ஊடகங்களுக்கு திடீரென அனுமதி மறுப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு தாக்கத்தினால் மூன்று மரணங்கள் நிகழ்ந்துள்ளன. 4269 பேர் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2505 டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி நேற்றையதினம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் டெங்கு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை உரிய அதிகாரிகள் ஊடகங்களுடன் இணைந்து செய்து வருகின்றனர்.

இது இவ்வாறு இருக்கையில் இன்றையதினம் சாங்கானை பிரதேச செயலகத்தில் டெங்கு விழிப்புணர்வு தொடர்பான மிகப்பெரிய கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. இதில் சாங்கானை பிரதேச செயலகம், வலி. மேற்கு பிரதேச சபை, சங்கானை பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினர் மற்றும் சமூகமட்ட பொது அமைப்பினர் என பலரும் கலந்துகொண்டனர்.

இருந்தபோதும் சங்கானை பிரதேச செயலர் திருமதி கவிதா உதயகுமார் அவர்கள் குறித்த கூட்டம் தொடர்பாக செய்தி சேகரித்து அறிக்கையிடுவதற்கு ஊடகங்களுக்கான அனுமதியை மறுத்திருந்தார்.

பொதுவாக இவ்வாறான கூட்டங்களுக்கு ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதில்லை. ஏனென்றால் ஊடகங்களே இவ்வாறான விடயங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.

பிரதேச செயலரின் இவ்வாறான செயற்பாடு குறித்த மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

டெங்கு தாக்கம் அதிகமுள்ள பகுதிகளை ஊடகங்கள் வெளிப்படுத்தினால் அந்த இடங்களில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை செய்ய வேண்டும். ஆகையால் குறித்த விடயங்களை மூடிமறைக்க பிரதேச செயலர் முனைகின்றாரா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews