எது பண்பாடு ? ஒரு காலநிலைப்பட்ட விளக்கம்.-நிலாந்தன்

.ஒரு சமூகம் பௌதீக ரீதியாகவும்,மனோ ரீதியாகவும் கூர்ப்படைவதற்கு உதவும் எல்லா அம்சங்களினதும் திரட்சியே பண்பாடாகும்.இதில் கூர்ப்பு என்ற வார்த்தைக்கு அசாதாரண அழுத்தம் உண்டு.ஏனெனில் கூர்ப்பு எனப்படுவது முக்காலத்துக்கும் உரியது.இறந்த காலத்தில் இருக்கும் ஒன்று நிகழ் காலத்தின் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு நிமிரும்போது அது எதிர்காலத்தில் நின்று நிலைக்கவல்லதாக மாறுகிறது.

இதன்படி பார்த்தால் கூர்ப்பு என்பது இடையறாத,தொடர்ச்சியான மாற்றங்களைக் குறிக்கிறது.மாற்றம்தான் நிரந்தரமானது.எது ஒன்று மாற மறுக்கிறதோ அது கூர்ப்பில் பின்னடைகிறது அல்லது தோற்றுப்போகிறது. எனவே மாறிலியான எதுவும் ஒரு கட்டத்தில் கூர்ப்புக்குத் தடையாகிறது.இயங்க மறுத்து தேங்கி நிற்கும் எதுவும் கூர்ப்பிற்குத் தடையாகிறது.அது இயற்கைத் தேர்வில் அரங்கிலிருந்து அகற்றப்படுகிறது.கூர்ப்பு விதிகளின்படி மாற்றங்களை எதிர்கொண்டு தன்னைத் தகவமைத்துக் கொள்வதே.அதாவது, தக்கதே பிழைக்கிறது. தகாதது அழிந்து போகிறது.

வரலாற்றில் இப்படி எத்தனையோ சிறிய மற்றும் பெரிய பண்பாடுகள் அழிந்துபோயிருக்கின்றன அல்லது நீர்த்துப்போய் முடிவில் வேறொரு பெரும் பண்பாட்டுடன் கரைந்து போயிருக்கின்றன.எனவே, மாற்றம்தான் பண்பாட்டின் அடித்தளம்.மாக்சியமும் அப்படித்தான் கூறுகிறது.மாக்சிஸ்ருக்கள் பண்பாட்டை மேற்கட்டுமானம் என்றும் பொருளாதாரத்தை அடிக்கட்டுமானம் என்றும் கூறுகிறார்கள்.அடித்தளமாயிருக்கும் பொருளாதார வாழ்வு மாறமாற பண்பாடும் மாற்றம் காணும். அரசியல் பொருளாதார மாற்றங்களுடன் சேர்ந்து மாற மறுக்கும் சமூகம் முடிவில் மியூசியத்துக்குப் போய்விடுகிறது.

இந்த விளக்கத்தின் அடிப்படையில் பார்த்தால்,பண்பாடு என்பது ஒரு மாறிலி அல்ல என்று தெரியவரும். பண்பாடு என்பது இறந்த காலத்தில் வாழ்தல் அல்ல என்பதும் தெரியவரும்.

ஆனால், பண்பாட்டை இறந்த காலத்தின் தொகுப்பாகக் காணும் பெரும்பாலான பண்பாட்டுக் காவலர்கள் அதை மாறிலி என்று வாதிடுகிறார்கள். பண்பாட்டை மாற்றக்கூடாது என்றும், மாற்றினால் அது பண்பாடு அல்ல என்றும் இவர்கள் கூறுகிறார்கள்.இவர்கள் எப்பொழுதும் இறந்த காலத்திலேயே வாழ்பவர்கள். முடிந்துபோன ஒரு பொற்காலத்தைப் பற்றி அசைபோடுவதையே இவர்கள் பண்பாட்டில் வாழ்தல் என்று அர்த்தப்படுத்துகிறார்கள்.இது தவிர்க்கவியலாதபடி இவர்களை பழமை பேணிகளாக்கி விடுகிறது.பழமை பேணுவதில் ஒருவருக்கு அல்லது ஒரு சமூகத்திற்கு உள்ள உரிமையை இக்கட்டுரை ஏற்றுக்கொள்கிறது.அது அவரவருடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால்,பழமை பேணுவது என்பது சமூகத்தில் நிலவும் அசமத்துவங்களை நிலைநிறுத்துவதாக அமையும்போதே இவர்களுடன் மோதவேண்டி ஏற்படுகின்றது. இதைச் சிறிது விளக்கமாகப் பார்ப்போம்.

