தமிழ்த் தேசியப்  பசுமை இயக்கத்தால் மண்பானைப் பொங்கல் பொதிகள் வழங்கிவைப்பு

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தைப்பொங்கலை  முன்னிட்டு  நாவாந்துறையைச் சேர்ந்த   எழுபது குடும்பங்களுக்குப்  பொங்கல் பொதிகளை வழங்கி வைத்துள்ளது. தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைமை  அலுவலகத்தில் அதன் தலைவர் பொ .ஐங்கரநேசன் தலைமையில் நேற்று  வெள்ளிக்கிழமை [12-01-2024] இப்பொதிகள் வழங்கும் நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய குடும்பங்களுக்கு அனுசரணையோடு   உலர் உணவுப் பொதிகளை வழங்கும் அற்றார் அழி பசி தீர்த்தல் என்ற திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.
 பகிர்ந்துண்டு வாழ்வோம் என்ற கருப்பொருளுடன்  கொரோனாப்  பெருந்தொற்று ஏற்பட்ட காலத்தில் இருந்து    இடம்பெற்றுவரும் இத்திட்டத்தின் தொடர்ச்சியாகவே பொங்கல் பொதிகள்  வழங்கப்பட்டுள்ளன.

தைப்பொங்கல் இயற்கையைப் போற்றுகின்ற   தமிழ்ப் பண்பாட்டுப் பெரு விழா என்பதையும், அலுமினியப் பானைகளில் சமைப்பதால் ஏற்படக்கூடிய பாதகங்களையும் கருத்திற் கொண்டு அனைவருக்கும் மண்பானைகளுடன்  பொங்கற் பொருட்கள் வழங்கப்பட்டமை  குறிப்பிடத்தக்கது. இதற்கான நிதி அனுசரணையை கனடாவில் உள்ள இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கம்  வழங்கியிருந்தது.

Recommended For You

About the Author: Editor Elukainews