காஸா இன்னோர் முள்ளிலவாய்கால் என்பதற்கான சாட்சியங்கள் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. ஓரினத்தின் அழிவு அந்த இனத்தின் விடுதலைப் போராட்டத்தின் சிதைவாக கருதும் உலகளாவிய சக்திகளின் பிடிக்குள் விடுதலை கோரும் தேசியங்களின் இருப்பு சுருங்கியுள்ளது. அதனையும் கடந்து ஓரினம் விடுதலை பெறுவதென்பது உலகளாவிய வல்லாதிக்க சக்திகளின் நலனுக்குள் தங்கியுள்ளது என்பது கிழக்கு ஐரோப்பா முதல் ஆபிரிக்க கண்டத்தில் கண்டுகொள்ள முடிகிறது. ஈழத்தமிழர் நீண்ட அகிம்சைப் போராட்டத்தையும் ஆயுதப் போராட்டத்தையும் நிகழ்த்தினார்கள். ஆனால் உலகம் அதனை தென் இலங்கை ஆட்சியும் அதன் அரச இயந்திரமும் குறிப்பிடுவது போல் பயங்கரவாதம் என முத்திரை குத்தியுள்ளது. ஏறக்குறைய இலங்கை, இந்தியா, மலேசியா ஆகிய மூன்று நாடுகளில் விடுதலைப் போராட்ட அமைப்பு தடை என்பதற்கு அப்பால் விடுதலைக்கு போராடுவதே தடைசெய்யப்பட்டுள்ளது. அவ்வாறே முப்பது நாடுகளில் ஐரோப்பிய யூனியன் மற்றும் கனடா, அமெரிக்கா உட்பட விடுதலைப் போராட்ட அமைப்பு தடைசெய்யப்பட்டுள்ளது. ஓரமைப்பு தன்னை போராட்டத்திலிருந்து மௌனித்துக் கொண்ட பின்னரும் தடை செய்யப்பட்டுள்ளது என்பது ஈழத்தமிழரது போராட்டத்திலேயே நிகழ்ந்துள்ளது. இத்தகைய தருணத்திலிருந்து ஈழத்தமிழர் எப்படி மீள்வது என்பதே இக்கட்டுரையின் கருப்பொருளாகும்.
ஈழத்தமிழர் மீது ஏற்படுத்தப்பட்ட பயங்கரவாதம் என்பதிலிருந்து எப்படி வெளியே வருவதென்பதே முக்கியமானது. அதற்காக எதிரியிடம் சரணடைய முடியாது. எதிரியிடம் சரணடைவதென்பது ஈழத்தமிழரது அரசியல்,சமூக,பொருளாதார பண்பாட்டின் இருப்பு அனைத்தையும் இழப்பதாகும். நிலமும் மக்களுமே ஓரினத்தின் இருப்பாகும். அதனை இழக்கும் போது தேசிய இனத்தின் அடையாளம் இல்லாது போவதுடன் ஏனைய தேசியங்களுக்குள் கரைந்து போகும் அபாயம் ஈழத்தமிழருக்கு ஏற்படும். அதனைவிடுத்து இத்தகைய நெருக்கடியிலிருந்து எப்படி தப்பிக் கொண்டு தேசியத்தை காக்த்து நிலத்தையும் மக்களையும் பாதுகாப்பது என்பது கருத்தில் கொள்ளவேண்டிய விடயமாகும். ஆதற்கான ஒரு வாய்ப்பு ஈழத்தமிழருக்கு கிடைத்துள்ளது. அதுவே ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களுக்கான ஒரு பொது வேட்பாளர். அதனை விரிவாக தர்க்க ரீதியிலும் கோட்பாட்டு அடிப்படையிலும் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
ஈழத்தமிழர் சட்டரீதியிலும், உலகளாவிய நியதிக்குள்ளும் அங்கீகரிக்கப்பட வேண்டும். இலங்கைத் தீவை பிரிவினைக்கு உள்ளாக்குவதென்பது தென் இலங்கையினால் மட்டுமல்ல இந்தியாவாலும் அமெரிக்காவாலும் ஐரோப்பிய நாடுகளாலும் ஏற்கொள்ள முடியாததென்றாகவே உள்ளது. தற்போது பலஸ்தீனத்திற்கு ஒரு தனிநாடு வேண்டும் என்ற கருத்தில் ஒரு சதவீதத்தையேனும் ஈழத்தமிழருக்காக உலகிலுள்ள எந்த நாடும் கொண்டிருக்கவில்லை என்பது நிதர்சனமாகும். இந்த யதார்த்தத்தை ஈழத்தமிழர் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் உலகளாவிய அங்கீகாரத்தைக் கொண்ட சுயநிர்ணயத்தையும் அதற்கு அமைவான தேசியத்தையும் ஏற்றுக் கொள்வதுடன் சமஷ்டிக்குரிய நியதிகளை தென் இலங்கை தவிர்ந்த ஏனைய உலக நாடுகள் முதன்மைப்படுத்த தயாராக உள்ளன. அதற்கான வாய்ப்புக்களை எல்லாக் காலத்திலும் ஈழத்தமிழர்கள் பரிசீலித்துப் பார்த்துள்ளனரே அன்றி அதற்கான அரசியலை முன்னெடுத்ததாக தெரியவில்லை. அதற்காக போராடியதாகவும் தெரியவில்லை.
ஒரு தேசிய இனம் என்பது சுயநிர்ணயத்தைக் கொண்டதாகவே கருதும் அறிவியல் உலகப்பரப்பில் உண்டு. அதனுடன் அத்தகைய தேசிய இனத்திற்கு இறைமை உண்டு என்பதுவும் அதுவே மக்கள் இறைமை(Popular Sovereignty) என்பதுவும் உலகளாவிய தளத்தில் ஏற்கொள்ளப்பட்டுள்ளது. ஈழத்தமிழர்கள் இறைமை கொண்ட, தேசிய இனமாக அடையாளப்படுத்தப்படும் மக்களாக உள்ளனர். இலங்கைத் தீவுக்குள் ஈழத்தமிழர் மக்களாக (A People) இருப்பதென்பது உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்டதென்றாகும். அதற்கான காரணம் ஈழத்தமிழரது திரட்சியான இருத்தலேயாகும். அத்தகைய திரட்சியை உறுதிப்படுத்தியதில் வட்டுக்கோட்டை தீர்மானமும் ஒன்றாகும். தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் செல்வநாயகம் வடக்கு கிழக்கு தமிழர்களின் பூர்வீக நிலத்தையும் தமிழர்களையும் ஒன்றிணைத்து ஒரு தேசிய இன அடையாளத்தை ஏற்படுத்தியிருந்தார். அத்தகைய தேசிய இனத்தின் திரட்சியையே மீளவும் சமகாலத்தின் தேவைக்கு அமைவாக வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு ஈழத்தமிழருக்கு உள்ளது. அத்தகைய வெளிப்பாட்டை இலங்கை அரசாங்கம் ஜனாதிபதி தேர்தல் மூலம் ஏற்படுத்தி தந்துள்ளது. அதனை புத்திபூர்வமாக பயன்படுத்த வேண்டிய தேவை ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் பல கேள்விகள் எழுப்பப்படுகிறது. ஆனால் அத்தகைய கேள்விகள் எல்லாக்காலமும் உண்டு. சில எழுப்பும் கேள்விக்குள்ளேயே விடைகளும் உண்டு. இது ஒரு பிரகடனத்திற்கு வாக்களித்தலாகும். இதனால் எந்த நபரும் வெற்றியடையப் போவதில்லை. இது ஈழத்தமிழர் மீதுள்ள சவால்களை எதிர்கொள்ளுதலாகும். இதற்காக அளிக்கப்படும் வாக்கு வேட்பாளருக்கானதல்ல. பிரகடனத்தழற்கானது. வுட்டுக்கோட்டைத் தீர்மானம் உணர்ச்சிவசப்பட்டது எனக்கருதும் சூழலில் அதனை புத்திபூர்வமாக நோக்கும் நிலை அவசியமானதாக தெரிகிறது. அது ஒரு தேசிய இனத்தின் பிரகடனம். ஆதனை முன்வைத்தவர்கள் மாவட்ட அபிவிருத்திசபைக்கு உடன்பட்டமையே உணர்சிவசப்பட தமிழ் இளைஞர்களை தோற்றுவித்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. தென் இலங்கையிலுள்ள வேட்பாளர்கள் வெளிப்படையாகவும் வரமாட்டார்கள் கனவான உடன்படிக்கை செய்தாலும் கிளித்து எறிந்துவிடுவார்கள். அப்படியாயின் தற்போதுள்ள அரசியலை வேடிக்கை பார்ப்பதை விடுத்து வேறு ஏதும் செய்ய முடியாத நிலையே ஏற்பம். அரசியல் என்பது வேடிக்கை பார்ப்பதல்ல. யதார்த்தத்தை கையாளுவது தான் அரசியல் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இரண்டாவது விருப்பத் தெரிவை தென் இலங்கை வேட்பாளருக்கு வழங்குமாறு கோருவது தென் இலங்கை வேட்பாளரை தோற்கடித்துவிடும் எனக்கருதுகிறீகளே அன்றி தமிழரது அரசியலுக்கு என்ன அடுத்த நகர்வென கருத யாரும் தயாராக இல்லை. தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களித்தால் அவர் அந்தவாக்கைக் கொண்டு ஏதாவது செய்துவிடுவார் எனக்கருதுகிறீர்களே அன்றி அந்தவாக்கு ஈழத்தமிழரது அரசியல் இருப்புக்கான மக்கள் இறைமை என்பதை புரிந்து கொள்ள முடியாதவர்களாக அல்லவா கேள்வி எழுப்புகிறீர்கள். ஜனாதிபதி தேர்தலில் குமார் பொன்னம்பலம் வேட்பாளராக நின்று பெற்றவாக்குகள் அவரது மரணத்துடன் மறைந்துவிட்டதா? அல்லது காணாமல் போய்விட்டதா?
ஈழத்தமிழருக்கு ஒரு சிறந்த வாய்ப்புக் கிடைத்துள்ளது. ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி அவர் மூலம் அணையை தமிழ் மக்கள் அடைய முடியும். ஆத்தகைய ஆணை ஈழத்தமிழருக்கான பொது வாக்கெடுப்பாகும். இதனை எந்த சந்தர்ப்பத்திலும் இலங்கை அரசாங்கம் ஈழத்தமிழர் தனித்து மேற்கொள்ள அனுமதிக்காது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால் ஜனாதிபதி தேர்தல் மூலம் அத்தகைய வாப்பொன்று கிடைத்துள்ளது. அதனை பயன்படுத்திப் பார்பதில் எத்தகைய தீங்கும் தமிழினத்திற்கு ஏற்படப் போவதில்லை. அரசாங்கம் முன்வைத்துள்ள தேர்தல் முறைமையிலேயே பொது வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் பொது வாக்கெடுப்பொன்றையும் நடாத்திக் காட்டமுடியும். குறிப்பிட்ட காலம் முயன்று தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து 90 சதவீதமான வாக்குகளையும் அந்த வேட்பாளர் பக்கம் திருப்பி ஒரு முடிபை எட்டினால் தென் இலங்கையால் மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் விதிக்கப்பட்டுள்ள தடைகளையும் பயங்கரவாதம் என்ற பெயரையும் தகர்க்க முடியும். துமிழ் மக்கள் என்றும் திரட்சியாகவே உள்ளனர் என்பதையும் தேசிய இனமாகவே இயங்குகிறார்கள் என்பதையும் வெளிப்படுத்த முடியும். ஈழத்தமிழர் கடசிகளாகத் தான் பிரிந்திருக்கிறார்களே அன்றி மக்களாக இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். கடசிகளின் நலன்களுக்கும் தனிப்பட்ட விருப்புகளுக்கும் நீத்துப்போன கொள்கை பேசுவது அரசியல் கட்சிகளே அன்றி தமிழ் மக்களல்ல. உள்ளூராட்சி மன்றங்களுக்கும் மாகாணசபைகளுக்கும் பராளுமன்றத்திற்கும் தமிழ் மக்கள் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும். ஆனால் ஜனாதிபதி தேர்தலுக்கு பகிஸ்கரிக்க வேண்டும். ஏன்?.இதில் கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற முடியாது. இது தான் கட்சி அரசியல். இன்னோர் கட்சியினர் தாம் காட்டும் தென் இலங்கை வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். ஏன்? தங்கள் தனிப்பட்ட தேவைகள் அந்த தென் இலங்கை வேட்பாளரிடமிருந்து பெறவேண்டும். இதுவே தமிழர் கட்சி அரசியல்.
எனவே போலியான உரையாடலை கைவிட்டுவிட்டு ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி தமிழ் மக்களது வாக்குகளை திரட்சி பெறச் செய்வது அவசியமானது. போரில் காலை இழந்துவிடுதல் என்பது இழப்புத்தான். அது இன்னோர் பரிமாணம் என்று கூறிவிட்டு இழப்பீட்டை சரிசெய்ய முடியாது. அதனை இன்னோர் வளர்ச்சி என்று கூறிவிடவும் முடியாது. தோல்வியின் அனுபத்திலிருந்துதான் இன்னொன்றை கட்டமுடியும். தோல்வியை தோல்வி எனக்கருதாத சமூகம் அதிலிருந்து மீள்வது கடினம். கடந்தகால சிந்தனைக்குள்ளால் சமகாலத்தின் போக்குகளை அளவிடாதீர்கள். கடந்தகால அனுபவத்திலிருந்து சமகாலத்தை கணிப்பிடுவது அவசியமானது.
-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-