நியமனங்களின் அடிப்படையில் ஆசிரியர்களை நெறிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

வடக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு கூட்டம் வவுனியா கலாசார மண்டபத்தில் இன்று (06.02.2024) நடைபெற்றது.
வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், மத்திய கல்வி அமைச்சின் அதிகாரிகள், மாகாண அமைச்சின் அதிகாரிகள், கல்வித்துறைசார் உத்தியோகஸ்தர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.
வடக்கு மாகாணத்தின் கல்வித்துறையில் காணப்படும் சிக்கல்களை நிவர்த்திக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
அமைச்சரின் நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர், மாகாணத்தில் நிலவும் சிக்கல்கள் தொடர்பிலும், கல்வி துறைசார் தேவைப்பாடுகள் தொடர்பிலும் தெளிவுப்படுத்தினார்.
அந்தவகையில், பின்தங்கிய பகுதிகளில் காணப்படும் அனைத்து பாடசாலைகளுக்கும் தேவையான வசதிகளை பெற்றுக்கொடுக்க மத்திய கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதன்போது கௌரவ ஆளுநர் கோரிக்கை விடுத்தார். வளங்களை சமனாக பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், இதற்காக மாகாண கல்வி அமைச்சு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.
அத்துடன் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் பௌதீக வளப் பற்றாகுறை மற்றும்  ஆசிரியர் பற்றாகுறை காணப்படுவதாகவும், சில பாடசாலைகளில் தேவைக்கு அதிகமான முறையில் ஆசிரியர்கள் உள்ளதாகவும் கௌரவ ஆளுநர் கூறினார்.
இந்த விடயம் தொடர்பில் மாகாண கல்வி அமைச்சு தரவுகளை திரட்டியுள்ளதாகவும், பாடவிதானங்களின் அடிப்படையில் நியமனங்கள் பெற்றுள்ள ஆசிரியர்களை அந்தத்த பாடங்களுக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.
 இதனூடாக ஆசிரியர் பற்றாக்குறை காணப்படும் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Recommended For You

About the Author: Editor Elukainews