வீதி விபத்துக்களை தடுக்க மக்கள் அணிதிரள வேண்டும்-றமேஷ் அடிகளார்

வாழ்க்கை என்பது ஒரு வாய்ப்பு அதை சரியான முறையில் அமைத்துக் கொள்வது மனிதர்கள் ஒவ்வொருவரினதும் கடமையாகும். வாழ்வு என்பது ஒரு புதிர், பல சவால்களைக் கடந்து, கடமையை நிறைவேற்ற பயணிக்கின்ற ஒரு பாதை எனவும் வரையறுத்துக் கொள்ள முடியும். மனிதர்களைப் பொறுத்த வரையில் அவர்கள் ஒரு சமூக அமைப்பில் இருப்பதால், பல காரணங்களுக்காக சிலரையும், சில காரணங்களுக்காக பலரையும் சார்ந்து வாழும் நிலையை பார்க்க முடியும். நாங்கள் பெற்றுக் கொண்ட வாழ்வை எமது விருப்படி வாழ எமக்கு பூரண சுதந்திரம் உண்டு. அதே வேளையில் எமது வாழ்வு எந்நிலையிலும் எமக்கும் ஏனையோருக்கும் தீமையை ஏற்படுத்துமானால் அதை சரிசெய்துகொள்வதும் நன்மையை நோக்கி நகர்வதும் எமது பொறுப்பாகும்.

எமது நாட்டில் குறிப்பாக எமது தமிழர் தாயக பிரதேசங்களில் நாம் அனுபவித்த துன்பங்களும், உயிரிழப்புக்களும், உரிமை மறுப்புக்களும், இடப்பெயர்வுகளும், உறவுப் பிரிவுகளும் வரலாற்றில் மறக்கப்படமுடியாக நிதர்சனங்கள். இத்தகைய கொடூர வேதனைகளில் இருந்து எம்மக்கள் சற்று விடுபட்டு தங்கள் வழமையான வாழ்வை முன்னெடுக்கின்ற இக்காலகட்டத்தில் மீண்டும் எமது மக்களின் உயிர்கள் பலகாரணங்களினால் பறிக்கப்படுவது வழமையாகிவிட்டது. மனவிரக்தியினால் தற்கொலை செய்துகொள்பவர்கள், போதையினால் வாழ்வை இழப்பவர்கள், குழு மோதல்களால் கொல்லப்படுபவர்கள், குடும்ப வன்முறையினால் உயிர்பறிக்கப்படுபவர்கள், இனங்காணப்படாத பல நோய்களால் உயர்நீக்கும் நோயாளர்கள் என்று உயிரழப்பு பட்டியல் தொடர்ந்தாலும் இன்று வாகன விபத்தினால் மரணிப்பவர்களின் எண்ணிக்கைதான் எமது தாயக மண்ணில் அதிகரித்து காணப்படுகிறது.

இலங்கையின் ஏனைய பகுதிகளில் வாகன விபத்துக்கள் ஏற்படுகின்ற அதேவேளையில், எமது வடக்குக்கிழக்குப் பகுதிகளில் விபத்துக்கள் பன்மடங்காக அதிகரித்திருக்கிற இத்துர்ப்பாக்கிய நிலையை நாம் அனைவரும் கண்முன்கொண்டு, இக்கொடூர நிலையில் இருந்து எமது மக்களைக் காக்க மக்களாக நாமே முன்வரவேண்டும். இன்று இலங்கை போக்குவரது சபை, தனியார் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கங்கள் தங்கள் முறையற்ற சாரதிகள் மட்டில் எடுக்கின்ற நடவெடிக்கள்தான் என்ன? இக்காலத்தில் போக்குவரத்து சேவை மூலமாக அர்ப்பணிப்புமிக்க பல சாரதிகளால்தான் எமது மக்களின் இயல்பு வாழ்வு இலகுவாக அமைகின்றது. அத்தகைய சமூக அக்கறையும், எமது மக்களின் பாதுகாப்பில் கவனமும் கொண்ட சாரதிகளுக்கு நாம் கரம்கூப்பி நன்றிகூறுகின்றோம். ஆனால் ஒருசிலர் மதுபோதையிலும், தொலைபேசி பாவனையோடும், அதிக வேகத்தில் வாகனத்தை ஓட்டுவதனாலேயே விபத்துக்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக நீண்டதூர வாகனங்களில் இரவு முழுவதும் ஒரு சாரதியே வாகனத்தை ஓட்டுவதால் தூக்க மயக்கத்தால் அதிக விபத்துகள் நடைபெறுகின்றன. தனியார் மற்றும் இ.போ.ச வாகனங்கள் தமக்குள்ளே சண்டையிட்டு, போட்டி அடிப்டையில் ஒருவரையொருவர் முண்டியடித்துக்கொண்டு முறையற்ற விதத்தில் வாகனத்தை செலுத்துவதும் விபத்துக்களுக்கு வலுவான காரணமாக காணப்படுகிறது. மேலாக வாகன சாரதிகளின் பொறுப்பற்ற தன்மையும், வீதி விதிகளை மீறி வாகனத்தை செலுத்துவதும், தம்மோடு பயணிக்ககும் மக்களின் வாழ்வில் ஓர் அக்கறையற்ற தன்மையுமே விபத்துக்கள் ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணங்களாகும்.

வீதிகளில் மக்கள் போக்குவரத்துக்கள் அதிகமாக இருக்கும் இடங்களிலும்கூட கால்நடைகளை முறையாக பேணிவளர்க்காதவர்களும், தங்கள் கால்நடைகளை இரவுகளில் வீதிகளிலும், பொதுவிடங்களிலும் தங்க அனுமதிக்கும் கால்நடை உரிமையாளர்களும், கால்நடைகளை வீதி வழியே நடத்திச்செல்பவர்களும் விபத்துக்கள் ஏற்படுவதற்கு ஒருவிதத்தில் காரணமாகிறார்கள். பாதுகாப்பு கடவைகளை பயன்படுத்தாத, தொலைபேசி உரையாடலுடன் வீதிகளில் தாறுமாறாக நடக்கும் பாதசாரதிகளும் விபத்துக்கள் ஏற்பட காரணமாகின்றனர். அதிவேகத்தில் செல்லும் பாரவூர்திகளும், நாற்சந்திகளில் விரும்பியபடி முந்திச்சென்று கடக்கமுயலும் முச்சக்கரவண்டி மற்றும் உந்துருளி ஓட்டுநர்களும், முறையற்ற விதத்தில,; அதிவேகத்தில் முன்செல்லும் வாகனத்தை முந்திச்செல்லும் சாரதிகளின் திறனற்ற செயற்பாடுகளுமே விபத்துக்களை தோற்றுவிக்கின்றன.

விபத்தினால் பல மக்கள் உயிரழந்து கொண்டிருக்கும் இவ்வபாயகரமான சூழ்நிலையில் எம்மைப் பாதுகாப்பதற்குரிய வழிகளை மக்களாகிய நாமே கண்டுகொள்ள வேண்டும். கடந்த காலங்களில் எத்தனையோ அநீதிகள் எமக்கு இழைக்கப்பட்ட போதும் சகிப்புத்தன்மையோடு அனைத்தையும் ஏற்றுக் கொண்டு பொறுமை காத்ததுபோதும். மதுபோதையிலும், தொலைபேசி உரையாடலுடனும் முறையற்ற விதத்திலும், அதிவேகத்திலும் வாகனத்தை செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக அவ்வாகனத்தில் பயணிக்கும் பயணிகள் குரலெழுப்பி வாகனத்தை உடனே நிறுத்தி அவர்களை எச்சரிக்க வேண்டும். அவர்களின் முறையற்ற செயல் தொடரும் பட்சத்தில் அவர்களை சட்டத்தின் முன்நிறுத்த வேண்டும். இலங்கை போக்குவரத்து சபையும், தனியார் வாகன உரிமையாளர் சங்கங்களும், பொலிஸ் அதிகாரிகளும் இப்பிரச்சினை மட்டில் கவனம் கொள்ளாதபட்சத்தில் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அவர்களுக்கு எதிராக குரல் எழுப்பவேண்டும். இரவு நெடுந்தூர போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் தகுந்த பாதுகாப்பை பயணிகளுக்கு உறுதிப்படுத்துவதில் மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும். கால்நடைகளை வீதிகளில் தங்க அனுமதிப்பவர்களை இனங்கண்டு அவர்களை எச்சரிக்க வேண்டும். இவ்வாறான சில எதிர்ப்பு நடவெடிக்கைகள் மூலமே வீதி விபத்துக்களை எம்மால் கட்டுப்படுத்த முடியும்.

எமது மக்களின் நலனில் அக்கறை கொண்டு பணியாற்றும் தொண்டு நிறுவனங்கள், சமய சமூக அமைப்புக்கள், சமூக ஆர்வலர்கள், மக்கள் பிரதிநிதிகள், சமையத்தலைவர்கள், குறிப்பாக சட்டவாளர்கள், பொலிசார் மற்றும் அரச அதிகாரிகள் என பலரும் இணைந்து எமது மக்களை பாதுகாப்பதற்காக முன்வரவேண்டும். எமது மண்ணில் ஏற்படும் வீதி விபத்துக்களை முடிந்தவரையில் குறைக்க அணிதிரண்டு வன்முறையற்ற விதத்தில் செயல்படவேண்டும். நாம் அனைவரும் உயிர்களைப் பாதுகாத்து மனிதம் பேணி, நிறைவாக வாழ்வோம்.

அருட்தந்தை யா. றமேஸ் அ.ம.தி
சமாதானத்திற்கும் நல்லிணக்கதிற்குமான பணியகம்
வடமாகாணம்.

Recommended For You

About the Author: Editor Elukainews