மன்னார் சதோச மனித புதைகுழி வழக்கானது நேற்றையதினம்(11) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் பேராசிரியர் ராஜ் சோம தேவ், SOCO பொலிஸார் உட்பட அனைத்து தரப்பினரினதும் அறிக்கைகள் பெற நடவடிக்கை எடுக்கபட வேண்டும் என்பதுடன் சட்ட வைத்திய அதிகாரி ராஜபக்ஸவை அடுத்த தவணையில் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகும் படி கட்டளை ஆக்கப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு தொடர்பில் சட்டத்தரணி நிரஞ்சன் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில்,
மன்னார் சதோச மனித புதைகுழி வழக்கானது மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஏற்கனவே நீதிமன்றத்தினால் கோரப்பட்ட அறிக்கை கடந்த தவனை சட்டவைத்திய அதிகாரி ரஜாபக்ஸவினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த அறிக்கையில் முழுமனதாக எல்லா விடயங்களும் அடங்காத படியினால் அது சம்பந்தமாக இன்று(11) நீதிமன்றத்தின் கவனத்திற்கு நாங்கள் கொண்டு வந்திருந்தோம்.
அதாவது அங்கு எடுக்கப்பட்ட மனித எச்சங்களிலிருந்து அதற்கான வயது, அதன் பால் நிலை, இறப்புக்கான காரணம் ,தொடர்பான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டி இருப்பதோடு பேராசிரியர் ராஜ் சோமதேவினாலும் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அதே நேரம் SOCO போலீசார் போன்றவர்களாலும் அறிக்கைகள் சமர்பிக்கப்பட்ட பின்னர் ஒட்டுமொத்தமாக எல்லாருடைய அறிக்கைகளும் பெறப்பட்ட பிறகு தான் குறித்த வழக்கு தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியும் என்று இன்று(11) நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததாக தெரிவித்தார்.
இதனை அடுத்து நீதிமன்றமானது சட்ட வைத்திய அதிகாரி ராஜபக்ஸவை நீதிமன்றத்தில் ஆஜராகும் அறிவுறுத்தல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதுடன் குறித்த வழக்கு விசாரனையை மீண்டும் மே மாதம் 13ஆம் திகதி அழைப்பதற்காக திகதியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.