வலி வடக்கில் விடுவிக்கப்பட்ட தமிழ் மக்களின் விவசாய காணிகளில் மக்களுடன் இணைந்து பாதுகாப்பு தரப்பினருடன் இணைந்து விவசாய நடவடிக்கைகளில் பங்களிப்பு செய்வதை ஏற்க முடியாது என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வலி வடக்கு பகுதியில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய உரை தொடர்பில் அவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் முதலமைச்சராக இருந்தபோது பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க இஸ்ரேல் நாட்டைப் போன்று ராணுவம் மக்களும் இணைந்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் கட்டமைப்பை ஒன்றை வடக்கில் ஏற்படுத்துவோம் என அன்று என்னிடம் கேட்டிருந்தார்.
நான் அதை நிராகரித்ததுடன் வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவரிடம் தெரிவித்த நிலையில் அவர் என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.
தற்போது ஜனாதிபதியாக வந்த நிலையில் வலி வடக்கில் ஒரு பகுதி மக்களின் விவசாயக் காணிகளை விடுவித்துவிட்டு விவசாய நடவடிக்கையில் இராணுவத்தை இணைத்து விவசாய நடவடிக்கையில் ஈடுபட வைப்பது என்பது தொடர்ந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளில் இராணுவ இருப்பை தக்க வைக்கும் செயற்பாடாகும்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்தை ஏற்க முடியாது விடுவிக்கப்பட்ட மக்களின் காணிகளில் மக்கள் சுதந்திரமாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் உதவி என்ற போர்வையில் தொடரவுள்ள ஆக்கிரமிப்பை ஏக்க முடியாது.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் வடக்கு கிழக்கில் இருக்கும் இராணுவத்தினரை முற்றாக வெளியேறுமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம் தற்போதும் அதே நிலைப்பாட்டில் உள்ளோம்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நான் ஒன்றை கூறுகிறேன் முதலில் வடக்கு கிழக்கு பகுதிகளில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்களின் காணிகளை முழுமையாக கையளியுங்கள். இராணுவத்தை முற்றாக வெளியேற்றுங்கள்.
ஆகவே விடுவிக்கப்பட்ட தமிழ் மக்களின் வளமான விவசாய நிலங்களுக்குள் உதவி என்ற போர்வையில் இராணுவ பிரசன்னத்தை அனுமதிக்க முடியாது தேவை ஏற்பட்டால் அது தொடர்பில் பின்னர் சிந்திப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.