இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைமைக்கான இரகசிய வாக்கெடுப்பு இன்றையதினம் (21) திருகோணமலையில் முற்பகல் 10 மணிக்கு பதில் பொதுச்செயலாளர் வைத்தியர்.ப.சத்தியலிங்கத்தின் தலைமையில் நடைபெறவுள்ளது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவிக்கான வேட்பு மனு கோரப்பட்டபோது கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றம் சிவஞானம் சிறீதரன் ஆகியோரும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரனும் விண்ணப்பங்களை செய்திருந்தனர்.
எனினும் கட்சியின் அரசியல்குழு கூட்டத்தில் போட்டியின்றி தலைமைத்தெரிவு நடைபெறவேண்டுமென்று கருத்து வலியுறுத்தப்பட்டதை அடுத்து மூன்று வேட்பாளர்கள் இடையேயும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
அந்தப் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் புதிய தலைமைக்கு வாக்கெடுப்பை நடத்துவதே பொருத்தமானது என்ற தீர்மானம் இறுதியானது.
இந்நிலையில் தமிழரசு கட்சியின் அடுத்த தலைவருக்காக மூன்றுபேர் போட்டியிட்டாலும் அனைவருடைய ஒத்துழைப்போடும் நான் வெற்றிபெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.