சாந்தனின் மரணத்திற்கு இந்திய மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு பொறுப்புக் கூற வேண்டும்…! தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் வலியுறுத்து…!

இந்திய மத்திய,மாநில அரசுகளின் நீதிக்கு புறம்பான செயலே சாந்தனின் மரணத்துக்கு மூலகாரணமாக அமைந்துள்ளதுடன் சாந்தனின் மரணத்திற்கு இந்திய மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியவை பொறுப்புக் கூற வேண்டும் என தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் வலியுறுத்தியுள்ளது.
போராளி சாந்தனுக்கு புகழ் வணக்கம் என அனைத்துலக தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் இன்று(04) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக்கப்பட்டு 32 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துவந்த நிலையில் இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சாந்தனை சிறப்பு முகாமில் ஒன்றரை ஆண்டுகள் அடைத்து வைத்தது இந்திய மத்திய, மாநில அரசுகளின் நீதிக்கு புறம்பான செயல் என்றும் இதுவே அவரின் மரணத்துக்கு மூலகாரணமாக அமைந்ததாகவும் குற்றம் சாட்டியிருக்கும் அனைத்துலக தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் சாந்தனின் மரணத்திற்கு இந்திய மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியவை பொறுப்புக் கூற வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறது.
ராஜீவ் காந்தி கொலையில் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவராக 1991 யூலை 22 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இலங்கையின் யாழ் மாவட்டம் வடமராட்சியைச் சேர்ந்த சாந்தன் என்று அழைக்கப்படும் தில்லையம்பலம் சுதேந்திரராஜா 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் திகதி விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
எனினும் சாந்தனோடு விடுதலை செய்யப்பட்டவர்களில் பேரறிவாளன் உள்ளிட்ட மூவர் இந்தியர்கள் என்பதால் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஏனைய நான்கு பேரும் இலங்கையர்கள் என்பதால் அவர்களை விடுவிக்காது சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.
கடந்த ஒன்றரை வருடங்களாக சிறை வாழ்க்கையை விட கடுமையான நெருக்கடியான வாழ்க்கையை சிறப்பு முகாமில் சந்தித்து வந்த சாந்தன் நாடு திரும்புவதற்கு பல தடவைகள் கோரிக்கை விடுத்திருந்த போதும் அவரது கோரிக்கையை விரைந்து முன்னெடுக்கத் தவறிய இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகள் அவரை நோயாளியாக்கிக் கொன்றுவிட்டன. இப் படுபாதகச் செயலை  அவதானிப்பு மையம்  வன்மையாகக் கண்டிக்கின்றது.
நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட வெளிநாட்டு பிரஜை ஒருவரை அவரது சொந்த நாட்டிற்கு அனுப்பிவைக்க வேண்டியது. ஒரு ஜனநாயக அரசாங்கத்தின் கடமையாகும். அவ்வாறான நிலையில் 2022 ஆம் ஆண்டு 11 ஆம் மாதம் 11 ஆம் திகதி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட சாந்தனை 2023 பெப்ரவரி மாத இறுதிவாரம் அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு வேறு வழியின்றி மருத்துவனைக்கு கொண்டு சென்றே ஆகவேண்டும் என்ற நிலைவரை அவரை சிறப்பு முகாமிலேயே தடுத்து வைத்திருந்தது சாந்தனை சிறப்பு முகாமிலேயே வைத்து சாகவிடுவதற்கான சதித்திட்டமா என அவதானிப்பு மையம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கே பல மர்மங்கள் நிறைந்தது. கொலை வழக்கினைக் கையாண்ட பல பொலிஸ் உயர் அதிகாரிகள் தங்கள் ஓய்வுக்காலத்தில் எழுவருக்கு வழங்கப்பட்ட தண்டனை நீதிக்கு அப்பாற்பட்டது என அவர்கள் வேறு வழியின்றி திட்டமிட்டு குற்றவாளிகளாக்கப்பட்டனர்.
என ஊடகங்களில் கூறிவந்திருக்கின்றனர். அவ்வாறிருக்க 32 வருடங்கள் சிறைவாழ்க்கையை அனுபவித்த ஒருவரை நீதிமன்றம் விடுதலை செய்தபின் சிறைச்சாலையை விட கொடுமையான அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட கொடும் சிறப்பு முகாமில் அடைத்துவைத்து ஒழுங்கான உணவோ சீரான மருத்துவ வசதியோ கொடுக்காது உடல் ரீதியாகவும், உளரீதியாகவும் கடுமையான துன்பங்களைச் சந்திக்கும் அளவிற்கு அவர்களை ஒன்றரை வருடங்கள் சிறப்பு முகாமில் இந்திய மத்திய மாநில அரசுகள் இணைந்து தடுத்துவைத்திருந்ததன் உள்நோக்கம் என்ன ?
சாந்தன் தான் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும், தனது தாய் நிலத்திலே  வயது முதுமையுற்றிருக்கும் தனது தாயுடன் இறுதிக் காலத்தைக் களிப்பதற்காக தன்னை இலங்கைக்கு அனுப்பிவைக்குமாறு நீதிமன்றத்தை  நாடியபோது நீதிமன்றமும் உடனடியாக சாந்தனை இலங்கைக்கு அனுப்புமாறு உத்தரவிட்டும் அவரை இலங்கைக்கு அனுப்பாது கால தாமதப்படுத்தியதன் உள்நோக்கம் என்ன ?
2024 பெப்ரவரி 29 ஆம் திகதிக்கு முன்னர் சாந்தனை இலங்கைக்கு அனுப்புமாறு முன்னர் உத்தரவிட்டிருந்த சென்னை உச்ச நீதிமன்றம் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் சாந்தனை பெப்ரவரி 21 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கைக்கு அனுப்புமாறு அதாவது சாந்தன் தீவிர நோய்வாய்ப்பட்டு சென்னை ராஜீவ்காந்த அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் படமுன்னர் உத்தரவிட்டிருந்தும் அதனை பெப்ரவரி 27 ஆம் திகதி வரை சாந்தனுக்கோ சாந்தனின் வழக்கறிஞருக்கோ தெரியப்படுத்தாது மாவட்ட ஆட்சியர் மறைத்து வைத்ததன் பின்னணி என்ன?  என்ற கேள்விகளுக்கு இந்திய மத்திய மற்றும் ஆளும் மாநில அரசான திராவிட முன்னேற்றக் கழக அரசு பதிலளிக்கவேண்டும்.
ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை சாந்தனை பழிவாங்குவதற்காக இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து அவரை படுகொலை செய்துவிட்டதாகவே கருதுகின்றனர். ஈழத்தமிழர்கள் சாந்தனைக் காப்பாற்ற முடியவில்லையே என்ற குற்ற உணர்வோடு தங்களுக்குள் விம்மி வெடித்து நிற்கின்றனர். இந்த விடயத்தில் தீவிர தமிழ்த் தேசிய அரசியல் பேசும் அரசியல் தரப்புக்கள் சாந்தனையும் ஏனைய விடுதலை செய்யப்பட்டவர்களையும் மீட்பதற்கு எந்தவித நகர்வினையும் வெற்று அறிக்கைகள் மற்றும் சந்திப்புகளுக்கு அப்பால்  மேற்கொண்டிருக்கவில்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.
மேலும், சாந்தன் மரணமடைந்திருக்கக்கூடிய நிலையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்ற மற்றைய மூவரையும் உடனடியாக விடுதலை செய்வதற்கும் அவர்களை இலங்கைக்கோ அவர்கள் விரும்பிய நாட்டிற்கோ அனுப்புவதற்குமான நடவடிக்கைகளில் மத்திய,மாநில அரசுகள் உடனடியாக ஈடுபட வேண்டும். தீவிர தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் சாந்தன் விடயத்தில் அதிகம்  பொறுப்புணர்ந்து செயல்படவில்லை.
விடுவிக்கப்பட்ட சாந்தன் நாட்டுக்குத் திரும்பினால் இலங்கைச் சட்டங்களின் பிரகாரம் அவருக்கும் அவரை விடுவிக்க உதவும் தங்களுக்கும் ஆபத்து ஏற்படுமா என்ற ஒரு பயம் அரசியல்வாதிகளிடம் இருந்திருக்கிறது. ஒரு சிலர் அதனை வெளியில் சிலரிடம் கூறியுமிருக்கிறார்கள்.  தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியோ அல்லது உரிய அமைச்சரிடம் உத்தியோக பூர்வமாக ஒரு பதிலை பெற்றிருக்க முடியும். ஆனால் அவர்கள் எமக்கு ஏன் வீண் வேலை என்பதுபோல் கள்ள மௌனம் காத்தார்கள்.
ஒரு சிலரோ அரசியல் ஆதாயத்திற்காக சாந்தனின் தாயாருடன் படம் எடுத்து தாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என பிரச்சாரம் மட்டும் செய்தார்கள். இந்த விடயத்தில் சாந்தனுக்கோ, சாந்தனது குடும்பத்திற்கோ ஒரு துளி அளவேனும் உதவவோ அலோசனை வழங்கவோ தீவிர தமிழ்த் தேசிய தரப்புக்கள் முன்வரவில்லை என்பதையும் தமிழ்த் தேசிய அவதானிப்புமையம் அழுத்தமாக பதிவு செய்கின்றது.
இவ்வாறு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சாந்தனை இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டேனும் விடுவிப்பதற்கும் , 32 வருடம் சிறைவாசம் அனுபவித்த ஒருவரை அவரது தாயின் முன் நிறுத்த வாய்ப்பு இருந்தும் அதனை தமிழ்ச் சமூகம் தவறிவிட்டடதோடு மட்டுமல்லாது சாந்தனை விடுவிப்பதற்காக  குறிப்பிட்டுச் செல்லக்கூடிய அறவழியிலான போராட்டம் எதையும் கூட தாயகத்திலும் புலத்திலும் உள்ள எமது அரசியல்  மற்றும் சிவில் ஆளுமைகள் அழுத்தமாக முன்னெடுத்திருக்கவில்லை. மாறாக சாந்தனது குடும்பத்தினரை விரக்தியடையவே வைத்தது.
இதன் மூலம் சாந்தனின் மரணத்திற்கு  இந்திய மத்திய மாநில அரசுகள் மாத்திரமின்றி தமிழ்த் தேசிய அரசியல் தரப்புக்களும் ஏன் நாமும் கூட சாந்தனுக்காய் ஒரு அடையாளப் போராட்டத்தைக் கூட நடத்த முடியாதவர்களாகி விட்டோம் என்ற குற்ற உணர்வோடு சாந்தனின் புகழுடல் மீது இருகரம் கூப்பி வணக்கம் செலுத்துகின்றோம் என்று அனைத்துலக தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews