இலங்கை அரசியலில் ஜனாதிபதி தேர்தல் ஈழத்தமிரது அரசியல் இருப்போடு ஒன்றிணைந்ததாகவே எப்போதும் அமைந்துவருகிறது. ஈழத்தமிழர் அரசியல் ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிப்பது அல்லது ஒரு பெரும்பான்மை சிங்கள வேட்பாளருக்கு வாக்களிப்பது என்ற மரபார்ந்த நடவடிக்கையையே கடந்த பல தசாப்தங்களாக மேற்கொண்டுவருகின்றனர். அதனையே தமிழ் தேசியக் கட்சிகளும் தமிழ் மக்களுக்கு வலியுறுத்திவருகின்றன. ஒரு தமிழ் தேசியக் கட்சி வாக்களிக்க வலியுறுத்த இன்னோர் தேசியக் கட்சி பகிஸ்கரிக்க கோரும் ஓர் அரசியல் நாடகம் நிகழ்ந்துவருகிறது. அத்தகைய அரங்கம் ஒன்றுக்கான களம் மீளவும் ஜனாதிபதித் தேர்தலை நோக்கி திறக்கப்படுகிறது. ஏற்கனவே ஒரு தமிழ் தேசியக் கட்சி ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிக்கப் போவதாக வெளிப்படையாக அறிவித்துள்ளது. இன்னோர் பெரும் தமிழ் தேசியக்கட்சி இறுதி நேரத்தில் வாக்களிக்க கோரும் என்பதை அது கோடிட்டக் காட்டியுள்ளது. இன்னோர் தமிழ் தேசியத் தரப்பு தமிழ் வேட்பாளரை நிறுத்தி தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. அரசியல் என்பது அரசியல் செய்வதனையே குறிக்குமே அன்றி செயல்வடிவம் பெறாத எதனையும் அரசியல் என கூறிவிட முடியாது. இக்கட்டுரை ஜனாதிபதி தேர்தலை தமிழர் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை தேடுவதாக அமையவுள்ளது.
அரசியல் விஞ்ஞானக் கோட்பாடுகளில் அனேகமானவை மக்கள் பங்கேற்புக்கான நியதிகளையே அரசியல் என்கிறது. தேசியம், இறைமை, ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் தேசியவாதம் என பல எண்ணக்கருக்கள் மக்களுடனான இடைவினையையே அரசியல் என்கிறது. குறிப்பாக தமிழ் மக்களது தேசிய இருப்பில் அதிகம் பிரயோகப்படுத்தப்படும் இறைமை, தேசியம், சுயநிர்ணயம் என்பன மக்களுக்கானதே. தமிழ் மக்களது அரசியலில் கட்சிகளும் கட்சிகளின் தலைமைகளுமே தீர்மானங்களை செய்கின்றனவே அன்றி மக்களது எண்ணங்கள் அங்கீகரிக்கப்படுவதில்லை. மாறாக மக்களது எண்ணங்களை ஏற்காது தலைமைகளும் கட்சிகளும் தாம் விரும்புவற்றை திணிக்க முயலுகின்றன. அதனையே தீர்வு எனவும் முடிபு எனவும் பிரச்சாரப்படுத்தகின்றன. அதனையே ஊடகங்களும் முதன்மைப்படுத்தகின்றன. ஈழத்தமிழர் தேசியத்தின்பால் போராடுபவர்கள். அவர்களது போராட்டம் தேசிய இருப்புச் சார்ந்தது. தேசியம் என்பது சமானியனது அரசியலாகும். அதாவது மக்களது அரசியல் அபிலாசையாகும். அதனை நோக்கி கட்சிகளும் தலைமைகளும் செயல்பட வேண்டுமே அன்றி கட்சிகளது தலைமைகளது விருப்புக்கானதல்ல. அத்தகைய விருப்புக்குள் இயங்குவதென்பது தனிப்பட்ட நலனுக்கானதே. ஈழத்தமிழரது தேசியம் தனிப்பட்ட நலனுக்குள் அகப்பட்டுள்ளது. இதில் மாற்றத்தை ஏற்படுத்தாத வரை ஈழத்தமிழர் எத்தகைய அரசியல் இலக்கையும் அடைய முடியாது. கட்சிகளதும் தலைமைகளதும் நலன்களுக்கு தமிழ் மக்களது தேசியம் விலைபேசப்படுகிறது. தங்களது இருப்புக்காக தமிழ் மக்கள் அறிவூட்டப்படக் கூடாது என தலைமைகளும் கட்சிகளும் கருதுகின்றன. இதனையே ஜனாதிபதி தேர்தலிலும் தமிழ் மக்கள் கட்சிகள் கூறும் தந்திரோபாயமற்ற உத்தியை பின்பற்ற வேண்டம் எனக்கருதுகின்றன. அவற்றை விரிவாக தேடுவது அவசியமானது.
முதலாவது, தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் பகிஸ்கரிக்க வேண்டும் என்ற விவாதம் சில தரப்புக்களாலும் அரசியல் கட்சிகளாலும் முன்வைக்கப்படகின்றன. அதன் யதார்த்தம் என்ன என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஜனநாயகச் செய்முறையில் தேர்தலும் அதில் வாக்களிப்பதும் மையமான செயல்படாகும். 1931 ஆம் ஆண்டு முதல் தமிழ் மக்கள் பகிஸ்கரிப்பை ஒரு அரசியல் போராட்டமாக வெளிப்படுத்திவருகின்றனர். ஆனால் அதனால் எத்தகைய விளைவைச் எதிர் கொண்டார்கள் என்பது தெரிந்து கொள்ளப்பட வேண்டும். தமிழர் மகாசபை தொடங்கியதிலிருந்து தமிழர் போராட்டம் நூற்றாண்டுக் (1921-2021)கணக்கான தோல்விகளையே எதிர் கொண்டுள்ளது. அத்தகைய போராட்டத்தால் தமிழ் மக்கள் ஒரு துண்டு நிலத்தையோ அல்லது உரிமையையோ பெறவில்லை. மாறாக இழப்பினையே எதிர் கொண்டுவந்துள்ளனர். கல்லோயா முதல் தையிட்டிவரை நிலப்பறிப்பு நிகழ்ந்த கொண்டே இருக்கிறது. அப்படியாயின் அனைத்துப் போராட்ட வழிமுறைகளும் தோல்வியையே சந்தித்துள்ளன. அத்தகைய போராட்டங்களை பரிசீலிக்க வேண்டிய பொறுப்பு போராட்டத்தோடு சம்பந்தபபட்ட அனைவருக்கும் உரித்துடையது. விலங்குகளில் முதன்மையான சிங்கம் கூட இருதடவை தோற்றப்போன உத்தியை மூன்றாவது தடவை பரிசோதித்துப் பார்பதில்லை என்ற நியதியை ஈழத்தமிழர் விளங்கிக் கொள்ள வேண்டும். எனவே பகிஸ்கரிப்பு என்பது புத்திசாதுரியமற்ற மக்களின் இறைமையை மதிக்காத செய்முறையாகும். மக்கள் இறைமையை முதன்மைப்படுத்தும் தமிழ் தேசியக்கட்சிகள் தயாரில்லை. தமிழ் மக்கள் இறைமைக்காக போராடுவதாக சொல்லிக் கொள்ளும் கட்சிகள் தமிழ் மக்கள் தமது இறைமையை வெளிப்படுத்தும் செய்முறையை தடுக்கின்றமை அவர்களது கட்சி நலனே அன்றி மக்கள் நலன் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இரண்டாவது, அப்படியாயின் தமிழ் மக்கள் வாக்களிததால் இதுவரை ஏதும் சாதித்துள்ளார்களா என்ற கேள்வி இயல்பானது. உண்மையில் தமிழ் மக்கள் இதுவரை தமக்காக வாக்களிக்காது அரசியல் கட்சிகள் கூறுவதற்கு வாக்களித்தனர். அதனால் எந்தவிதமான இலாபமும் தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். தமிழ் மக்களை கொண்டு தமிழ் மக்களை அழித்த இராணுவத் தளபதிக்கு வாக்களிக்க வைத்த பெருமை தமிழ் தேசியக்கட்சிகளுக்கே உரியது. தமிழ் மக்களை முள்ளிவாய்கலில் கொன்றொழித்த இரத்தம் காயமுன்னர் போரைத் தலைமைதாங்கிய தளபதிக்கு வாக்களிக்க வைத்த அரசியல் கொடுமை வேறு எங்கு நிகழ்ந்ததாக வரலாறு இல்லை. இதனை எல்லாம் அரசியல் தந்திரம் என்று கூறிக்கொள்ளும் கட்சியையும் அதன் தலைமையையும் ஈழத்தமிழர்களே தலைமைகள் என்று கருதுகின்றனர். இத்தகைய தலைமைகளால் ஈழத்தமிழர்கள் ஏதும் சாதிக்க முடியுமென கருதுவது துயரமானதே. இத்தகைய தமிழ் தலைமைகள் இணக்க அரசியல் எதிர்ப்பு அரசியல் என்றெல்லாம் கூறிக் கொண்டு தமது நலன்களைப் பாதுகாத்தார்களே அன்றி தமிழ் மக்களுக்கு எந்த மாறறத்தையும் ஏற்படத்தவில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மூன்று இலட்சத்திற்கு அதிகமான வாக்களித்த தமிழ் மக்களுக்கு என்னுமே நன்றிகூடத் தெரிவிக்காத வேட்பாளருக்கு மீண்டும் வாக்களிக்க தூண்டுகின்றனர். இதனால் எத்தகைய தீர்வை எட்ட முடியும் என்பதை தமிழ் தலைவர்கள் அல்ல தமிழ் மக்கள் கருதுகின்றனர் என்பதே துயரமானது. கடந்த எழுபது ஆண்டுகள் தமிழ் மக்கள் எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை என்பதைக் கருத்தில் கொண்டு உத்திகளை மாற்றியமைக்க வேண்டும். அத்தகைய மாற்றததை நோக்கியே தமிழ் மக்கள் பயணிக்க வேண்டிய அவசியப்பாடு ஏற்பட்டள்ளது.
மூன்று, அத்தகைய புதிய உத்தியில் ஒன்றாகவே ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டும் என்பது சரியானதா என்ற கேள்வி இயல்பானது. அத்தகைய வேட்பாளர் ஒரு போதும் வெற்றி பெறமுடியாது என்பதில் எந்தக்குழப்பமும் இருக்க வாய்ப்பு ஏதும் கிடையாது. ஆப்படியாயின் ஏன் என்ற கேள்வி இயல்பானது. தென் இலங்கையுடன் சேர்ந்து போhய் ஏதும் சாதிக்கலாம் என்று எவரும் நினைக்க முடியும். ஆதற்கு பதில் கடந்தகாலம் முழுவதும் தென் இலங்கையுடன் சேர்ந்து தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் பயணித்துள்ளார்கள். எல்லாக் காலத்திலும் தென் இலங்கை வேட்பாளருக்கே வாக்களித்துள்ளனர். ஒரு தடைவ மட்டுமே குமார் பொன்னம்பலத்திற்கு வாக்களித்தவர்கள். அதில் கூட தமிழ் மக்களின் வேட்பாளராக பொது வேட்பாளராக குமார் பொன்னம்பலம் நிறுத்தப்படவில்லை என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது ஒரு பொது வேட்பாளர் நிறுத்தப்படுவது இரு நியாயப்பாட்டுக்காக. ஒன்று, தமிழர் ஒரு தேசமாக உள்ளனர் என்பதை மீளவும் தெரியப்படுத்த வேண்டும். வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் ஒரே திசையில் பயணிக்கிறார்கள் என்பதை உறுதியாக எல்லாத்தரப்புககும் தெரியப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழர் தேசியத்தை சிதைக்க முனையும் சக்திகள் தமிழரின் ஒருமைப்பாட்டை சிதைக்கவே முனைகிறார்கள். அது மட்டுமல்ல தமிழருக்கு உதவ முயலும் நாடுகள் தமிழரது ஒற்றுமையை தமிழ் கட்சிகளை வைத்தே கணிக்கின்றனர். அதனால் தமிழ் கட்சிகளும் தமிழ் மக்களும் ஒரே இலட்சியத்தோடு செயல்படுகிறார்கள் என்பது மட்டுமல்லாது தமிழரது மக்கள் இறைமையை வெளிப்படுத்த வாய்ப்பான தருணமாகவே உள்ளது. அதனை எட்டுவது தமிழரது ஒற்றுமை மட்டுமல்ல தமிழ் மக்களது இறைமையை வெளிப்படுத்த வேண்டிய நிலை எழுந்துள்ளது. வட்டுக்கோட்டைத் தீர்மானம் கடந்த நாற்பது வருடங்களுக்கு மேல் தமிழரது இருப்பை தேசியத்தை சுயநிர்ணயத்தை தாயகத்தை உறுதியாக உரைத்த பிரகடனமாக அமைந்திருந்தது. அதனைப் போன்றதொன்று மட்டுமல்ல இரண்டாவதாக இலங்கையின் அரசியலமைப்புக்குள் உள்ள ஒரு விடயத்தை தேசிய இனமாக புத்திபூர்வமமாக பயன்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்புக் கடைத்துள்ளது. விகிதாசாரத் தேர்தலில் இரண்டாவது விருப்பத் தெரிவை வைத்துக் கொண்டு ஜனாதிபதி தேர்தலில் தமிழருக்கு இருக்கும் வாய்ப்பினை வெளிப்படுத்துவது ஒன்றும் சட்டவிரோதமோ நியாயமற்ற செய்முறையோ கிடையாது. மறுபக்கத்தில் இலங்கையின் அரசியல் கலாசாரத்தில் தமிழருக்கோ அல்லது வேறு தேசிய இனத்திற்கோ எந்த வாய்ப்பும் அரசியலமைப்பாக வழங்கப்படவில்லை என்பது யாவரும் அறிந்ததே. அதாவது உபஜனாதிபதி முறைமை ஒன்றுக்கான வாய்பே அரசியலமைப்பில் வழங்கப்படாத போது தமிழர்கள் ஏன் தமக்குக் கிடைத்துள்ள வாய்ப்பினை சரிவர அறிவுபூர்வமாக பயன்படுத்திக் கொள்ளக் கூடாது. சாதரணமாக தமிழர் பகிர்கரித்தால் தென் இலங்கை வேட்பாளர் ஓரே சுற்றில் வெற்றிபெற வாய்பு துலாம்பரமாக இருக்கும் என்பது விகிதாசாரத் தேர்தல் முறைமையின் கணிப்பீடாகும். ஆப்படியில்லாது தமிழர் தனித்து ஒரு வேட்பாளரை நிறுத்தினாலும் தனிச்சிங்கள மக்களது வாக்குகளால் ஒரு பெரும்பான்மை தேசிய இனத்தின் வேட்பாளர் ஓரே சுற்றில் வெற்றி பெற்றாலும் அதனால் தமிழருக்கு பாதிப்பு நிகழப்போவதில்லை. மாறாக தமிழர் ஒரு தனித்துவமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்கள் எனவும் தமது இறைமையை வெளிக்காட்டியுள்ளார்கள் என்பதையும் தெரியப்படுத்த முடியும். அதுவே தற்போதைய தேவைப்படாகும். அதனைவிடுத்து பகிஸ்கரித்தல் அல்லது ஒரு வேட்பாளரை ஆதரிக்க முயன்று அந்த வேட்பாளரையும் தோற்கடித்து தமிழருக்கு முற்றிலும் விரோதமான அரசியலை அரங்கேற்றும் செய்முறையை முன்மொழிவது அறிவுபூர்வமானதாக அமையாது. அது மீளவும் தமிழினத்தை தோற்கடிப்பதற்கான நகர்வாக அமையுமே அன்றி தமிழரது இருப்புக்கான அரசியலாக அமையாது.
எனவே தான் தமிழ் மக்கள் ஒரு வேட்பாளரை நிறுத்தி அவருக்கு தமது வாக்குகளை அளிப்பது பொருத்தமான அரசியலாக அமையும். அதிலும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒரு வேட்பாளரை நிறுத்தி அவருக்கு வாக்களிக்கும் ஒழுக்கத்தை தமிழர் நிகழ்த்துவார்களானால் அதனால் பாரிய மாறுதல் ஒன்றுக்கான வாய்ப்பு நிகழகூடும். அதிலும் போரிலும் அதன் பின்னரும் அதிகம் பாதிப்பையும் வலியுடனும் தினம் தினம் துயரப்பட்டுக் கொண்டும் அதனையே அனுபவித்துக் கொண்டு இருக்கும் பெண் ஒருவரை நிறுத்தி அவர்மூலம் தெளிவான செய்தியை உலகத்திற்கும் தமிழ் தேசியத்திற்கும் உரமூட்ட முடியும். இதுவே தமிழ் மக்களது இறைமையை தேசியத்தை ஒருமைப்பாட்டை சாத்தியப்படுத்தும். இத்தகைய செயலையே அரசியல் விஞ்ஞானம் அரசியல் என்கிறது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-