இலங்கை சரித்திரத்திலே முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவருடைய மன்னிப்பு செல்லுபடியற்றது என நீதிமன்றம் தீர்ப்பு! – M.A சுமந்திரன்

இலங்கை சரித்திரத்திலே முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவருடைய மன்னிப்பு செல்லுபடியற்றது என நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கின்றது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை (17) முல்லைத்தீவு மாங்குளம் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணை ஒன்றிற்காக வருகை தந்திருந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, துமிந்த சில்வாவிற்கு கொடுத்த மன்னிப்பை புறந்தள்ளி அதுதவறாக சட்டவிரோதமாக கொடுக்கப்பட்ட மன்னிப்பு செல்லுபடியற்றது என்று தீர்ப்பு கொடுக்கப்பட்டிருக்கின்றது.

பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் கொலை சம்பந்தமாக மரதண்டனைக்கு உட்படுத்தப்பட்ட துமிந்த சில்வாவிற்கே இந்த தீர்ப்பு கொடுக்கப்பட்டது. ஹிருணிகா பிரேமசந்திர சார்பிலே நான் ஆஜராகி இருந்து இந்த வழக்கை வாதாடி இருக்கின்றேன்.

இலங்கை சரித்திரத்திலே முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவருடைய மன்னிப்பு செல்லுபடியற்றது என நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கின்றது. இது வரவேற்க வேண்டிய ஒரு விடயம் வேறு சில வழக்குகளும் நிலுவையிலே இருக்கின்றன.

விஷேடமாக மிருசுவில் படுகொலையாளி சுனில் ரட்நாயக்கவிற்கு கொடுத்த மன்னிப்பையும் நாங்கள் சவாலுக்கு உட்படுத்தி இருக்கின்றோம். அந்த தீர்ப்பு இன்னும் வெளிவரவில்லை என மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews