மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு அடுத்து ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை உணர்வு பூர்வமாக நேசித்தவர் புரட்சிக் கலைஞன் கேப்டன் விஜயகாந் அவர்கள். கேப்டன் சிறந்த நடிகராக இருந்தாலும் ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தில் விசுவாசமாக இருந்தவர் என தமிழீழ விடுதலை இயக்க யாழ் மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஈழத் தமிழர் விடுதலை போராட்டத்தை உயிராக நேசித்தார் என்பதற்கு விஜயகாந்தின் நூறாவது திரைப்படம் கேப்டன் பிரபாகரன் என்ற பெயரில் வெளியாகியதுடன் தன்னுடைய மூத்த மகனுக்கு விஜய் பிரபாகரன் என பெயர் வைத்தமை சிறந்த எடுத்துக் காட்டு இவற்றுக்கு அப்பால் தன்னால் இயன்ற நிதி உதவியையும் விடுதலைப் போராட்டத்திற்கு வாரி வழங்கிய வள்ளல் அத்துடன் ஏழைகளுக்கு வாரி வழங்கிய ஏழைகளின் தலைவன்.
திரைப்படத்திலும் அரசியலிலும் நிஜ வாழ்க்கையிலும் ஒரே பேச்சு அதே சிந்தனை இவையே அவரது சிறப்பு. அன்னாரின் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்றும் ஈழதேசம் மறவாது.
எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவிக்கின்றோம் – என குறிப்பிடப்பட்டுள்ளது.