பழமை என்று வரும்போது அதிலுள்ள செழிப்பான அல்லது கூர்ப்படையக்கூடிய உயிர்த்துடிப்பான பகுதிகளை உள்வாங்குவது வேறு.மாறாக,அதிலுள்ள அழுகிய மற்றும் அகமுரண்பாடான அம்சங்களைப் பேணுவது,அதாவது கூர்ப்புக்குத் தடையாகவுள்ள அம்சங்களைக் காவுவது என்பது வேறு.இங்கு முதலில் ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டும்.பழமை என்பது எல்லா இடங்களிலும் எப்பொழுதும் புனிதமானதாக இருப்பதில்லை.அதில் அகமுரண்பாடான அம்சங்களும் எதிர்மறையான அம்சங்களும் அதாவது, கூர்ப்புக்குத் தடையான அம்சங்களும் இருக்க முடியும்.உதாரணமாக சாதி,பால் அசமத்துவங்கள் இவையிரண்டும் கீழைத்தேயப் பண்பாட்டில் பாரம்பரியத்தினடியாக வருகின்றன.பழமையைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு சாதியைப் பாதுகாக்கும் ஒருவர் அல்லது பால் அசமத்துவத்தை நியாயப்படுத்தும் ஒருவர் கூர்ப்பின் எதிரியாகிவிடுகிறார்.

காந்தி சொன்னார்,சாதி எனப்படுவது இந்தியப் பண்பாட்டின் அழுகிய ஒரு பகுதி என்று.பெரியார் சொன்னார்,ஒரு இந்துவாக இருந்து கொண்டு பால் சமத்துவத்தை ஆதரிக்க முடியாது என்று.

எனவே, ஒரு சமூகத்தின் இறந்த காலத்தின் தொகுப்பாகக் கிடைக்கும் எல்லா அம்சங்களும் கூர்ப்புக்கு வழிவிடுபவையாக இருக்கவேண்டும் என்பதில்லை. ஒரு சமூகத்தின் இறந்த காலம் முழுக்க முழுக்க ஒரு கறையற்ற பொற்காலமாக எந்தவொரு சமூகத்திலுமே இருந்ததில்லை.இருக்கவும் முடியாது.பொதுவாக எல்லாச் சமூகங்களிலும் இறந்த காலத்தின் தொகுப்பு எனப்படுவது நிகழ்காலத்தைப் பொறுத்தவரை சிலசமயங்களில் இறந்த காலத்தைப் பொறுத்தவரையிலும்கூட நேர்மறையான அம்சங்களையும் எதிர்மறையான அம்சங்களையும் தன்னகத்தே கலந்து வைத்திருக்கும்.இதில் சாதி,பால் அசமத்துவங்கள்,இனவாதம்,மதவாதம்,நிறவாதம்,மொழிவாதம்,பிரதேசவாதம்,பிராந்தியவாதம்,ஊர்வாதம்…..போன்ற இன்னோரன்ன கூறுகளைப் பண்பாட்டின் எதிர்மறைக் கூறுகள் எனலாம்.அதேசமயம் தொன்மை,கலையுணர்வு, ருசியுணர்வு,அறிவியல் உணர்வு, அறிவியல் ஒழுக்கம், விருந்தோம்பல் போன்ற இன்னோரன்ன அம்சங்களைப் பண்பாட்டின் நேர்மறை அம்சங்கள் எனலாம்.

 

இதன்படி பண்பாட்டை ஒரு மாறியாகக் கருதும் ஒரு சமூகம் பண்பாட்டின் எதிர்மறை அம்சங்களைக் கழட்டிவிட்டு அதன் செழிப்பான பகுதிகளைப் புதிய யதார்த்தத்திற்கு ஏற்ப தகவமைத்துக் கொள்கிறது.அதாவது பாம்பு செட்டையைக் கழற்றுவதுபோல அல்லது வண்ணாத்துப்பூச்சி மயிர்க்கொட்டியிலிருந்து வருவதுபோல.அதேசமயம் பண்பாட்டை மாறிலியாக வியாக்கியானம் செய்யும் தரப்பினர் பெரும்பாலும் அதன் எதிர்மறை அம்சங்களை நிகழ்காலத்துக்கும் காவிவர முற்படுகிறார்கள்.இது அவர்களைக் கூர்ப்பின் எதிரிகளாக உள் முரண்பாடுகளின் கதம்பமான கலவையாகவும் ஆக்கிவிடுகிறது.

உதாரணமாக, தமிழ்ப் பெண்களின் சேலை பற்றிய விவகாரம்.சேலைக்கு அணியும் பிளவுஸ் அல்லது மேற்சட்டை பண்டைத் தமிழ் மரபில் இருந்ததில்லை என்ற ஒரு விளக்கம் உண்டு. இது பிறிதொரு கட்டுரையில் தனியாக ஆராயப்பட வேண்டிய விவகாரம்.ஆனால்,இங்கு பிரச்சினை எதுவென்றால்,பிளவுஸ் ஒரு தமிழ்ப் பண்பாட்டு உடுப்பா?இல்லையா என்பதல்ல.மாறாக பண்பாட்டு உடுப்பு என்று கருப்படும் சேலையையும் பிளவுசையும் பெண்கள் அணியவேண்டும் என்று வற்புறுத்தும் பண்பாட்டின் தலைவர்கள்,தாங்கள் மட்டும் சேட்டும்,ரவுசரும் சப்பாத்தும் அணிந்து கொண்டு அலுவலகங்களுக்கு வருகிறார்கள்.அவர்களைப் பொறுத்தவரை பெண்தான் பண்பாட்டின் காவி,ஆணல்ல. இது குறிப்பிட்ட பண்பாட்டிலுள்ள ஒரு எதிர்மறை அம்சம். அதாவது பண்பாட்டைப் பேணும் விவகாரத்தில் பால் சமத்துவம் பேணப்படுகிறது என்பது சமூகத்தின் அரைவாசிப் பேர்களுடைய விரும்பிய ஆடையை அணியும் உரிமையை மறுக்கும் ஒரு பண்பாடு கூர்ப்புக்குரியதா அல்லது கூர்ப்பின் எதிரியா?

தனக்குள் மோதும் நேர்முரணான கூறுகளைக் கொண்ட ஒரு பண்பாடு உய்யமுடியாது.அது தனக்குள் மோதிக் கொள்வதிலேயே அதன் உயிர்ச் சக்தியையும் நேரத்தையும் விரயம்செய்து விடுகிறது. இதனால் கூர்ப்பை நோக்கி உந்தித் தள்ளும் இயங்கு விசைகள் வீணாகி விடுகின்றன.எனவே, இறந்த காலத்தின் அகமுரண்பாடான அம்சங்களையும் கூர்ப்புக்குதவாத கூறுகளையும் களைந்துவிட்டு மிஞ்சியுள்ள பெருமைக்குரிய தனித்துவமிக்க,செழிப்பான கூறுகளை நிகழ்காலத்துக்கும் வரும் காலத்துக்கும் ஏற்றாற்போல புதுப்பித்துக் கொள்ளும் அல்லது செப்பனிட்டுக்கொள்ளும் அல்லது தகவமைத்துக் கொள்ளும் ஒரு சமூகமே கூர்ப்பில் முன்னேறுகிறது.

பண்பாட்டுத் தனித்துவங்களைப் பேணுவது என்பது ஒரு சமூகம் உலக ஓட்டத்துடன் ஒத்தோட மறுத்து,தனித்து,உதிரியாக நிற்பது அல்ல. அதேசமயம் ஊரோடு ஒத்தோடுவது என்பது தனது வேர்களை அறுத்துக்கொண்டு ஒரு பலம்மிக்க புறத்திப் பண்பாட்டுடன் தன்வசமிழந்து கரைந்து விடுவதுமல்ல.குறிப்பாக,இப்போதுள்ள பூகோளமயமாதற் சூழலில் இத்தகைய உரையாடல்கள் அதிகம் முக்கியத்துவம் பெறுகின்றன.பூகோளமயப்பட்டுவரும் இவ்வுலகில் எதுவுமே அதன் தூய இயல்பான வடிவத்தில் நீடித்திருப்பது சாத்தியமற்றதாகி வருகிறது. தற்போது பூமியில் எதுவுமே தூயதாக இல்லை. எல்லாமும் ஏதோ ஒரு விகிதமளவுக்கு மற்றதுடன் கலந்தே காணப்படுகின்றன.இதில் தூய பண்பாடும் இல்லை;தூய மரபும் இல்லை;தூய சமாதனமும் இல்லை;தூய யுத்தமும் இல்லை;தூய மொழியும் இல்லை;தூய மதமும் இல்லை;தூய பொருளாதாரமும் இல்லை;தூய இலட்சியமும் இல்லை.நாங்கள் எல்லோருமே ஏதோ ஒரு விகிதமளவுக்கு ஐரோப்பிய மயப்பட்டுவிட்டோம் அல்லது சமகாலத் தொடர்பில் வைத்துச் சொன்னால் அமெரிக்க மயப்பட்டு வருகிறோம்.

எமது உணவுப் பழக்கங்கள்,உடுபுடவைகள், ருசிரசனைகள்,விருப்பத் தெரிவுகள்,தொழிற் தெரிவுகள்,தொழில் உறவுகள்,கல்வி முறை,சிந்தனை முறை, வெளிப்பாட்டு முறை,தொடர்பாடல்..என்று எல்லாவற்றிலும் ஏதோ ஒரு விகிதமளவுக்கு ஐரோப்பிய மயப்பட்டே இருக்கிறோம்.குறிப்பாகத் தனது பண்பாட்டின் தனித்துவங்களைப் பொத்திப் பொத்திப் பாதுகாக்க விழையும் ஒருவர் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவும் பரப்பவும் பயன்படுத்தும் சாதனங்களும் ஊடகங்களும் பெருமளவுக்கு ஐரோப்பியப் பண்பாட்டின் கொடைகள்தான். பண்பாட்டுத் தூய்மையைப் பேணுவதாகக் கூறிக்கொண்டு அச்சியந்திரத்தையும் இன்ரநெற்றையும் நிராகரிக்க முடியுமா?

எனவே,ஒன்று மற்றதுடன் ஏதோ விகிதமளவுக்குக் கலந்து,கரைந்து விட்டிருக்கும் இவ்வுலகில் தூய பண்பாட்டில் வாழ்தல் என்பது ஒரு கற்பனையே. பண்பாடு என்பது ஒரு வாழ்க்கை முறை. நாம் வாழத் தயாரில்லாத ஒன்றைப் பற்றி அல்லது வாழ முடியாத ஒன்றைப் பற்றி இலட்சிய பூர்வமாகக் கதைப்பது என்பது ஒருவித அகமுரண்பாடுதான்.இதுதான் பண்பாட்டோடு வாழ்தல் என்பது.பண்பாட்டில் வாழ்தல் என்பது வேறு. பண்பாடோடு வாழ்தல் என்பது வேறு. பண்பாட்டில் வாழ்தல் என்றால் அந்தப் பண்பாடே வாழ்க்கை முறையாக இருக்கிறது என்று பொருள். நாம் அதுவாகவும், அது நாமாகவும் இருக்கிறோம் என்று பொருள். ஆனால், பண்பாட்டுடன் வாழ்தல் என்பது அந்தப் பண்பாட்டை ஒரு இலட்சியமாகக் கருதும் அளவுக்கு அதிலிருந்து விலகி வாழ்கிறோம் என்று பொருள். அதாவது, அது ஒரு வாழ்க்கை முறையாக இல்லாமல் இனிமேற்றான் அடையப்படவேண்டிய ஒரு உன்னதமான இலட்சியமாக இருக்கிறது என்று பொருள்.இங்கே பண்பாடு என்பது ஒரு புறத்திப் பொருளாகி விடுகிறது என்பதால்தான் அதனுடன் சேர்ந்து வாழ்தல் என்று கூறவேண்டியுள்ளது.

கொலனித்துவத்துக்குட்பட்டு பெருமளவுக்கு ஐரோப்பிய மயப்பட்டு இன்று அரைவேக்காட்டுப் பண்பாடுகளாய்க் காணப்படும் பெரும்பாலான ஆசிய, ஆபிரிக்க,லத்தீன் அமெரிக்க நாடுகள் இந்த முரண்பாட்டுள் சிக்கித் தவிக்கின்றன.பூகோளமயமாதல் எனப்படுவது பண்பாட்டுத்தளத்தில் பண்பாட்டு ஏகத்துவத்தைக் கொண்டு வருகிறது என்று அச்சப்படுவோர்,அதை எதிர்கொள்வதற்காக பண்பாட்டு பன்மைத்துவம் என்ற கருத்துருவத்தை முன்வைக்கிறார்கள்.

உண்மையில் கூர்ப்புறும் ஒரு பண்பாடே இன்னொரு கூர்ப்புறும் பண்பாட்டின் இருப்பை ஏற்றுக்கொள்ளும். பன்மைத்துவம் என்றாலே அதுதான்,வளரக்கூடிய ஒன்று,வளரக்கூடிய இன்னொன்றின் இருப்பை ஏற்றுக்கொண்டு அதோடு சேர்ந்து வாழ்வது. ஆனால்,தேங்கி நிற்பவைகள் எப்பொழுதும் இன்னொன்றின் இருப்பை ஏற்றுக்கொள்வதில்லை.ஏனெனில் வளர்ச்சி எப்பொழுதும் தேக்கத்தை உடைத்துவிடும்.எனவே,வளர மறுக்கும் ஒன்று வளரத்துடிக்கும் ஒன்றுடன் சேர்ந்து வாழ விரும்பாது.

இதன்படி பார்த்தால் பன்மைத்துவம் எனப்படுவது ஒன்று மற்றதின் வளர்ச்சியையும் தனித்துவத்தையும் ஒப்புக்கொண்டு அதனுடன் சேர்ந்து வாழ்வதுதான்.ஒரு கெட்டிக்காரன்தான் இன்னொரு கெட்டிக்காரனை மதிப்பான். ஒரு சுத்த வீரன்தான் இன்னொரு வீரனை மதிப்பான். ஒரு உயிருள்ள பண்பாடு நிச்சயமாக இன்னொரு பண்பாட்டைக் கண்டு,அது எத்தகைய பெரியதாக இருந்தாலும்கூட பயப்படாது. எனவே பண்பாட்டுப் பன்மைத்துவம் எனப்படுவது பண்பாட்டை உயிருள்ளதாக அதாவது கூர்ப்புறுவதாகக் கருதும் ஒரு சிந்தனையோட்டத்துக்கே பொருத்தமானது.மாறாக இறந்த காலத்தின் சடலங்களைக் காவுவது பண்பாடு எனக்கருதுவோர் குறிப்பிட்ட சமூகத்தை வெளிவிரிய விடாது மூடிப்பூட்டி விடுகிறார்கள்.

எப்பொழுது ஒரு சமூகம் அதன் உள்ளிருக்கும் சக்திகளால் மூடிப் பூட்டப்படுகிறதோ அப்பொழுது வெளிச்சக்திகள் வந்து அதை உடைத்து திறக்கும் ஒரு நிலை தோன்றுகிறது.சமூகக்கூர்ப்பு அடிப்படை விதியும் அதுவே. ஆப்கானில் தலிபான்களுக்கு இதுதான் நடந்தது.அதாவது இறந்த காலத்தில் வாழ்தலையே பண்பாடாகக் கருதும் எந்தவொரு சமூகமும் பூகோளமயப்பட்டுவரும் இக்காலச் சுழலின் பண்பாட்டு ஏகத்துவத்தின் வழிகளை இலகுவாக்கிக் கொடுப்பவைகளாக மாறிவிடுகின்றன.

பூகோளமயமாதல் எனப்படுவது நாடுகளை திறப்பதன்மூலம் பூமியை ஒரே அலகாக–ஒரே கிராமமாக–மாற்றிவருகிறது. இது இரண்டு தங்களில் நிகழ்கிறது. பொருளாதாரத் தளத்தில் திறந்த சந்தை நாடுகளின் எல்லைகளைக் கரைத்து வருகிறது. சந்தையில் திறக்கப்பட முடியாத எல்லைகளுக்குப் படைகள் நகர்த்தப்படுகின்றன.மற்றொரு தளத்தில் அதாவது தொழில்நுட்பத் தளத்தில் இன்ரநெற் நாடுகளையும் அறிவையும் திறந்து வருகிறது.எனவே,பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத் தளங்களில் பூமி திறக்கப்பட்டுவரும் இக்காலச் சூழலில் பண்பாட்டின் பெயராலோ அல்லது வேறு எதனுடையதும் பெயராலோ ஒரு சமூகத்தைப் பூட்டிவைப்பது கடினம்.அது புறத்தியாருக்கும் அதிகம் அனுகூலமாய் முடியும். இது முதலாவது.

இரண்டாவது,பண்பாட்டை முக்காலத்துக்கும் உரிய உயிருள்ள தொடர் இயக்கமாகக் கருதும் ஒரு சமூகம், தானே தன்னுள் சுருங்க விரும்பாது.அது எப்பொழுதும் வெளிவிரியத் துடிக்கும்,இதனால் அது உலகப் பொதுப்போக்குடன் தன்னை தகவமைத்துக் கொள்ளும் வாய்ப்புக்களே அதிகரிக்கும்.எனவே, பண்பாட்டை முக்காலத்துக்கும் உரியதாக அதை அதன் கூர்ப்பியல்பின் அடிப்படையில் விளங்கி வைத்திருக்கும் ஒரு சமூகமே பண்பாட்டு பன்மைத்துவத்துக்கு முழு அளவு தகுதியுடையது ஆகிறது. மற்றவையெல்லாம் ஏகபண்பாட்டை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு ஒரு கட்டத்தில் தம்மை அறியாமலேயே அதே ஏகப்பண்பாட்டின் கருவிகளாக மாறிவிடுகின்றன.

 

Recommended For You

About the Author: Editor Elukainews