வெடுக்குநாறிமலை சம்பவத்திற்கு மட்டக்களப்பில் போராட்டம்

வெடுக்குநாறிமாலையில் சிவராத்திரி தினத்தன்று பொலிஸார் மேற்கொண்ட அடாவடித்தனத்தை கண்டித்து மட்டக்களப்பில் இன்று கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

தமிழ் தேசிய உணர்வாளர்களின் அழைப்பின் அடிப்படையில் இந்த போராட்டம் காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபி அருகில் நடைபெற்றது.

சிவராத்திரி தினத்தன்று வவுனியா வடக்கு வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளின் போது ஆலயத்திற்குள் நுழைந்த பொலிஸார் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்ததுடன் மேலும், கடும் அடக்குமுறையினை பிரயோகித்திருந்தனர்.

இதனை கண்டிக்கும் முகமாகவே மட்டக்களப்பில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, “எங்கள் மண்ணில் எங்கள் மலையில் உங்களுக்கு உரிமையில்லை, சிவராத்திரி நாளிலும் சிங்கள அடக்குமுறை ” தமிழர்களின் வழிபடும் உரிமையினை தடுக்கும் அரசை கண்டிக்கின்றோம், ஆதிசிவன் கோயில் நிலத்தினை அழிக்காதே வெளியேறு,

வெடுக்குநாறி ஆதிசிவன் சிவராத்திரி பூசையை தடுத்த படையினரின் அராஜகத்தை கண்டிக்கின்றோம் போன்ற பல்வேறு கோசங்கள் கொண்ட பதாகைகளை தாங்கிவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மட்டக்களப்பு மாவட்ட  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்

உறவுகளின் சங்கத்தினர், மதத்தலைவர்கள், தமிழ் தேசிய உணர்வாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews