இந்திய மீனவர்கள் கச்சதீவில் வலைகளை உலர விடலாம் என்ற விடயம் இருந்தது உண்மை எனவும் அது பின்னர் நீக்கப்பட்டு விட்டது என்றும், இதற்கு இந்தியாவின் சுயநலமே காரணம் என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் எம்.வி.சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தியாவில் தேர்தல் சூடு பிடித்துள்ளது. அந்தவகையில் இந்திய தமிழ்நாட்டு மக்களுடைய வாக்கு வங்கியை பலப்படுத்தல், இலங்கையில் இருந்து சீனாவின் உடைய ஆதிக்கத்தை குறைப்பதற்கும் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் இந்தியாவிற்கு சில தேவைகள் காணப்படுகின்றது. இந்த விடயங்கள் இரண்டையும் மையமாக வைத்துக் கொண்டு இன்றைய தேர்தல் பிரச்சாரத்தில் இந்திய அரசாங்கமானது ஒன்றுமே இல்லாத, எந்த பயன்பாட்டிற்கும் உகந்ததில்லாமல் இருக்கின்ற கச்சதீவு பிரச்சினையை தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கின்றார்கள்.
50 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற பேச்சுவார்த்தை மற்றும் இணக்கப்பாடு மூலம் கச்சதீவானது இலங்கைக்கு உரியது என்ற வகையில் வழங்கப்பட்டது. தற்போது தமது வாக்கு வங்கியை பலப்படுத்துவதற்காக, அங்கே கச்சதீவை மீண்டும் பெற்றுத் தரலாம் என்ற விடயத்தை சுட்டிக்காட்டி பிரச்சாரத்தில் வருகின்றனர். அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன ஒன்று இலங்கை சிறிய நாடு, மிரட்டி பறித்து விடலாம் என்ற எண்ணம். இரண்டாவது இதனை ஒரு மைய புள்ளியாக வைத்துக்கொண்டு இலங்கை அரசாங்கத்தை அடிபணிய வைத்து தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற தவறான எண்ணம்.
அருணாசல பிரதேசத்திலே பல இடங்களிலே சீனா தனது பெயர்களை கிராமங்களுக்கு சூட்டி வருகிறது. அதிலே ஒரு அங்குலத்தைக் கூட இவர்களால் மீளப்பெற முடியவில்லை. காரணம் சீனாவுடன் போராடுவதற்கு அல்லது எதிர்ப்பதற்கு திராணியற்ற ஒரு நாடாக இந்தியா காணப்படுகிறது.
கச்சதீவு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு இலங்கையை அழைத்த இந்தியா தந்திரோபாயமாக தனது காரியத்தை சாதித்துக் கொண்டது. முதலாவதாக இந்திய – இலங்கை கடல் எல்லை பரப்பிலே கூடுதலாக ஒரு பகுதியை இந்தியா பெற்றுக் கொண்டது. இரண்டாவதாக இலங்கை மீனவர்கள் – இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கின்ற, கன்னியாகுமரிக்கு அருகே இருக்கின்ற fish bank இனையும் தம்வசம் எடுத்து மீன் வளத்தையும் பெற்றுக் கொண்டது.
மூன்றாவது, கச்சதீவை இலங்கையிடமிருந்து எடுத்துக் கொண்டால் அதிலே இருக்கின்ற இராணுவமோ அல்லது கடற்படையோ தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்க போகிறது. அவர்கள் இருந்துவிட்டால் கண்டிப்பாக யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிலே இருக்கின்ற தமிழர்களுக்கும் இடையேயான உறவு பாலம் வலுப்பெற்று அவர்களது உறவு மேலும் மேலும் வலுவடைய வாய்ப்பிருக்கின்றது. இது பிற்காலத்தில் இந்தியாவிற்கு பெரிய ஒரு இடர்பாடாக இருக்கும் என்ற கள்ளத்தனமான உள்நோக்கத்தையும் வைத்துக்கொண்டு தாங்கள் இலங்கைக்கு விட்டுக் கொடுப்பது போல ஒரு பாசாங்கை செய்துவிட்டு அந்த பிரச்சனையிலிருந்து கைநழுவி சென்று விட்டார்கள்.
கச்சதீவை இலங்கைக்கு கொடுத்துவிட்டால் அதிலே இருக்கப்போவது சிங்கள இராணுவம் அல்லது சிங்கள கடற்படை. சிங்கள கடற்படை இருந்தால் தமிழ்நாட்டு தமிழர்களதும் யாழ்ப்பாண தமிழர்களதும் தொடர்பை கண்காணிக்க அல்லது அதை கட்டுப்படுத்த முடியும் என்ற கள்ள நோக்கத்திலே இந்தியா இந்த பேச்சுவார்த்தை மேசைக்கு வலுக்கட்டாயமாக இழுத்து இப்படி ஒரு இணக்கப்பாட்டை செய்திருந்தது.
அவர்கள் சொல்வது போல கச்சதீவுக்கு இந்திய மீனவர்கள் சென்று வலைகளை உலர்த்தலாம் என்று கூறப்பட்டது. நேருஜீ, இந்திரா காந்தி காலத்திலே அந்த சரத்தும் எடுக்கப்பட்டு விட்டது. இப்போது இருக்கின்ற சரத்தை பொறுத்தவரையிலே இந்திய மீனவர்கள் அந்த கடற்பரப்பில் வலைகளை கூட உலர்த்த முடியாது என்ற நிலைப்பாடு தான் இருக்கின்றது. இப்படி இருக்கும்போது அரசியல் தேவைக்காகவும் நாட்டின் பாதுகாப்பு தேவைக்காகவும் கச்சதீவை ஒரு மையப் புள்ளியாக எடுத்து அதிலிருந்து பிரச்சனையை ஆரம்பித்து இலங்கையை அடிபணிய வைத்து தமக்கு தேவையான வேலைகளை செய்வதற்கு முயற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றது.
இந்திய தமிழக மீனவர்களின் நலன் கருதியோ அல்லது கச்சதீவை தாங்கள் மீளப் பெறும் நோக்கிலேயோ இந்திய அரசாங்கம் இந்த பிரச்சினையை கையில் எடுக்கவில்லை. கண்டிப்பாக இலங்கைக்கு அழுத்தத்தை கொடுத்து தங்களுடைய காரியத்தை செய்வதற்கு தான் முயற்சிக்கிறதே தவிர எந்த காலத்திலும் கச்சதீவை இந்திய அரசாங்கம் மீளப்பெறும் என நான் நினைக்கவில்லை என்றார்.