்கின்றார். இது வரவேற்கத்தக்கதே
“நூறு பூக்கள் மலரட்டும்”