தேசிய கலை இலக்கியப் பேரவையின் 50 ஆவது ஆண்டு விழா!

மக்கள் சார்பான முற்போக்குக் கலை இலக்கியப் பாதையில் கடந்த 50 ஆண்டுகளாகப் பயணிக்கின்ற தேசிய கலை இலக்கியப் பேரவையின் 50 ஆவது ஆண்டு விழா வரும் 23.12.2023 சனிக்கிழமை மாலை 3 மணியளவில் வேம்படி வீதியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்திற்கு அருகில் அமைந்துள்ள றிம்மர் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைவரும், எழுத்தாளரும், தாயகம் சஞ்சிகையின் ஆசிரியருமான க.தணிகாசலம் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள இந் நிகழ்வில் வாழ்த்துரைகளை கவிஞரும், மொழிபெயர்ப்பாளரும், பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் ஓய்வுநிலை அதிபருமான சோ. பத்மநாதன் (சோ. ப) அவர்களும், எழுத்தாளரும், வவுனியா கல்வியியற் கல்லூரியின் ஓய்வுநிலை உப பிடாதிபதியுமான ந. பார்த்தீபன் அவர்களும், எழுத்தாளரும், சிரேஷ்ர சட்டத்தரணியுமான சோ.தேவராஜா அவர்களும், தேசிய கலை இலக்கியப் பேரவையின் பொதுச் செயலாளரும், மட்டக்களப்பு கல்வியியற் கல்லூரியின் ஓய்வுநிலைப் பீடாதிபதியுமான சிவ. இராஜேந்திரன் அவர்களும் ஆற்றவுள்ளனர்.

தொடர்ந்து கலை நிகழ்வுகள் வரிசையில் கே.ஏ.சுப்பிரமணியம் நினைவு சத்தியமனை நூலக மாணவர்களின் கவிதா நிகழ்வும், யாழ் மாவட்ட தேசிய கலை இலக்கியப் பேரவையின் கலைக் குழுவினரும், வவுனியா மாவட்ட தேசிய கலை இலக்கியப் பேரவைக் கலைக் குழுவினரும் வழங்குகின்ற பாடல்களும், தர்மலிங்கம் ஸ்ரீபிரகாஸ் அவர்களின் தலைமையில் ‘மக்கள் வாழ்வைச் சீர்படுத்துவது நிகழ்காலத்தின் புரிதலா? எதிர்காலம் பற்றிய ஏக்கமா?’ என்ற தலைப்பிலான பட்டிமன்றம் தம்பிப்பிள்ளை சுதன், பாலச்சந்திரன் தினேஸ், பரமநாதன் விஜிந்தன், ஆனந்தகுமார் கபிலாயன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ளன.

மேலும் வவுனியா மாவட்ட தேசிய கலை இலக்கியப் பேரவையின் தயாரிப்பில் நடராஜா பார்த்தீபன் அவர்களின் நெறியாள்கையில் ‘ஏதோ உயிரோடு இருக்கிறோம்’ என்ற குறுநாடகமும், செம்முகம் ஆற்றுகைக் குழுவின் தயாரிப்பில் கு.சாரங்கன் அவர்களின் நெறியாள்கையில் ‘ஊன் ஆட்டம்’ மற்றும் க.சத்தியசீலனின் நெறியாள்கையில் ‘தேவை’ ஆகிய குறுநாடகங்களும், சண் நாடகக் குழுவினரின் தயாரிப்பில், புண்ணியமூர்த்தி கணேசராசா அவர்களின் நெறியாள்கையில் ‘என்னவென்று சொல்வேனடி?’ நாடகமும் இடம்பெறவுள்ளன. நிகழ்ச்சித் தொகுப்பினை சபா தனுஜன் அவர்கள் மேற்கொள்வார்.

இந் நிகழ்வின் விசேட அம்சமாகப் புகைப்படக் கண்காட்சி மற்றும் புத்தகக் கண்காட்சி ஆகியனவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கலை இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் தவறாது இந் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு தேசிய கலை இலக்கியப் பேரவையினர் அழைப்புவிடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews