வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குற்றத்தை ஒப்புக்கொள்ளும் ரணில் அரசாங்கம்.

வலிந்து காணாமல் ஆக்கிய குற்றங்களை மேற்கொண்டுள்ளதை தாமே ஒப்புக்கொள்ளும் வகையிலேயே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நிதி ஒதுக்கீடு அமைந்துள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா தெரிவித்துள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதி கோரி தாம் முன்னெடுக்கும் போராட்டங்களை மழுங்கடிப்பதற்கான மற்றுமொரு திட்டமாகவே இலங்கை அரசாங்கத்தின் புதிய வரவு செலவுத் திட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கான இழப்பீட்டிற்கான நிதி ஒதுக்கும் நடவடிக்கை அமைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இலங்கை அரசாங்கத்திடம் நீதி கேட்டு, அந்த முயற்சி தோல்வி கண்ட நிலையிலேயே தாம் சர்வதேசத்திடம் நீதி கேட்டு போராடிவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமது உறவுகளைத் தேடும் போராட்டம் 2, 500 நாட்களை அண்மித்துள்ளதாகவும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

நீதி கோரிய தமது போராட்டத்தை குழப்புவதற்கும் நோக்குடன் இழப்பீடுகள் வழங்குவது உள்ளிட்ட பல திட்டங்களை அறிவித்து ஸ்ரீலங்காவின் கடந்த அரசுகள் முயற்சித்த போதிலும் தமது போராட்டம் சர்வதேச நீதியை வேண்டி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் தமது போராட்டத்தை மழுங்கடிக்கும் முயற்சியாக தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கான இழப்பீடு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என லீலாதேவி ஆனந்தநடராஜா தெரிவித்துள்ளார்.

ஓ.எம்.பி எனப்படும் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய அலுவலகம் ஊடாகவும் தமக்கு இழப்பீடு வழங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews