கொழும்பின் CCTV கமரா வேலைத்திட்டம் இன்று முதல் அமுலுக்கு

சிசிடிவி கமராக்கள் ஊடாக போக்குவரத்து விதிமீறல்களை மேற்கொள்ளும் சாரதிகளுக்கு அபராத பத்திரங்களை வீட்டுக்கு அனுப்பும் முறைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

வேலைத்திட்டத்திற்கு பஸ்களை ஒழுங்குபடுத்தினால் பஸ் முன்னுரிமைப் பாதை சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பஸ் பாதையில் முச்சக்கர வண்டிகள் உட்பட ஏனைய வாகனங்கள் பயணிப்பதால் பஸ்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

CCTV கமராக்கள் மூலம் போக்குவரத்து விதிமீறல்களை மேற்கொள்ளும் சாரதிகளை இனங்கண்டு, உள்ளூர் பொலிஸ் நிலையத்தினூடாக அவர்களது வீடுகளுக்கு அபராதப் பத்திரங்களை அனுப்பிவைக்கும் வேலைத்திட்டம் கொழும்பு நகரில் 33 இடங்களை இலக்கு வைத்து இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அறிவித்துள்ளார்.

இத்திட்டத்தின்படி, கொழும்பு நகருக்குள் நுழையும் சாரதி ஒருவர் போக்குவரத்து விதிகளை மீறி கொழும்பிலிருந்து வெளியேறினாலும், அது சிசிடிவி மூலம் பரிசோதிக்கப்பட்டு, சாரதிக்கு அவர் வசிக்கும் பொலிஸ் அதிகார எல்லைக்குட்பட்ட பொலிஸ் நிலையத்தின் ஊடாக அவரது வீட்டிற்கு அறிவிக்கப்படும்.

போக்குவரத்து விதிமீறலை சாரதி செய்துள்ளார் என்பதை உறுதிப்படுத்திய பின்னரே அவருக்கு அபராதப் பத்திரம் வழங்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். உரிமையாளரின் வாகனத்தை வேறு தரப்பினர் பயன்படுத்தினால், போக்குவரத்து சட்டத்தை மீறினால், வாகனத்தின் உரிமையாளருக்கு அல்ல, வாகனத்தை ஓட்டிய நபருக்கே உரிய அபராதம் விதிக்கப்படும் என்றும் பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.

கொழும்பு நகரில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கமரா அமைப்புகள் உரிய முறையில் பயன்படுத்தப்படவில்லை என பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews