சிறை வைக்கப்பட்டிருந்த ரஷ்யாவின் பிரதான எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவால்னி உயிரிழந்துள்ளார்.
ரஷ்ய அதிபரை விமர்சித்து வந்த எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவால்னி, அரசுக்கு எதிராக செயற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, 19-வருட கால சிறைத்தண்டனை அளிக்கப்பட்டு, ரஷ்ய சிறைச்சாலைகளிலேயே மிகவும் மோசமானதாக கருதப்படும் ஆர்க்டிக் பீனல் காலனி எனும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், யமலோ-நெனெட்ஸ் மாவட்ட சிறைச்சாலை அதிகாரிகள், தற்போது 47 வயதாகும் அலெக்ஸி நவால்னி, சிறையில் மயக்கமடைந்ததாகவும், அவசர மருத்துவ குழுவினர் விரைந்து வந்து அவரை காப்பாற்ற போராடியும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டதாகவும் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அலெக்ஸி நவால்னியின் உயிரிழப்பிற்கான காரணம் சரிவரத் தெரியவில்லை.
நவால்னியின் சட்டத்தரணி லியோனிட் சோலோவ்யோவ் இத்தகவல் குறித்து விளக்கமளிக்க மறுத்துவிட்டார்.
நவால்னியின் செய்தித் தொடர்பாளர் கிரா யர்மிஷ், அவரது மரணம் குறித்து தங்களுக்கு இன்னும் எந்த உறுதியான தகவலும் கிடைக்கவில்லை என்று தனது X பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மக்களை ஈர்க்கும் பிரசாரகராக பார்க்கப்பட்ட நவால்னி, 2018 ஆம் ஆண்டு ரஷ்ய அதிபர் தேர்தலில் போட்டியிட முன்வந்தார்.
அதற்காக பிராந்திய அளவிலான பிரசார அலுவலகங்களை அவர் அமைத்தார். ஆனால், இறுதியில் அவர் வாக்களிக்கக் கூட தடை விதிக்கப்பட்டது.
கடந்த 2020 ஆம் ஆண்டு இவர் நரம்பு மண்டலங்களைப் பாதிக்கும் விஷ அமிலம் செலுத்தப்பட்டு, தாக்குதலுக்கு உள்ளானார்.
இதற்காக ஜெர்மனியில் சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர், அச்சுறுத்தல்களைத் தாண்டியும் 2021ஆம் ஆண்டு ஜனவரியில் மீண்டும் ரஷ்யாவிற்குள் நுழைந்தார்.