அமெரிக்கத் தூதுவருக்கு அச்சுறுத்தல் விடுத்த சரத் வீரசேகர! சபையில் அம்பலப்படுத்திய சந்திம

தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர இலங்கைக்கான தூதுவர் ஜூலி சங்கிற்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளமை தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போது சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் உரையாற்றுகையில், “சிறிலங்கா நாடாளுமன்றம் எவ்வித கட்டுப்பாடுகளுமில்லாமல், எண்ணம் போல் செயற்படுகிறது.

நாடாளுமன்றத்தில் இடம்பெறும் செயற்பாடுகளால் ஒட்டுமொத்த மக்களும் நாடாளுமன்ற கட்டமைப்பை வெறுக்கிறார்கள். குறிப்பாக தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவரது செயற்பாடுகளினால் நாடாளுமன்றத்தின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின் 9 (அ) பிரிவில் நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை மற்றும் குழுக்களின் அறிக்கைகள் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் வெளியாட்களுக்கு வழங்குவது தண்டனைக்குரிய குற்றம்’ என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

துறைசார் மேற்பார்வை குழுவின் முன்னெடுக்கப்பட்ட தீர்மானங்களை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்காமல் கடந்த மாதம் 19 ஆம் திகதி ஊடங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது முற்றிலும் நாடாளுமன்ற கோட்பாடுகளுக்கு எதிரானது.

மேலும், தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இது முற்றிலும் தவறானதொரு செயற்பாடு.

வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழு ஊடாக எச்சரிக்கை விடுக்க முடியுமா???

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரலவின் படுகொலை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்த படுகொலை தொடர்பில் துறைசார் மேற்பார்வை குழு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. அத்துடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆகவே இவ்விடயம் முற்றிலும் தவறானது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகரவின் தன்னிச்சையான தீர்மானங்களினால் எமது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது.

ஆகவே இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்ற சிறப்புரிமை மற்றும் ஒழுக்கவியல் குழு ஊடாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்துகிறேன்” என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews