வடக்கு கடல் மீது அதிக கரிசனை தென் இலங்கைக்கு மட்டுமல்ல உலகளாவிய சக்திகளுக்கும் ஏற்படத் தொடங்கியுள்ளது-பேராசிரியர் கணேசலிங்கம்

வடக்கு கடல் மீது அதிக கரிசனை தென் இலங்கைக்கு மட்டுமல்ல உலகளாவிய சக்திகளுக்கும் ஏற்படத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே இந்தியாவும் சீனாவும் போட்டி போட்டுக் கொண்டு வடகடலில் கவனத்தைக் குவித்துள்ளன. அதனை அடுத்து அமெரிக்கா ஜப்பான் போன்ற நாடுகளுடன் தற்போது அவுஸ்ரேலியாவும் ஈடுபட்டை அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. அவ்வளவுக்கு வடக்கு கடல் முக்கியத்துவம் பெற்றதாகவே விளங்குகிறது. ஆயுதப் போராட்டம் முழுவதும் கடலே முதன்மை பெற்றிருந்தது என்பது புரிந்து கொள்ளப்பட்ட விடயமாகும். தரை-கடல்-விமானப் படைப்பிரிவுகளைக் கொண்டதாகவே ஆயுதப் போராட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதன் வீழ்ச்சி உலக நாடுகளின் சொத்தாக வடக்கு கிழக்கு கடல் மட்டுமல்ல இலங்கைத் தீவின் கடல் உட்பட இந்துசமுத்திரத்தின் முழுமையும் உலக நாடுகளின் ஆதிக்கத்திற்கான போட்டிக்களமாக மாறியுள்ளது. ஆனால் தற்போது இந்திய மீனவர்களது அத்துமீறலுக்கு எதிராக வடக்கு மீனவர்கள் போராட்டம் தீவிரமடைய ஆரம்பித்துள்ளது. இதன் விளைவுகளை தேடுவது அவசியமானதாக உள்ளது.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியைக் கட்டுப்படுத்தாதுவிடின் 25.03.2024 முதல் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என தீவக கடற்றொழிலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வடக்கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீன்பிடிப் படகுகளை தடுத்து நிறுத்துமாறு வேலணைப் பிரதேச கடற்றொழிளாளர் சங்கங்களின் சமாசம் போராட்டத்தை நடாத்தியதுடன் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகத்திடம் மனுவொன்றை கையளித்துள்ளது. இவ்வாறு பல போராட்டங்களையும் மனுக்களையும் இலங்கை இந்திய உயர்மட்ட அதிகாரிகளிடம் கையளித்தோம். ஆனால் எமது கோரிக்கை தொடர்பில் இந்திய அரச உயர்மட்டம் இதுவரை சாதகமான பதில் எதனையும் வழங்கவில்லை. தற்போதும் மனுவை வழங்கியுள்ளோம். ஆகவே எமது கோரிக்கை அடங்கிய மனு தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு இந்தியத் துணைத்தூதரிடம் கோரியுள்ளோம். மனுவுக்கான பதிலை 25 திகதி முன்னர் வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம்; என அவர்களது அறிக்கையில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

ஈழத்தமிழ் மீனவர்களது கோரிக்கையும் போராட்டமும் நீண்ட காலமாக நிகழ்ந்துவருகிறது. அதற்கு செவிசாய்க்க வேண்டிய தரப்பான இந்தியா மௌனமாக நகர்கிறது. பேச்சுக்கள் மூலம் தீர்க்க முயல்வதாக கூறுவதுடன் கடந்து செல்கிறது. முன்னாள் இந்தியத் தூதுவர் துணைத்தூதுவர் ஆகியோரிடம் அத்தகைய நம்பிக்கையூட்டும் உரையாடலை மேற்கொள்வதற்காக பல மனுக்கள் ஈழத்து மீனவர் அமைப்புக்களால் முன்வைக்கப்பட்டது. ஆனால் நடைமுறையில் எத்தகைய மாற்றமும் நிகழவில்லை. அடிப்படையில் ஈழத்து மீனவர்களது வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதற்காகவே அவர்கள் போராடுகின்றனர். இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகளால் கடல் வளங்கள் மட்டுமல்ல மீனவர்களது சொத்துக்களும் அழிக்கப்படுகிறது. அதிலிருந்து ஈழத்தமிழ் மீனவர்கள் மீளமுடியாதுள்ளமை கவனத்திற்குரியது. மிக நீண்டகாலம் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை பேணமுடியாது காணப்படுகின்றனர். இத்தபைய துயரத்தை இந்திய தூதரகங்கள் மட்டமல்ல இந்திய வெளியுறவு அமைச்சும் கவனத்தில் கொள்வதற்கு தயாரில்லாத நிலை காணப்படுகிறது. ஒட்டுமொத்தமாகவே இந்திய அரசு ஈழத்தமிழரது அடிப்படைத் தேவைகளிலோ அரசியல் பிரச்சினைகளிலோ கவனம் கொள்ளாது செயல்படுகிறது. இதனை விரிவாக நோக்குவது பொருத்தப்பாடுடையதாகும்.

முதலாவது, இந்தியாவின் பிராந்திய அரசியலில் வகுத்துள்ள கொள்கை இலங்கைத்தீவை அதிகம் இலக்கு வைத்துள்ளது. காரணம் சீனாவின் பிரசன்னம் மட்டுமன்றி ஏனைய பிராந்திய நாடுகளை இழந்தாலும் இலங்கைத்தீவு இழந்துவிடக் கூடாது என இந்தியா கருதுகிறது. பிரிட்டிஷ்-இந்தியாவின் காலப்பகுதி போன்று இந்தியாவின் அணுகுமுறை உள்ளது. அதிலும் ஈழத்தமிழர்-புதுடில்லி உறவு 1991 களுக்கு பின்னர் அதிக கசப்புள்ளதால் தென் இலங்கையுடன் உறவை அதிகம் பராமரிக்க முயலுகிறது. இந்தியாவின் SAGAR (Security and Growth for All in the Region)   திட்டம் தென்னாசியாவில் ஏனைய நாடுகளுக்கு பொருந்துகிறதோ இல்லையோ இலங்கைத்தீவுக்கு பொருத்தமாக அமைய வேண்டும் என இந்தியா கருதுகிறது. வங்களாதேஷ், மாலைதீவு, பூட்டான், மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளைவிட இலங்கைத் தீவில் அதிகமான கவனத்தை இந்தியா கொண்டுள்ளது. குறிப்பாக பொருளாதார உதவியிலும் கடன் வழங்குவதிலும் சர்வதேச நாணய நிதியத்திற்கு இலங்கைக்காக பரிந்து சிபார்சு செய்வதிலும் இந்தியா கவனம் கொள்கிறது. இலங்கை எந்த நாட்டுடன் உறவு கொண்டிருந்தாலும் இந்தியாவுக்கு முரணாக செயல்பட்டாலும் இந்தியா இலங்கைத்தீவுடன் சேர்ந்து இயங்கு முனைகிறது. தென் இலங்கை –புதடில்லி உறவு பலமானதாகவே எப்போதுமுள்ளது. இந்திராகாந்தி காலத்தை தவிர ஏனைய ஆட்சியாளர் காலம் முழுவதும் இரு நாட்டு உறவு நட்புறவாகவே காணப்படுகிறது.

இரண்டாவது, இந்திய மீனவர்களது அத்துமீறலுக்கு அடிப்படையில் தமிழக பெரு முதலாளிகளே காரணமாக உள்ளனர். ஏறக்குறைய இலங்கை-இந்திய கடலில் இயங்கும் அனேக இழுவைப்படகுகளுக்கு உரிமையாளர்களாக மத்திய அமைச்சர்கள் மாநில அமைச்சர்கள் சட்டசபை உறுப்பினர்கள் காணப்படுகின்றனர். அல்லது அத்தகைய அமைச்சர்களையும் ஆட்சியாளர்களையும் செல்வாக்குச் செலுத்தும் பொருளாதார பலமுடையவர்களாகக் காணப்படுகின்றனர். அதனால் அவர்கள் ஈழத்தமிழரது கோரிக்கைகளை கண்டுகொள்ளாத போக்கு தவிர்க்க முடியாததாகவே தெரிகிறது. ஈழத்தமிழ் மீனவர்களைப் போன்று பலவீனமான வாழ்வாதாரத்திற்கு போராடுகின்ற மீனவர்களாக இந்திய மீனவர்கள் இல்லை. இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் அனேகமானவர்கள் அத்தகைய முதலாளிகளுக்கு கீழ் மீன்பிடியை தொழிலாக மட்டுமே கொள்பவர்களாக காணப்படகின்றனர். அவர்கள் மீனவத் தொழிலை கூலித் தொழிலாக கொண்டவர்கள். அவர்களை இயக்கும் முதலாளிகளே இரு நாட்டு மீனவர்களது பிரச்சினையை தீர்க்கவிடாது தடுக்கின்றனர். காரணம் அத்தகைய முதலாளிகளது பொருளாதார வாய்ப்புக்கள் காணாமல் போய்விடும் என்பதாகும். ஏறக்குறைய மன்னார் பிரதேசத்திலிருந்து திருகோணமலை வரையும் மீன்வளம் நிறைந்த பிரதேசமாகும். அதிலும் மன்னார் தீவு உட்பட்ட பகுதி அதிக மீன் வளமும் பெருக்கமும் கொண்டுள்ள கடலாகும்.

மூன்றாவது, இந்திய அரசின் இலங்கை பொறுத்த கொள்கையை வகுப்பவர்கள் அமைச்சர்களும் அதன் செயலாளர்களும் அதிக முக்கியத்தவம் பெறுகின்றனர். இந்தியப் புலனாய்வத் துறையின் கள யதார்த்தத்தைக் கொண்டு முடிபுகளை எடுப்பவர்களாக அல்லது முடிபுகளை அரசியல் அதிகாரிகளுக்கு திட்டமிட்டு வழங்குபவர்களாக வெளியுறவுச் சேவையாளர்களும் (IFS), நிர்வாகச் சேவையிலுள்ளவர்களும் (IAS) காணப்படுகின்றனர். அவர்கள் எடுக்கு முடிபுகளிலேயே அரசாங்கம் தீர்மானங்களை மேற்கொள்கிறது. இந்திய சேவைத்துறையில் புரட்சிகரமான தீர்மானங்களுக்கோ முடிபுகளுக்கோ வாய்ப்பு இல்லை என்றே கூறலாம். அதனால் மரபார்ந்த முடிபுகளில் தங்கியிருப்பதுடன் முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களுக்குள் கட்டுப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும். அதனால் ஈழத்தமிழ் மீனவரது பிணக்கு நீடிப்பதற்கான வாய்ப்புக்களே அதிகமாக உள்ளது. எவ்வாறு அரசியல் பிரச்சினைக்கு தீர்வின்றி ஈழத்தமிழர் உள்ளனரோ அவ்வாறே மீனவர் பிரச்சினையும் காணப்படுகிறது. ஒரு மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாத சக்திகள் எவ்வாறு இனப்பிரச்சினைக்கு தீர்வை அடைவார்கள் என்பது பிரதான கேள்வியாகும்.

நான்காவது, இலங்கை பொறுத்து இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையானது இலங்கையின் இறைமை யைப் பாதுகாப்பதும் ஈழத்தமிழரது கௌரவமான இருப்பினை பேணுவதாகவுமே உள்ளது. இது நரேந்திர மோடி ஆட்சிக்குவந்த காலம் முதல் பயன்படுத்தும் இராஜதந்திரமாக உள்ளது. எனவே இதில் இலங்கையின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் முதன்மையாகக் கருதுகிறது. இரண்டவதாகவே ஈழத்தமிழரது கௌரவமான இருப்புப் பற்றி கவனம் கொள்கிறது. இலங்கையின் இறைமைக்கு முன்னால் ஈழத்தமிழரது கௌரவமான இருப்பை எதிர்பார்க்க முடியாது என்பது அடிப்படையானது. அதனை இந்தியக் கொள்கைவகுப்பாளர்கள் ஏற்று நடைமுறைக்குள் கொண்டுவராத வரையும் எத்தகைய தீர்வையும் நோக்கி இலங்கைத் தீவு நகராது. அத்தகைய தீர்வகள் எதனையும் இந்தியாவிடமிருந்து சமகாலத்தில் எதிர்பார்க்க முடியாது. வேறு நாடுகளை நோக்கி ஈழத்தமிழர் நகர வேண்டியது தவிர்க்க முடியாத தேவையாக மாறிவருகிறது. இது தென் இலங்கையினதும் இந்தியாவினதும் ஈழத்தமிழர் பொறுத்த அணுகுமுறையாக அமைந்துள்ளது. அதாவது இந்தியாவும்-தென் இலங்கையும் ஈழத்தமிழரை ஒரே அளவீட்டுக்குள்ளாலேயே அளவீடு செய்கிறது. உலக வரலாறு முழுவதும் ஒடுக்கப்பட்ட அரசற்ற தேசியங்கள் ஏதோ ஒரு சர்வதேச சக்தியுடன் ஒன்றிணைந்தே விடுதலையை சாத்தியப்படுத்தியுள்ளன. அல்லது குறைந்தபட்சம் அதிகாரபகிர்வின் அடிப்படையில் சமஷ;டிக்கான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.

