போராளிகள் நலன்புரிச் சங்க தலைவர் கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு (TID) அழைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரிச் சங்க தலைவருமான இளைஞர் ஒருவரை நாளைய தினம்(12) காலை 9.00 இற்கு கொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு வாக்குமூலம் பெற வருமாறு அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான அழைப்பாணை கடிதம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் அவரின் வீட்டிற்கு சென்று நேற்று(10) வழங்கப்பட்டுள்ளது.
குறித்த அழைப்பாணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
விசாரணை பிரிவு ஒன்றின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைவாக முகநூல் கணக்கு சம்மந்தமாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக விசாரணையை மேற்கொள்வதற்கு 2024 ஆம் ஆண்டு 3 ஆம் மாதம் 12 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு இல149, கெப்பிட்டல் கட்டிடம்,நாரஹேன்பிட்ட முகவரியில் விசாரணை பிரிவு ஒன்றின் பொறுப்பதிகாரியை சந்திக்குமாறு அழைக்கின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.