வடக்கு தென்னை முக்கோண வலயத்தில் பயிர்செய்கை நடவடிக்கை கௌரவ ஆளுநரால் ஆரம்பித்து வைப்பு!

வடக்கு தென்னை முக்கோண வலயத்தில் பயிர்செய்கை நடவடிக்கை கௌரவ ஆளுநரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நாட்டின் இரண்டாவது தென்னை முக்கோண வலயத்தில் தென்னம் பிள்ளைகளை நாட்டும் நிகழ்வு இன்று ஆரம்பிக்கப்பட்டது. கிளிநொச்சி – இயக்கச்சி பகுதியில் வட மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில், தென்னம் பிள்ளைகள் நடப்பட்டு செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய , ஒரு இலட்சம் தென்னம் பிள்ளைகளை நடும் நிகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டது.

வட மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ். கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதிஸ்வரன், தென்னை பயிர்செய்கை சபையின் தலைவர் ஏ.வீ.கே.மாதவி ஹேரத், அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.

இரண்டாவது தென்னை முக்கோண வலயம் கடந்த செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு ஆகிய 03 மாவட்டங்களுடன், வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களையும் உள்ளடக்கி வடக்கு தென்னை முக்கோண வலயம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. சுமார் 40 ஏக்கர் நிலப்பரப்பில் 03 மாதங்களுக்குள் நான்கு இலட்சத்து 50 ஆயிரம் தென்னம் பிள்ளைகளை பயிர்செய்கை செய்யும் நோக்குடன் இந்த செயற்திட்டம் முன்னேடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் செய்கையாளர்களுக்கு இலவசமாக தென்னம் பிள்ளைகளை வழங்கும் இன்றைய நிகழ்வின் போது, வடக்கில் மீள்குடியேற்றத்தின் பின்னர் வழங்கப்பட்ட தென்னம் பிள்ளைகள் இன்று மக்களின் வாழ்வாதாரமாக மாறியுள்ளதையிட்டு தாம் மகிழ்ச்சியடைவதாக கௌரவ ஆளுநர் குறிப்பிட்டார். அதேபோல இன்று ஆரம்பிக்கப்படும் இந்த திட்டத்தினூடாக வழங்கப்படும் தென்னம் பிள்ளைகள், வட மாகாணத்தில் நலிவுற்றிருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த எழுந்து நிற்கும் என ஆளுநர் நம்பிக்கை வெளியிட்டார். எவ்வாறாயினும் தென்னை பயிர் செய்கையாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் நன்கறிந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, நட்புசார் விவசாயத்தை விஸ்தரிக்கும் நோக்கில் எதிர்வரும் ஜனவரி மாதம் புதிய கையடக்க தொலைபேசி செயலி ஒன்றை அறிமுகபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண கௌரவ ஆளுநர் கூறினார். வடக்கில் விவசாய முதலீடுகளை மேற்கொள்ள விரும்புவோருக்கான அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்
தென்னை முக்கோண வலயத்தை வட மாகாணத்தில் ஆரம்பிக்க ஆலோசனை வழங்கிய ஜனாதிபதிக்கு இதன்போது வட மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தனது நன்றிகளை தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews