தமிழர்களுக்கு எதிரான ஜனாதிபதியை தெரிவு செய்ய ஆதரவளித்ததை ஏற்றுக்கொண்ட ஜே.வி.பி

தனது கட்சியின் ஆதரவுடன் தெரிவாகிய ஜனாதிபதி, முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலையுடன் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட யுத்தத்திற்கு தலைமைத் தாங்கியதை மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) ஏற்றுக்கொண்டுள்ளது.

தமிழர்களுக்கு எதிரான ஒரு தலைவரை கொண்டுவர வேண்டுமென்ற பிரச்சாரத்துடன் கடந்த 2005ஆம் ஆண்டு இடம்பெற்ற  ஜனாதிபதித் தேர்தலில், தமது கட்சி ஆதரவு வழங்கிய விடயத்தை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியாவிற்கான ஐந்துநாள் விஜயத்தின் பின்னர் உள்ளூர் ஊடகமொன்றுக்கு (நியூஸ்பெஸ்ட்) வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

“எமது நாட்டின் வரலாற்றில் அனைத்து அரசியலும் அடுத்தவர்களுக்கு எதிராக இருந்தது. 2005இல் மஹிந்த தமிழர்களுக்கு எதிராக அதிகாரத்தை பெற்றுக்கொள்கிறார். அதுதான் அதனை வெளிப்படுத்தினால். அந்த அரசியல் சூழல் அதுதான். தமிழர்களுக்கு எதிரான தலைவர் ஒருவரை கொண்டுவருவோம்.” தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தனது ஆதரவை, மஹிந்தவுக்கு வெளிப்படுத்திய மக்கள் விடுதலை முன்னணியின் சோமவன்ச அமரசிங்க, “தமது கட்சி போருக்கு அஞ்சவில்லை” எனவும், “போருக்கு அஞ்சினால் சமாதானத்தை ஏற்படுத்த முடியாது,” எனவும் தெரிவித்திருந்தார்.

2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ச முதன்முறையாக  ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியபோது,  மக்கள் விடுதலை முன்னணி, புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆதரவை வெளிப்படுத்தியதோடு அவருக்கு ஆதரவாக பிரச்சாரத்திலும் ஈடுபட்டது.

ஜூலை 2006இல் மஹிந்த ராஜபக்ச யுத்தத்தை மீண்டும் ஆரம்பித்த பின்னர், மஹிந்தவின் பெரும் இராணுவ வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாகவும் மக்கள் விடுதலை முன்னணி வாக்களித்திருந்தது.

2010ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ச தமிழர்களை தோற்கடித்த உத்வேகத்துடன் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றதாகவும் அநுர குமார திசாநாயக்க இந்த செவ்வியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தத் தேர்தலில் தமிழ் இனப்படுகொலைக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களில் மிகமுக்கியமானவரும், யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த இலங்கை இராணுத் தளபதியும்,  அப்போதைய பொது வேட்பாளருமான சரத் பொன்சோவிற்கு, மக்கள் விடுதலை முன்னணி தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தது.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவதாக வாக்குறுதியுடன், கடந்த 2005ஆம்  ஆண்டு பதவிக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்றரை வருடங்களில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தார்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மாத்திரம், 40,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாகவும், இந்த யுத்தத்தில் மொத்தமாக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாகவும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: Editor Elukainews