போதைப்பொருள் பாவிக்கும் பொலிஸார் சேவையிலிருந்து முழுமையாக நீக்கப்படுவார்கள் : பதில் பொலிஸ்மா அதிபர்

போதைப் பொருட்களை பாவிக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனையை தொடர்ந்து இன்னும் ஒரு மாத காலத்துக்குள் அவர்கள் சேவையில் இருந்து முழுமையாக நீக்கப்படுவார்கள்.
பாதாள குழுவுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்தார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக சித்திரவதை மற்றும் தாக்குதல்கள் தொடர்பில் முறைப்பாடளிப்பதற்கு ‘109’ என்ற விசேட இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கிடைக்கப் பெறும் முறைப்பாடுகளுக்கு அமைய 48 மணிநேரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோக்கத்துக்கு உள்ளாக்கி அதனை காணொளி எடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயற்பாடுகளில் ஒருதரப்பினர் ஈடுபடுகிறார்கள். சுமார் 1 இலட்சம் காணொளிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே சிறுவர் பாதுகாப்பு குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் சேவையில் உள்ள பெரும்பாலான அதிகாரிகள் உட்பட கீழ்மட்ட அதிகாரிகள் போதைப்பொருள் பாவிப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இவ்விடயம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு தற்போது வைத்திய பரிசோதனை அறிக்கை கோரப்பட்டுள்ளது. போதைப்பொருள் பாவிக்கும் பொலிஸ் அதிகாரிகள் ஒருமாத காலத்துக்குள் சேவையில் இருந்து முழுமையாக நீக்கப்படுவார்கள்.

போதைப்பொருள் சுற்றிவளைப்பு தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகிறது. போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபடும் 4,292 பேரில் இதுவரை 1,973 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆகவே போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கை வெற்றிப்பெற்றுள்ளன.

இந்த சுற்றிவளைப்பின் போது எவரும் சட்டவிரோதமான முறையில் கைது செய்யப்படவில்லை. தடுப்பு காவலில் வைக்கவுமில்லை. நீதவானின் அனுமதியுடன் தான் தடுப்பு காவல் செயற்படுத்தப்படுகிறது. கடந்த ஒரு மாத காலப்பகுதியில் கைது செய்யப்பட்ட 40,590 பேரில் சுமார் 5,000 பேர் மாத்திரமே தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு நகரில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கமரா பதிவுகளை கொண்டு வீதி சட்டங்களை மீறும் தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் விசேட திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முன்னெடுக்கப்படும். அநுராதபுரத்தில் வசிக்கும் ஒருவர் கொழும்புக்கு வருகை தந்த போது அவர் வீதி சட்டத்தை மீறியிருந்தால் அதற்கான நடவடிக்கை அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் அதற்கு இந்த சி.சி.டி.சி பதிவுகள் உரிய பொலிஸ் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews