முற்றவெளியில் சிறிலங்கா வான்படை வானூர்தி சாகாசம்

யாழ்ப்பாணம் முற்றவெளியில் சிறிலங்;கா வான்படையின் ஏற்பாட்டில் வானூர்தி சாகாசம் மற்றும் பரசூட் சாகாசம் என்பன அடுத்த மாதம் இடம்பெறவுள்ளன. இதில் இந்திய வான் படையின் உலங்குவானூர்திகளும் பங்கேற்கவுள்ளன. இது தொடர்பில் சிறிலங்கா வான்படை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

சிறிலங்கா வான்படையின் 73ஆவது ஆண்டு நிறைவு விழாவை எதிர்வரும் மார்ச் 2ஆம் திகதி கொண்டாடவுள்ளது. வடமாகாணத்தை முன்னிலைப்படுத்தி ‘நட்பின் சிறகுகள்’ எனும் வான்படை சமூக சேவை அமைப்பின் ஊடாக பல்வேறு சமூக திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி நோக்கங்களுக்கு இணங்க தரமான கல்வி மற்றும் சுற்றாடல் நிலைத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, வட மாகாணங்களில் சமூக அபிவிருத்தித் திட்டங்களில் கவனம் செலுத்தி வான்படைத் தினத்தை கொண்டாட எதிர்பார்க்கப்படுவதாக வான்படைத் தளபதி ‘எயார் மார்ஷல்’ உதேனி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் அபிவிருத்தி செய்யப்படவுள்ள 73 பாடசாலைகள் இனங்காணப்பட்டு, அந்தப் பாடசாலைகளின் அபிவிருத்திகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கான மதிப்பீடு 100 மில்லியன் ரூபா. இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு 73 ஆயிரம் புத்தகங்கள் பரிசாக வழங்கப்படவுள்ளதுடன் இதற்காக 25 மில்லியன் ரூபா செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தொழில்நுட்பக் கல்வி கண்காட்சி மற்றும் திருவிழா நிகழ்வுகள் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் எதிர்வரும் மார்ச் 6ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

இதன்போது பரசூட் சாகசங்கள், சிறிலங்கா வான்படையின் வானூர்தி சாகசங்கள் மற்றும் வானூர்தி கண்காட்சிகள், வான்படை மோப்பநாய்களின் சாகச நிகழ்வுகள், பொழுதுபோக்கு நிகழ்வுகள் மற்றும் ‘ட்ரோன்’ வானூர்திகளின் நிகழ்வுகள், மற்றும் தற்காப்புக்கலை மற்றும் அடிமுறை சண்டை காட்சிகள் உட்பட இந்திய வானூர்திப்படையின் உலங்குவானூர்தி சாகச நிகழ்வுகளும் அடங்கலாக கலாசார நிகழ்வுகளும் இரவு நேர இசைநிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

மாணவர்களின் கல்விக்காக பயன்படுத்தக்கூடிய வான்படையினர் பயன்படுத்தும் செயலிழந்த வானூர்தி இயந்திரம் யாழ்.பல்கலைக்கழகத்துக்கு அன்பளிப்பு செய்யப்படவுள்ளது.
இதனுடன் நாடளாவிய ரீதியில் 73ஆயிரம் மரக்கன்றுகளை விநியோகிக்கும் திட்டமும், இலங்கையின் மிகப் பெரிய உந்துருளி சவாரியான இலங்கை வான்படையின் ‘குவன் உந்துருளி சவாரி’ ஓட்டப்போட்டியும் ஐந்து நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

அதேசமயம், இந்த சமூக சேவை திட்டங்களுக்கான அனைத்துச் செலவுகளும் இலங்கை அரசின் தலையீடு இல்லாமல் இடம்பெறுவதோடு அதற்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் பங்களிப்பும் கிடைக்கப்பெறுவதோடு இந்தத் திட்டத்துக்கு பொதுமக்கள் தொடர்ந்து தங்களது ஆதரவை வழங்குமாறு வான்படையினர் வேண்டுகோள் விடுப்பதாக அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது-நன்றி ஊதயன்

Recommended For You

About the Author: Editor Elukainews