இந்துக்களின் சிவராத்திரியை பகலில் நடத்துமாறு பொலிஸார் கூறுவதை போன்று பௌத்தர்களின் பொசன் தின நிகழ்வை பகலில் நடத்துமாறு பொலிஸாரினால் கூற முடியுமா என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போது மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரியை அனுஷ்டிக்க இந்துக்களுக்கு நீதிமன்றம் அனுமதியளித்தபோதும் பொலிஸார் அனுமதி வழங்க மறுத்தனர்.
வழிபாட்டுக்கு அனுமதித்தால் அங்குள்ள தொல்பொருட்கள் சேதமடையும் என்றால் அனுமதித்துவிட்டு அவற்றுக்கு சேதம் ஏற்படாமல் பொலிஸார் பார்த்திருக்க வேண்டும்.
அத்துடன் அங்கு சிவன் கோயிலே உள்ளது. எனவே தமது கோவிலை இந்துக்கள் சேதப்படுத்த மாட்டார்கள் .
இதன்போது குறுக்கிட்ட நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, இந்தப் பிரச்சினையை நீங்கள் பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்தபோது இரு மணித்தியாலங்களுக்குள் நாம் தீர்வு வழங்கினோம்.
எனவே ஏன் மறுபடியும் பேசுகின்றீர்கள்.நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட விடயங்களுக்கு பாராளுமன்றத்தின் ஊடாக தீர்வு காண முடியாது என்றார்.
மீண்டும் உரையாற்றிய சார்ள்ஸ் நிர்மலநாதன்,
அவ்வாறானதொரு பொலிஸ் அராஜகம் மீண்டும் நடக்கக்கூடாது என்பதற்காகவே நான் இங்கு பேசுகின்றேன் என்றார்.