ஐந்தாவது, தென் இலங்கை ஈழத்தமிழ் மீனவர்களது பிரச்சினைக்குரிய தீர்வை பெற்றுக் கொடுக்கும் என்ற எதிர்பார்க்கை போலியானது. தென் இலங்கையைப் பொறுத்தவரை இந்திய-ஈழத்தமிழ் மீனவர் முரண்பாட்டை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளையே அதிகம் ஏற்படுத்த விரும்பும். அதனையே கடந்த காலம் முழுவதும் தென் இலங்கை ஏற்படுத்தியிருந்தது. இந்திய-ஈழத்தமிழ் உறவு பலமடைவது தென் இலங்கைக்கு எப்போதும் ஆபத்தானதே. இதனை வரலாற்றுக் காலம்முதல் மேற்கொண்டுவருகிறது. அதனால் முரண்பாட்டை தவிர்க்க முடியாது கூர்மைப்படுத்துவது அரசியலாக தென் இலங்கை கொண்டிருக்கும். இந்திய-ஈழத்தமிழ் மீனவர்களது பிரச்சினைக்கு சுமூகமான தீர்வென்றை நோக்கி தென் இலங்கை ஒரு போதும் செயல்படாது.

எனவே, இரு அரசுகளாலும் கைவிடப்பட்ட நிலையில் அதிக நெருக்கடியை எதிர் கொள்ளும் ஈழத்தமிழ் மீனவர்கள் இலகுவில் அரசுகளுக்குள்ளால் தீர்வை அடைவது கடினமானது என்பது தெளிவாகிறது. இந்தியா பொருளாதாரத்தில் அசுர வேகத்தில் வளர்ச்சியுறுகிறது. அதன் அடுத்த கட்டம் இராணுவ வளர்ச்சி. அதனை முன்கூட்டியே தென் இலங்கை கணிப்பிட்டுள்ளது. அதற்கு அமைவாக செயல்பட்டுவருகிறது. ஈழத்தமிழர்கள் கடலையும் குறிப்பாக பாக்குநீரிணையை கைவிட முடியாது. அதுவே ஈழத்தமிழரது வாழ்வும் வழிகாட்டியும். அதில் தமிழகத்தின் பங்கு தனித்துவமானது. ஆத்தகைய தமிழகத்துடன் மீனவர்சார் சிவில் தரப்புகளுக்குள்ளால் உரையாடுவதும் அணுகுவதும் அவசியமானது. அது தொடர்பில் தமிழக மீனவ அமைப்புக்கள் ஈழத்து மீனவ அமைப்புக்களை ஏற்கனவே பலதடவை அணுகியுள்ளன. தற்போதுவரை அத்தகைய அணுகல் இணைக்கப்படாது உள்ளது. அதனை பலமாக்குவது தனித்து மீனவர் பிரச்சினைக்கானது மட்டுமல்ல. ஈழத்தமிழரது நட்புச்சக்திகளுடன் உறவை பாதுகாப்பதாகவும் தேவையானதாகவும் அமைந்துள்ளது. காரணம் மீனவர்களது பிரச்சினையானது தனித்து வாழ்வாதாரத்துடன் முடிவதல்ல. அது கடலிலுள்ள ஈழத்தமிழரது இறைமையையும் உரிமையையும் சார்ந்தது. சர்வதேச கடல் சட்டங்களுக்குள்ளும் தென் இலங்கையின் கடல்சட்ட வரைபுகளுக்குள்ளும் இல்லாத கடல் உரிமையை ஈழத்தமிழர் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான தயார்படுத்தல்களில் மீனவ சங்கங்கள் மட்டுமல்ல ஏனைய தரப்புக்களும் அவர்களது போராட்டத்தில் இணைந்து செயல்பட வேண்டும். அவர்களது கோரிக்கையின் நியாயப்படுத்தன்மையை பலப்படுத்த வேண்டும்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

Recommended For You

About the Author: Editor Elukainews