எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள போதிலும் வவுனியாவில் முச்சக்கரவண்டி கட்டணங்களில் மாற்றமில்லை – வரையறுக்கப்பட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தலைவர் சி.ரவீந்திரன்

நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள போதிலும் மக்களின் நிலமைகளை கருத்தில் கொண்டு நாம் எவ்வித கட்டண அதிகரிப்பினையும் மேற்கொள்ளவில்லை என வரையறுக்கப்பட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தலைவர் சி.ரவீந்திரன் தெரிவித்தார்.

முச்சக்கரவண்டி கட்டண அதிகரிப்பு தொடர்பில் அவரிடம் வினாவிய போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் அடிக்கடி எரிபொருள் விலைகள் அதிகரிப்பு மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களில் எரிபொருளின் விலை நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. தற்போதும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் எரிபொருள் அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டது. இருந்த போதிலும் மக்களின் பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு நாம் கடந்த ஒரு வருடமாக எவ்வித கட்டண அதிகரிப்பினையும் மேற்கொள்ளவில்லை

வவுனியா மாவட்டத்தில் எமது சங்கத்தின் கீழ் பதிவிலுள்ள முச்சக்கரவண்டிகள் முதலாவது கிலோமீற்றருக்கு 150 ரூபாவும் அடுத்த இரண்டாவது கிலோமீற்றருக்கு 100ரூபாவும் , 20கிலோமீற்றருக்கு மேல் ஒரு கிலோமிற்றருக்கு 90 ரூபாவும் அறவிடுகின்றோம்.

இனிவரும் காலங்களிலும் எரிபொருள் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் நாம் சாரதிகளின் நலனை கருத்தில் கொண்டும் மக்களின் நலனை கருத்தில் கொண்டும் சிறிதளவில் கட்டண அதிகரிப்பு தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்ள வேண்டிய நிலமைக்கு நாம் தள்ளப்படுவோம்

அடுத்ததாக எமது சங்கத்தின் கீழுள்ள சாரதிகளின் வாழ்வாதாரங்களும் பாதிப்படைந்துள்ளன இதனை யாருக்கு தெரிவிப்பது யார் நிறைவேற்றி வைப்பார்கள் என தெரியவில்லை , எரிபொருள் அதிகரிப்பு , உதிரிப்பாகங்கள் அதிகரிப்பு , திருத்துதல் செலவுகள் , லீசிங் வட்டி வீகிதம் அதிகரிப்பு போன்ற பல காரணங்களினால் எமது முச்சக்கரவண்டி சாரதிகள் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். சில குடும்பத்தினர் தற்கொலைக்கு கூட முயன்றுள்ளனர். அவ்வாறான நிலமையே முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு காணப்படுகின்றது.

வாழ்க்கை செலவீனம் நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. தினசரி நான்கு அல்லது ஜந்து பயணிகள் கூட சில சாரதிகளுக்கு கிடைப்பதில்லை இதனால் பலர் தமது வாழ்வாதாரத்தினை இழந்து முச்சக்கரவண்டியினை விற்று வேறு தொழிலினை நோக்கி செல்ல வேண்டிய நிர்ப்பத்திற்கு ஆலாகியுள்ளனர்.  எனவும் வரையறுக்கப்பட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தலைவர் சி.ரவீந்திரன் மேலும் தெரிவித்திருந்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews