நேற்றுமுன்தினம் பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகே வைத்து கடத்தப்பட்டு வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட, வட்டுக்கோட்டை – மாவடி பகுதியைச் சேர்ந்த தவச்செல்வம் பவித்திரன் அவர்களது இறுதிச் சடங்குகள் இன்றையதினம் அவரது இல்லத்தில் நடைபெற்றது.
இதன்போது அவரது மனைவி பல பரபரப்பு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். அவரது மனைவி தெரிவிக்கையில்,
கடற்படையினர் நினைந்திருந்தால் எனது கணவரை காப்பாற்றி இருக்கலாம். அடைக்கலம் புகுந்த என்னையும் எனது கணவரையும் கடற்படையினர் துப்பாக்கியால் தாக்கி வெளியே தள்ளினர்.
நானும் எனது மனைவியும் தான் நிற்கிறோம். எங்களை காப்பாற்றுங்கள் என எனது கணவர் கெஞ்சினார். ஊர்காவற்துறை பொலிஸாருக்கோ அல்லது வட்டுக்கோட்டை பொலிஸாருக்கோ அறிவித்து எங்களை அவர்களிடம் ஒப்படைத்திருக்கலாம் தானே. கடற்படையினர் எதற்கு அந்த இடத்தில் இருக்கிறார்கள். அவர்களை அங்கிருந்து விரட்டுங்கள் என கதறினார்.
அவரது கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் ஐவர் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் கொலைக்கு பயன்படுத்திய கார் ஒன்று இரத்தக் கறைகளுடனும், கொட்டன்களுடனும் அராலி நொச்சிக்காட்டு பிள்ளையார் கோவிலுக்கு 150 மீற்றர்கள் தொலைவில் உள்ள பாவனையற்ற வீட்டுக்கு முன்னால் இருந்து மீட்கப்பட்டது.